உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, May 08, 2004
# 153 மதியானப் போது
மதியானப் போது
கடும் கோடை நேற்று
உனைக் கண்ட நெஞ்சம்
குளிர் வாடைக் காற்று
என் பார்வைச் சூட்டில்
உன் தேகம் இளக
கண்மூடித் திறந்தேன்
நீ போனதெங்கே?
(மதியானப்...
இருபது ரோஜா இதழ்களை கோர்த்தால்
இடையிலே மின்னும் முத்தாரம் சேர்த்தால்
அதுகூட இல்லை புன்னகைக்கு ஈடாய்
உனைத்தேடி நானும் படுகிறேன் பாடாய்
உனைக் கண்ட நெஞ்சம்
குளிர் வாடைக் காற்று
கண்மூடித் திறந்தேன்
நீ போனதெங்கே?
பகலோடு ராவும் செய்கின்ற பேரம்
பொழுசாயும் நேரம் உன் கன்னமாகும்
கனுக்காலின் மேலே உறவாடத்தானே
கொலுசோடு மணியும் கைகோர்த்து சினுங்கும்
உனைக் கண்ட நெஞ்சம்
குளிர் வாடைக் காற்று
# 152 இருதய மாற்றம்
இருதய மாற்றம்
எனையறியாமல் எங்கோ இழுக்கிறது
நிலை புரியாமல் வழி தெரியாமல் பாதை விரிகிறது
மூலம் தெரியா அருவி போல காதல் உதிக்கிறது
ஆழம் புரியா ஆற்றில் நீந்தும் அனுபவம் கொடுக்கிறது
ஆதாம் ஏவால் நனைந்த நதிக்கு நீண்ட வரலாரு
மிதந்திடுவாயோ மூழ்கிடுவாயோ நீ ஒரு கை பாரு
சரித்திர காதல் கதைகள் எல்லாம் சாவில் முடிந்தாலும்
நினைவுக்கல்லாய் நிரந்திரமாய் நம் மனதில் வாழ்வதிலே
காதலுக்கென்றும் வெற்றி உண்டு காதலர் தோற்றாலும்
குழாயில் குளித்துப் பழகிய நெஞ்சில் காதல் குற்றாலம்
# 151 நாடோடிக் கலைஞன்
நாடோடிக் கலைஞன் நானே
நாளும் வலம்வருவேனே
பொதிசுமக்கும் வண்டிமேலே
பயணங்கள் இலவசம்
அரசன்போல ஆசனம்
அசுரவேக அம்பாரி
தென்றல் வந்து முடிகலைக்கும்
கைகுலுக்கும் மரக்கிளையும்
மாநிலங்கள் பல கடந்தும்
பிறந்த மண்ணின் கலை மணக்கும்
அடையும் ஊரில் ரசிகர் கிடைத்தா
பாட்டுக் கூத்து பொறி தெறிக்கும்
திருவிழாக்காலம் வந்தா
தெருவெல்லாம் கலையரங்கம்
(நாடோடிக்...
வானம் எனக்கு கூடாரம்
கலை கொடுக்கும் ஆகாரம்
காற்று கொடுக்கும் விளம்பரம்
விசில் எனக்கு விமர்சனம்
எல்லையில்லா வீடெனது
தொல்லையில்லா பாடெனது
கூட்டம் களைஞ்சா வேறூரு
தூங்கும் நேரம் போய் சேரு
# 150 தேவை
களங்கமில்லா வானமாய்
அவளிருந்தால் போதுமே
கண்கவரும் கீழ்வானின்
அழகெல்லாம் தேவையில்லை
குயில் போன்ற குரல் வேண்டாம்
அழைத்தவுடன் வர வேண்டாம்
தன் மனதை தெளிவாக
அவள் உரைத்தால் போதுமே
வெளியுலகில் பறந்தாலும்
இல்லறமாய் இருந்தாலும்
அவள் திறமை எதில் இருக்கோ
அதைச் செய்தால் போதுமே
என் தேவை இத்தனையே
குறைந்தாலும் ஏற்றிடுவேன்
அவள் தேவை நான் என்றால்
என் தேவையை உதறிடுவேன்
# 149 உபகாரம்
என்னைப் புதைத்து
எண்ணைப் புதையல்
பொருளாதாரச் சந்தையிலே
அன்று அடிமைகள்
இன்று எரிபொருள்
தாய்நாட்டை தரைமட்டமாக்கி
மறு உயிர் தருவார்
எனக்கா தருவார்? இல்லை அவரே கொண்டார்
எரிகாட்டில் குளிர்காய்ந்தார்
தொழிற்சாலை புகைவளர்த்து
இடுகாட்டை சுவாசியுங்கள்
உங்கள் சுதந்திரம்
அங்குதான் அடைக்களம்
செய்திகள் வாசிப்பது
விண்மீன் கொடிபறக்கும்
கடவுளின் அரசாங்கம்
அன்று சொருகிய வாளை
இன்று உருவியதே உங்கள்
உபகாரம்
# 148 முற்றுகை இட்டது வானமடி
முற்றுகை இட்டது வானமடி
மூழ்கிடும் நிலையில் பூமியடி
சுற்று வட்டமும் சுவரெழுப்பி நான்
காத்து வந்தது காணலடி
(முற்றுகை...
இதைத்தான் காதல் என்று சொன்னார்
இழந்தால் சாதல் என்று சொன்னார்
விதைத்தால் சொந்தம் என்று சொன்னார்
துறந்தால் மோட்சம் என்று சொன்னார்
மலர்ந்த கண்கள் சொன்னது பொய் என்றான பின்
உண்மையே பேதமடி
தோல்வியில் கண்டேன் வெற்று நிலை
வெற்றியென கண்டாய் வேறொரு கை
வெற்றிடம் என்பது உச்சியடி
பற்றுதல் கொண்டது பூமியடி
விலைக்கு பேரம் போனதுன் காதல் அல்ல
உண்மை உண்மையடி
(முற்றுகை...
# 147 கேள்வி பதில்
ஆண்: ஒரு வரியில் பெளர்ணமியைப் பாடு பார்க்கலாம்
பெண்: இரு வார்த்தை போதுமே, "நிலவின் விசுவரூபம்"
ஆண்: விரசமென்பது?
பெண்: கற்பனையின் கற்பு விற்பனை
ஆண்: ஊடலென்பது?
பெண்: கூடலின் முகவுரை
ஆண்: நாணமென்பது?
பெண்: அடைகாத்த ஆசைகள் அம்பலமாவது
ஆண்: நட்பு?
பெண்: கடன்படுத்தாத சொந்தம், மன்னிக்கும் மனசாட்சி
ஆண்: களவு?
பெண்: பற்றாக்குறையின் பலவீனம், ஏற்ற தாழ்வின் விமர்சனம்
ஆண்: கற்பு?
பெண்: ஆண் ஆதிக்கக் கோட்பாடு
ஆண்: காதல்?
பெண்: ஈர்ப்பின் இலக்கணம், கவிதையின் உயிர்நாடி
ஆண்: திருமணம்?
பெண்: சமுதாய தற்காப்பு சாதனம், இனவிருக்தி ஆயுதம்
ஆண்: பிறப்பு?
பெண்: இயற்கையின் அன்பளிப்பு
ஆண்: வாழ்கை?
பெண்: நிர்ணயத்தின் நிழலாட்டம்
ஆண்: மரணம்?
பெண்: காலச்சுவடின் கடைசிப்படி
# 146 முறையீடு
அல்லா...
ஆவியாகும் முன்
அல்லாவிடம் ஒரு கேள்வி
முக்காடும் முகத்துணியும்
என் கைரேகை ஆனதென்ன?
முகமுடியும் முகமூடியும்
கனவானை கயவனாக்குமோ?
என் முகம் இனி மறைமுகம்
என் அணி என் பின்னனி
உனக்கு மண்டியிட்டேன்
அது குற்றமானது
அதற்கும் மண்டியிட்டேன்
அது துக்கமானது
வானைப் பார்த்து முறையிட்டேன்
எதிரொலியாய் மரண ஓலம்
# 145 வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
மலர் மண்ணோடு வாழ்ந்தால்
முடிசூடல் எப்போது?
உரையோடு வாள் போல
எழுதுகோல் தாள் போல
உறவாட இப்போது...
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
சிந்தை யாவும் செந்தீயில் வேகும்
மந்தை போல உன் பின்னே போகும்
பொங்கிப் பெருகிப் படரும் பிரவாகம்
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
கட்டிக்காக்க காரணம் ஏது
கொண்டவன் நான் என்று கை சேர்ந்த போது?
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
மலருக்கு பன்னீர்
வேருக்கு வெண்ணீர்
முன்னுக்கு முறனாய்
ஏனின்னும் கண்ணீர்?
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
மூடமை தீர
முறையீடு ஏற்ப்பாய்
சாதகமாக
ஒரு பார்வை பூப்பாய்
கட்டிக்காக்க காரணம் ஏது
கொண்டவன் நான் என்று கை சேர்ந்த போது?
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
# 144 வாகன வேகத்தில
வாகன வேகத்தில
விடுபட்ட உள்ளமிது
வழியனுப்பும் மரமெல்லாம்
உதிர்த்துவிட்ட எண்ணமிது
மயில் கல்லு எத்தனையோ
மணிக்கணக்கா போகையில
மனசுமட்டும் உன்னை சுத்த
பின் தங்கும் என் நெனப்பு
புகைமூட்டம் இல்லாத
புகைப்படமாய் நடந்ததெல்லாம்
பனிக்கல்லாய் ஒறைஞ்சிருக்கும்
பசுமையா நெஞ்சுக்குள்ள
சாட்டைக்கயிறப் போல
சொழட்டிவிடும் உஞ்சிரிப்பு
பம்பரமாய் ஆட்டுதடி
பாவி மகன் சிந்தனையை
மின்சாரம் போயிருந்த
மச்சுவீட்டு இருட்டிலே
ஊர்கதை பேசையில
உள்ளத்தில பதுங்குனியே
சின்ன சின்ன அசைவுல
சோறு பரிமாரயில
எலையிலே விழுமுன்னே
நெஞ்செல்லாம் நெறைஞ்சதடி
கண் நெறைய ஆசை வந்தும்
வேலை வசதி இல்லை
கல்யாண காலம் வந்து
வேறொருத்தன் கூட நீயும்
படிதாண்டி போனப்பவே
இடிதாங்கி ஆனேம்புள்ளை
காலம் கடந்து வாரேன்
குடியிருந்த கிராமத்துக்கு
ஊலைக்காத்து வீசுதடி
ஓங்கதையைப் பேசுதடி
சேத்து மண்ணு பூரா இப்போ
தார் உறுகி பொங்குதடி
சேத்து வெச்ச பாசம் கண்ணை
ஊத்தெடுக்கப் பாக்குதடி
# 143 தெரு ஓரத்திலே
தெரு ஓரத்திலே
ஒரு ஈர இரவினை நோக்கி
நடந்தேன்
உன் நினைவுதான்
நிழல் போல் தொடர்கிறது
சாலை முழுதும் மனிதர்கள் இருந்தும்
நீ இல்லாது தனிமைதான் நிலைக்கிறது
உணர்வது நாடல் என்பேன்
உதித்தது பாடல் என்பேன்
உனை எண்ணி பல முறை நான்
உறங்காது விழித்திருப்பேன்
நாளை இதே நேரம் சந்திப்போம் கடற்கரையோரம்
என்று நீ சொன்னது இசைபோல் ஒலிக்கிறது
பார்வை தரும் போதை உடல் மீது உறசும்போது
தாழென்ன கதவுமே உடைகிறது
காப்பதும் சுகம் என்பேன்
கிடைத்தது வரம் என்பேன்
எனைச் சுற்றி இயக்கமெல்லாம்
உணராது உலவிடுவேன்
Friday, May 07, 2004
# 142 உதயமாகும் வேளையில்
உதயமாகும் வேளையில் இருளும் ஏனம்மா?
என் இதயவாசல் திறந்த பின்னும் தனிமைக்கோலமா?
வானம் பார்க்கிறேன் ஏன் மழையை மறுக்கிறாய்? - என்
வாசல் காட்டினேன் ஏன் வருகை தவிற்க்கிறாய்
(உதயமாகும்...
வீணையை மீட்டினேன் அதில் நாதமாய் வருகிறாய்
ஓவியம் தீட்டினேன் அதில் உன் முகம் காட்டினாய்
கண்கள் மூடினால் என்
கனவில் தெரிகிறாய்
கனவை மூடினால் என்
நினைவில் நிறைகிறாய்
அமைதியைத் தேடும் நெஞ்சின் ஆழத்தில் துடிக்கிறாய்
என் அனுமதி இன்றியே எனை பறிமுதல் செய்கிறாய்
(உதயமாகும்...
நினைவுகள் அலைகளா உனக்கு பெளர்ணமி விழிகளா?
உணர்ச்சிகள் குழிகளா எனை செதுக்கிடும் உளிகளா?
நினைவுச் சோலையில் ஏன் ஞாபகார்த்தமாய்
உறைந்து கிடக்கிறாய் நீ வடிவம் வார்த்தையாய்?
கொதித்திடும் நெருப்பில் நீங்கிட காதல் நீராவியா?
என் ஒருவனை மட்டும் வாட்டும் காதல் நிரபராதியா?
(உதயமாகும்...
# 141 நவீன நோய்
சோறும்,குழம்பும்,காயும்,கறியும்
சமைத்து தின்றது அந்த நாள்
இனிமேல் அது சாத்தியமா?
முயன்றவனும் பைத்தியமா?
செயற்கைச் சங்கிலி இழுக்கும் விலங்கினம்
ஆனோமே நாமும்
அங்காடியில் வாங்கி வந்து
அவசரமாய் உண்ணுகிறோம்
அட்டைப் பைகள் அரவனைத்த அறுஞ்சுவை உணவுவகை
உடலுக்குள்ளே இறங்கியதால் உண்டான கெடுதல் என்ன?
ஆராய்ச்சி ஆகுமா? அரசாங்கம் செய்யுமா?
ஆராய்ச்சி ஆகுமா? அதிலென்ன லாபமா?
முன்னேற்ற பாதை தேடி முட்டிமோதிப் போய்
வந்தாச்சு உப்பு, சக்கரை, பித்தம் மற்றும் ரத்த நோய்
தீர்க்கமாய் குனமடைந்திடவே
ஊர் வகை செய்திடவில்லை
வேகமாய் வாழ்கை சுழல்வதில்
ஓய்வில்லை
எல்லையில்லா தொல்லைகள் கண்டு
வில்லைகளாய் மாத்திரை இன்று
விரதமாய்த் தின்னல் உண்டு உணர்வாரோ?
இதுவரை ஆதார நோய்கள் வந்தும்
இதுவரை நோய் தீர்க்க செய்வாரேது?
ஆராய்ச்சி நடத்தக்காணோம்
அதிலென்ன லாபம் தேரும்?
# 140 வேறொரு விலாசத்தில்
வேறொரு விலாசத்தில்
உன் மனம் உரிமை கொண்டாடும்
பிறர் தோட்டத்து கனி தொடும்தூரத்தில்
புரிகின்றது எல்லை தெரிகின்றது
நதியும் நிலவில் குளிரும்
தப்பேது கூறு
(வேறொரு...
நான் உன்னை விரும்பும் காரணம் உலகறியாது
சூழல் மறந்து சிரிக்கின்றதை
ஆணின் சமமாய் நடக்கின்றதை
உணர்ச்சிகள் வெளிப்படை
அகம் புரம் ஒரே நிலை
உடன் பணிபுரியும் நான் அலைமோதினேன்
(வேறொரு...
ஆனவமே அறியா
தோரணையை ரசித்தேன்
எளியவரை நினைக்கும்
அனுசரனை மேலும் சொல்லப்போனால்
உன்னில் ஆகாதது என்று சொல்லப்போனால்
நீ வேறொருவன் மடியினில்,
பிடியினில், உறவினில், உயிரினில் சேர்வதைத்தானே வெறுக்கிறேன்
(வேறொரு...
# 139 முகம் பார்த்திட
முகம் பார்த்திட நதி நோக்கும் மதி
மதி பார்த்ததும் நதி குளிர்கின்றதே
இது இயல்பானதே
மதியின் தேவை பிரதிபளிப்பாக
நதி நெஞ்சில் அது அன்பளிப்பாக
நிகழ்வுக்கும் விளைவுக்கும் இடையே...
விதி வரைவதே விபரீதம்
விளங்கிடாத ஓர் தீர்மானம்
கவனம் தவறும் கனப்பொழுதிலும்
காட்சி மாற்றிடும் ஒரு மாயை
(முகம்...
ஆதரவென உள்ளம் தேடிடுதே ஒரு துளி நம்பிக்கை
மேலொருவன் நம்மைக் காப்பது போன்ற சிந்திப்பை
மதமா துணை சுயபலமா? தெரிவதனால் சுமை குறைவா?
புரிந்திட பலனென்ன புலப்படுமா?
ஞானமே வெறுமை என்றால் யார் தேடுவார்?
உறவு உணர்வுக்கு வறுமை
அது உன்னில் உனைக் குறைக்கும் திறமை
உன்னை நீங்காது தனிமை
இதுதான் உண்மை நிலைமை
யார் தோன்றிட யார் மறைகிறார்?
யாரோ இயற்றிட யாரோ இயங்கிட?
வாழ்வின் வரைபடம் யார் அறிவார்?
(முகம்...
Thursday, May 06, 2004
# 138 துணைவியே
உதிராத பூவை சிதராமல் கோதி உறவாடும் தென்றல் மென்மை
உனைக் கண்ட நெஞ்சில் உருவானதென்ன உனைப் போல இல்லை பெண்மை
உன் அருமை பேசிடவே உவமைகள் ஏழையடி
என் வாழ்வின் வெற்றியெலாம் நீ சகித்த இடிகளடி
உன் ஆழம் நீ அறிந்த உள்ளார்ந்த பெருமிதம்,
இது என்ன பெரிது என்ற அனுபவ நிதானம்,
சோதனையே வாழ்க்கையெனும் ரகசியம் அறிந்தும்
சிரித்திட சந்தர்ப்பம் தேடும் சூட்சமம்
சுவைகளைவிட சுமைகளையே அதிகம் தந்தும்
நிறைகுடமாய் எனை நடத்தும் புனிதமே உனைப் போற்றி
அன்றாடம் இதய மேட்டில்
ஆசை வரிகள் ஆயிரம் ஆயிரம்
வாய்பேசாவிடினும் இவ்வரிகளை
விழி கசிந்துவிடும் வாங்கிக்கொள்
# 137 கொடும்பாவி
வெற்றிலையிலும் வெள்ளைச் சாயம்
சிகப்பு சிந்திப் போனது
கறுப்பு மண்ணில் வெள்ளை சேர்ந்தும்
இதே தீர்ப்பு ஆனது
வெள்ளைக்குள்ளே ரத்த தாகம்
வைத்த தேவன் சதியிலே
வெள்ளைக் கொடியின் சமரசமும்
கறுப்புக் கொடியின் கண்டனமும்
நிலைமாறிப் போனதே
தென்னவர்கள் விதியிலே
ஆற்பறிக்கத்தான் வைத்தாயோ
ஆப்பிரிக்கா தேசத்தை?
நிற வெறிக்கு உன் அவதாரம்
எங்கே சொல் நீலகண்டனே!
வியர்வை சிந்தி வனம் வளர்த்தும்
முட்களே முளைத்தன
பிற நாடுகள் புறக்கணிக்க
பினங்களே குவிந்தன
நிறங்களின் சதுரங்கம்
ஒரு பக்கம் சார்ந்ததே
இருதரப்பிலும் வெள்ளாட்ச்சி
இறப்பதென்னவோ கறுப்புத்தான்
வேளி மேய்ந்த பயிரிலே
மாய்ந்த மனிதாபிமானம்
மண்டெலாவின் மான்பிலே
உயிர்பித்தது ஓரளவு
சுற்றுலகம் கைகட்டி நிற்பதனால்
சூரையாடல் இன்னும் நடக்கிறது
அயல் நாடுகள் வந்து குளிர்காய
ஒரு கண்டமே கொடும்பாவி எரிகிறது
வறுமைக் கோடு
இவர் வாழ்க்கைப்பாடு
இங்கு வயோதிகம் காண்பது
வெள்ளையர் மட்டுமே
சிகையில் கூட வெள்ளை சேர்க்கா
வைராக்கியமாய் இருக்குமோ?
நிறங்கள் மறைந்தால் வெள்ளை
இது நியதி
மனித நிறங்களும் இதே கதியோ?
# 136 கறுமைக் கவிதை
வெண்தாள் போன்ற வெறுமையில் கறுமைக் கவிதை அவளே
வண்ணமாய் வானவில் வளைய பொழியும் மழைமேகம் அவளே
வெறுமையின் நிறம் வெண்மை, இனிக்கும் கறும்புத் தோல் அவளே
வெளிச்சம் நறைத்து ஞானம் கொண்ட கறுமைப் பதுமை அவளே
நான் படித்த தமிழின் நிறம் கறுப்பு
சிந்தனையில் கண்மூட வரும் கறுப்பு
காணும் கனவெல்லாம் கண் நிறைய
எல்லைக் கோடாகும் மை அவளே
நிஜத்தை அரிதாரம் பூசிடலாம்
நிழலின் நிறம்கொண்ட மெய் அவளே
விண்மீண்களை மிளிர வைக்கும் வெளி கறுப்பு
சூரியகாந்தியின் விழி கறுப்பு
சூரியன் குடித்திடும் உடல் கறுப்பு
இளரத்தம் பயிரிட்ட முடி கறுப்பு
இயக்கத்தின் அடிப்படை நிலை கறுப்பு
எரிந்தபின் எல்லாமும் நிறம் கறுப்பு
# 135 சொந்த பந்தம்
உறவுக்கு ஆயிரம் தேவைகள் உண்டு
காதல் ஒரு பகுதிதான்
உரிமைக்கு ஆயிரம் தகுதிகள் உண்டு
சொந்தம் ஒரு பகுதிதான்
கனவுகளாலே கட்டிய கோட்டை
கலைந்துவிடும் பல காரணத்தால்
கொடுக்கல் வாங்கல் வரைமுறையில்
இடுக்கண் களைய ஆளில்லை
துன்பம், தோல்வி தீண்டும்போது
தங்குவதா உன் உறவு?
செல்வம் வந்து சேரும் நேரம்
மாறுவதா உன் உறவு?
வியாதிகளுக்கு தடுப்பூசி
உறவுக்கேது நீ யோசி
உறவின்றி நீ தேடிய சொந்தம்
நட்பே என்றும் உயர்ந்த பந்தம்
# 134 பிறியாவிடை
விடியலில் ஒன்றும் மாற்றமில்லை
காலம் கடமையை விடவில்லை
வாசலில் மடித்த செய்தித்தாள்,
கதவருகே உன் கறுப்புக்குடை,
காணாதிருப்பது உன்னைத்தான்
எங்கே எங்கே என் கண்மணி?
காலணிகூட வைத்த இடத்தில்
வைத்தபடி இருக்கிறது
குழந்தை உறங்கும் சீலைத் தொட்டில்
உன் அரவம் தேடிச் சினுங்கிடுது
என்னைச் சுற்றி இயக்கமெல்லாம்
என்றும்போல நடக்கிறது
நீயில்லாத இல்லம் மட்டும்
வெறிச்சோடிக் கிடக்கிறது
எங்கே எங்கே என் கண்மணி?
# 133 திரைகடலோடி
திரைகடலோடி திரவியம் தேடித்
தீர்ந்ததடி சில காலம்
உறவுக்குத் தேவை உறுதுணையென்று
தெரிந்ததடி இந்நேரம்
இரவு பகலாய்
இடையே பல நாள்
சுமந்தேன் காதல் சிலுவை
சிறகு நனைந்தும் உயரத் துடிக்கும்
சுதந்திர காலப் பறவை
இனி என் வானில் கார்மேகத்தை
அனுமதிக்க மாட்டேன்
அமவாசைச் சந்திரனையும்
அனைய விடமாட்டேன்
# 132 இளமுல்லைப் பூவே
இளமுல்லைப் பூவே
எனை வென்ற பூவே
நிகழும் கனாவே
விளங்கா வினாவே
மடிமீது வந்து
தவழும் நிலாவே
இளமுல்லைப் பூவே
எனை வென்ற பூவே
மன்மதனின் தோட்டம் விதவிதமாய்ப் பூத்தும்
கதிர் உன்னை மட்டும் அடையாளம் பார்க்கும்
கடிகார முள்ளும் உனைக் கண்டு பூக்கும்
கதிராடை உன்னால் புது கர்வம் காட்டும்
மடிமீது வந்து
தவழும் நிலாவே
இளமுல்லைப் பூவே
எனை வென்ற பூவே
தேவர்களின் பின்னே ஒளி வளையம் போலே
என் பார்வைக்கென்றும் உன்னுருவம் பெண்ணே
அதரத்தைப் பார்த்து உதிரத்தில் வேகம்
என் நெஞ்சும் கொஞ்சம் பலவீனம் ஆகும்
நிகழும் கனாவே
விளங்கா வினாவே
இளமுல்லைப் பூவே
எனை வென்ற பூவே
Wednesday, May 05, 2004
# 131 உறவு ரத்து
வாக்குவாத கோபம்தானா
நீதிமன்றம் சேர்த்தது?
உன்னைச் சார்ந்தும் என்னைச் சார்ந்தும்
சொந்தம் ரெண்டாய் ஆனது
(வாக்குவாத...
பேச்சுவாக்கில் சொன்ன சொற்கள்
பிரலயமாக வெடித்ததே
நீயும் வெல்ல நானும் வெல்ல
நாம்தானே தோற்றதே
உறவிருந்தும் தனித்தனியே வேகிறோம்
உடன்கட்டை ஏறி உறவைத்தான் எரிக்கிறோம்
எனது பக்கம் தவறுதான் உணருகிறேன்
இருப்பினும் நீ நிரபராதியா? மறுக்கிறேன்
பேச்சுவாக்கில் சொன்ன சொற்கள்
பிரலயமாக வெடித்ததே
நீயும் வெல்ல நானும் வெல்ல
நாம்தானே தோற்றதே
மணமுறிக்க தரகருடன் நாள் பார்த்துப் போகிறோம்
(வாக்குவாத...
சிலந்திவலை போல் உறவு சன்னமே
பிண்ணிட நாள் உடைய சில நொடியே
கனா காண்பதெல்லாம் வைகரையா சொல்லிவிடு
காலதேவன் சூழ்ச்சியா இது? சொல்லிவிடு
காலப்போக்கின் வீழ்ச்சியா? சொல்லிவிடு
(வாக்குவாத...
Tuesday, May 04, 2004
# 130 நடுவிரல்
ஆசைக் கடலில் அனுப்பிவைத்து
மூழ்கடிக்க நினைத்தாயே
நயவஞ்சகனே வாங்கிக்கொள்
உன் படைப்பிற்கு ஒரு நடுவிரல்
கருணை இல்லப் பாதிரியாய்
குழந்தைக் கனவைக் கெடுத்தாயே
கடவுள் போர்வையில் களவாடும்
உன் படைப்பிற்கு ஒரு நடுவிரல்
சுதந்திர நாட்டை சீர்குளைத்து
கொடியவரை ஆள வைத்து
கொத்தடிமைகள் மக்கள் என்ற
உன் படைப்பிற்கு ஒரு நடுவிரல்
வடக்கில் என்றும் வெள்ளமிட்டு
தெற்கில் என்றும் பஞ்சமிட்டு
இரண்டும் அழியச் செய்தாயே
உன் படைப்பிற்கு ஒரு நடுவிரல்
# 129 குரலரசி சுசீலாவுக்கு என் காணிக்கை
நாபிக் கமலத்திலிருந்து வரும் நளின அருவியே
உணர்ச்சிக் காற்றை வருடும் புணர்ச்சிப் பறவையே
விளம்பரம் தேடாத விதானமே
நிலைமை தளரா நிதானமே
நீ மழைச் சாரலில் வீணை நாதம்
அதிகாலையில் சுப்ரபாதம்
ஓடைக்கரையில் குழலோசை
கலைவாணியின் செல்ல மகள்
தென்றலுக்கு சொந்தக்காரி
தமிழிசையின் ஆயுள் நாடி
உன் குரலை வடித்திசைக் கருவி செய்ய கலைஞன் இல்லையே
நீ பாடியதெல்லாம் சேகரிக்க யோகம் இல்லையே
நீ ஏழை வீட்டில் இலவச விருந்து
அனாதையைத் தாலாட்டும்
ஆதரவு அன்னை
அர்த்தமும் இசையும் கூடும் கடல்
என் உதிரத்தை உறித்து
ஒரு காணிக்கை மலரை
செய்ய முடிந்தால்
அது உன் காலடியில்
அதுவரையில் இதை ஏற்றுக்கொள்
# 128 நாயணம்
நாயணம்
அது வாரிச் சென்றது
கோவில் சென்ற என் மனதை
இதுபோல் இசை சாத்தியம்தானா?
இசைத்ததுமே வாத்தியம்தானா?
காலத் தடயம் போக்கும் ஞானம் கொண்ட நாயணம்
பிரயோகம் கோவிலிலா?
அது தவிர மேடையிலா?
மேன்மை என்று தனித்ததாலே
பலதரப்பில் பயில மறுத்தார் சோகமே
எத்தனை வகையாய் கருவிகள் கேட்டோம்
உலகெங்கும் இதுபோல் இல்லை ஓசையே
நாள்போக்கில் மாறுமா? உதவாமல் நேருமா?
ஊதுங்கள் நாயணம், உயரட்டும் நாதமும்
முடங்கிப்போய் மூழ்கலாகாது கல்வெட்டுப்போல் காப்போம் நாளும்
நாயணம்
விண்ணில் முழங்கிடும் பேரிகை
நெஞ்சில் எழுந்திடும் போர்குரல்
துஞ்சுநிலைக்கொரு பூங்குரல்
சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப
சாகசமாய் இசை சேர்க்கும்
நவரசமும் நாயணம் சொட்டக் கேளுங்கள்
உயர்கலை என்று சொல்லி ஆனதேது?
புழக்கத்தில் இன்று நாளை சேர்ந்திடாது
இனிவரும்
எந்த காலகட்டத்தின் இசையிலும்
தொன்றுதொட்ட நாயணமும் சேரட்டும்
# 127 கலை சாகக் காரணம்
கலை சாகக் காரணம்
கல்வி அதில் சேர்வதில்லை
கை ஏந்திப் பிழைக்கவே
கற்கிறோம் பொய்யில்லை
சந்தர்ப்ப சூழ்நிலை
யாரைச் சேருதோ, அவர்
சரித்திர புருஷராய்
கோலோச்சும் காலமிது
அடிபனிந்த காரணமே
அரசியலும் அழிகிறது
அன்றாடம் காய்ச்சிகளாய்
ஆக்கிவிட்டு ஏய்க்கிறது
கலையென்றும் காட்சியென்றும்
தேர்ந்தெடுத்த ஆட்சியென்றும்
மூடருக்கு மாலையிட்டு
மேடையேற்றி நாம் சரிந்தோம்
ஊருக்கு நூருபேர்
உணர்வுடன் புறப்படாது
கீழ்த்தரமானவரை
களையெடுக்கு முடியாது
புரட்சியின்றி பொற்காலம்
பிறந்ததில்லை எப்பொழுதும்
நிலவையும் பொறி தட்டி
நீக்கிடுவோம் இந்த இருள்!
# 126 அம்சங்கள் (கசல் வடிவப் பாடல்)
என் விழி அரங்கத்தில் உன் பருவக் கலை இனிது
உன் விழிச் சுரங்கம் மேல் மென்புருவ வளை இனிது
யதார்த்த நகைச்சுவையை ரசித்திடும் வகையே சுகம்
ஏகாந்த வேளையில் வெளிப்படும் நகையே சுகம்
உன்னோடு கைகோர்த்து உரையாடப் பேச்சும் இசை
துயிலிலும் எனையுணர்ந்து அரவணைக்கும் மூச்சும் இசை
நடுநிசியில் நிலவொளியில் மணிக்கழுத்தின் அசைவு சொர்கம்
மறுக்கின்ற வார்த்தைக்குள் மறைகின்ற இசைவு சொர்கம்
ஏதாவது வேண்டுமென்றால் அடிபோடும் விதம் ஆகா
இதென்ன கவலையென்று சுமையோட்டும் பதம் ஆகா
# 125 இருட்டரைக்குள் தீபம்
இருட்டரைக்குள் தீபம்
இசை ஒலித்திட ஆடும்
கற்ற வித்தை கையில் சீறும்
பற்ற வைத்த நெஞ்சம் சேரும்
உறங்கிட வரவில்லை
உடல் மனமெங்கும் தொல்லை
மது அருந்திட நாழி
விரைந்தோடுமென்று கேள்வி, தோழி
கையில் பெட்டி தோளில் வாத்தியம்
ரயில் சென்றும் நான் காத்திருந்தேன்
அகப்பட்டதங்கு நீயோ?
ஆசைமோசமிங்கு நானோ?
விடைபெரும் கடிதத்தை
வீட்டில் படித்திருப்பாரே
எந்த முகத்துடன் நானும்
எந்தன் வீட்டுப்படி ஏற?
விட்டுச்செல்லும் உறுதி
சேரும் இடமதில் இல்லை
நிழல் துறந்தவனை
ஒளி மறந்தது இல்லை
# 124 சந்தனப் பூச்சு போல்
பெண்:
சந்தனப் பூச்சு போல்
என் உள்ளம்
சிலிர்த்ததே மெல்ல,இசைமழையிலே விரல்கள் மேகமே
ஆண்:
உல்லாசம்...ம்ம்க்ம்ம்ம்...உல்லாசம்...
பெண்:
சந்தனப் பூச்சு போல்
என் உள்ளம்
சிலிர்த்ததே மெல்ல,இசைமழையிலே விரல்கள் மேகமே
ஆண்:
உன் கண்களே விழா கோலம்
உன் பார்வையோ கார்த்திகை தீபம்
உன் பார்வையில் காய்ந்து இசையில் நனைகிறேன்
இன்பத்திலே இசையே சிகரம்
துன்பத்திலும் அதுதான் நிகரம்
எனை இன்பமாக்கியே துன்பம் தீர்க்க வா
பெண்:
வானம்வரை சேரும் கீதம்
வார்த்தைகளை மீறும் நாதம்
மனவானில் என்றும் கீதம் நீ
என் கைவரைந்த காதல் வரி
உன் வாய்மொழிந்த குழல் அருவி
உரையாடல் கூட இசையின் மொழி
உன் உறவுப் போர்வையில் குளிர் காயவா?
# 123 பனித்திரை
பனித்திரை பூங்காவனத்தை
பாதுகாத்திட மறைத்ததோ?
ஓடையும் வெப்பம் தேடி
மாலையில் விரைந்ததோ?
பதுங்கி கொண்ட பாறை மலைகள்,
புகைபிடிக்கும் ஏரிக்கரைகள்,
மலைக்குமேல் சொர்கப் பரிசை
வைத்ததெல்லாம் யார் கைவரிசை?
காதலர்கள் மயங்கிட
ஓடங்களும் ஏரியில் மிதக்க
கைகோர்த்த ஜோடி பல
கரையெங்கும் சுற்றி நடக்க
காண்பதெல்லாம் காதலர் கனவோ?
இயற்கைக்கும் காதலர் மனதோ?
உயரத்தில் செல்லச் செல்லவே
வழக்கத்திற்கு விடுமுரை
கோடைகாலம், வேண்டும் விடுதலை
வேலை விட்டு விலகியே
தேடிப்போனோம், நாமும் அமைதியை
கவலை விட்டுப் போகவே
இயற்கை தொட்டில் ஆட்டுமே
உயரத்தில் செல்லச் செல்லவே
# 122 சதிராடும் வேளை அன்பே
சதிராடும் வேளை அன்பே
துணைசேர வா இங்கே
இடை கோர்த்து ஆட
நாம் இசைப் பாட்டில் ஐக்கியமாக
போர் வானில் சாந்த மேகம்
படை சூழ்ந்து பொழியும் நேரம்
நிகழ்காலம் ஈரம்
ஆனால்,
பிரகாசிக்குதே நாளை
(சதிராடும்...
கடந்து வந்தது பழமையின் கனம்
காத்திருப்பது புதுமையின் பலம்
சொந்த தேசமே பழமையின் குறி
சர்வதேசமே புதுமையின் நெறி
போராட்டம் எல்லோர்க்கும் பகையாகுமே
நேசம்தான் மொழி இப்போது
தேசங்கள் மறந்தால் தப்பேது?
நாட்டுக்கு எல்லைகல் அப்போது
நட்புக்கு வேலிகள் எப்போது?
(சதிராடும்...
# 121 தூர தேச ஓசைகளை
தூர தேச ஓசைகளை
சொந்த மொழி கொண்டாடுதே
வட கிழக்கின் வாத்தியத்திலே
தென்மேற்கின் தாள தாக்குதல்
தூர தேச ஓசைகளை
சொந்த மொழி கொண்டாடுதே
வெங்களத்தின் பேரிகைகள்
வெள்ளுடையில் தாரகைகள்
ஆட வாயென ஆடவர், கொஞ்சிக் கெஞ்சிட
வாழையெனும் காலழகு
ஆடவனின் தோள்களின் மேல்
தாவி விழும் சாகச சந்தோஷமென்ன
சொர்கத்துல பண்டிகை நாளும் வந்தா
கலியாட்டம் இவ்வளவு ருசித்திடுமா?
(தூர தேச...
சந்தனத்தை நகலெடுத்து
மேனியொன்றை அவன் தரிக்க
உருவான துருவம் பெண்ணானதோ?
சங்கடத்தில் நிழல்கொடுக்க
சங்கமித்த நாளன்றே
உருவான துருவம் இசையானதோ?
ஊரு தேசம் என்றெல்லாம் எல்லைகள் எங்கே?
இசையதின் சாம்ராஜ்யம் இதயங்களே
(தூர தேச...
# 120 திண்டாடுதே மனது
திண்டாடுதே மனது நீ இல்லாத ஓர் பொழுது
பொய்யான மொழி எதற்கு மெய்யாக நான் நினைப்பதற்கு
விடைபெரும் உன் உருவம் நினைவுக்கு நிரந்தரம்
பிறைமுகம் பார்த்தபின்னே இதயமுன் துறைமுகம்
(திண்டாடுதே...
புல்லாங்குழல் இசைத்தாலும் தீயானதே உணர்வு
சில்லென்று நீர் குடித்தாலும் சூடானதே கனவு
இரவிருந்தும் உறவு இல்லை
அந்தரங்கத்தில் அந்தரம்
நிழற்குடையே நினைவு என்றால் அதற்கடியில் நான் தனியே
தனிமையிலே பகிர்ந்துகொள்ள இருப்பதெல்லாம் தனிமையே
(திண்டாடுதே...
உச்சிவெய்யில் வேளையிலும் மனமோ மூடுபனி
அச்சுப்பிழை ஆனதே நீ இல்லாத முகவரி
ஊனமுண்டு காயமில்லை
இதன் பெயர்தான் காதலோ?
அதிகறிக்கும் ஆசைகளை தனிமை நிலை என்றார்
அருகினில் நீ வருவதென்றால் கொட்டிவிடவும் தயார்
(திண்டாடுதே...
# 119 நீர் முத்தினைத்த சாரல்கள் (கசல் வடிவப் பாடல்)
நீர் முத்தினைத்த சாரல்கள்
காதல் வரிகளே
பூமிப் பெண்ணவளின் காதலனாய்
மேகமாகுமே
(நீர்...
இளமை பொங்கும் காரணமோ
நதியும் தாவுதே
உன் நினைவு தீண்டும் காரணமோ
இதயம் பொங்குதே
(நீர்...
சூர்ய காந்தி நோக்கும் திசை
கதிரின் கையிலே
எனது பயணம் போகும் திசை
உந்தன் பாதையே
(நீர்...
மலர்ந்த புஷ்பம் மூடுவது
மறித்த பின்புதான்
காதல் ஜோதி அனைவதுமே
கால முடிவில்தான்
(நீர்...
# 118 யுத்தக் காதல்
தலைமேலே
வானே தெறித்து, சிதறி, புகைந்து, பொசுங்கிவிடும் போரில்
உடல் ஒரு பொருட்டா?
உடைந்தது மனமே
உடற்சிகிச்சை பெற
நானும் ஒப்படைக்கப் பட்டேன்
குண்டு வெடிக்கையிலும்
கூடாரம் மருந்து கொடுக்கிறது
(தலைமேலே...
மறைந்து போனவரை
நெஞ்சு நினைத்து நோகிறது
பிழைத்தும் பயன் தரா
நிலையில் வீரம் வருந்திடுது
தாய்பாசம்
பார்த்திராத போர்களத்திலே
வெள்ளாடை சூடியே
கனிவாகவும், கருத்தாகவும் உயிர்காத்தாயே
மருந்தூசிகள் தரும்போதிலும் மகிழ்வித்தாயே
போர்கண்ட காலம்
உடல் மனம் சீருமே
உடல் ஊனம்
ஏவுகனையால்
மனம் தூறும்
உந்தன் பணியால்
தலைமேலே...
வானே தெறிது, சிதறி, புகைன்து, பொசுஙிவிடும் போரில்
உடல் ஒரு பொருட்டா?
மனமிங்கு மிதக்க
உடைந்து போன சிலை
அதை ஒட்ட வைத்த கலை
மெழுகுவர்த்தி குணமே
உன்னால் வாசபர்த்தி மனமே
இன்னல் தந்து
உன்னைத் தந்து
இன்னல் தந்து
உன்னைத் தந்து
கொடுத்து வாங்கும் இறைவா
இவளைக் கொடுத்து ஏமாந்தாய்
வருகையினாலே துயர் துடைத்தாள்
உடல் தோற்ற போரில் மனம் வெற்றி
ஒரு பாடலோடு வானம்பாடி வருகிறபொழுது துயரேது?
(தலைமேலே...
உயிரைப் பணயம் வைத்து
என் இதய நிலவை வென்றேன்
அவளின் சேவை கிடைத்தால்
நாளும் காதல் நோயை வளர்ப்பேன்
# 117 சாகசமா சூசகமா?
சாகசமா சூசகமா?
சாதகமா சம்மதமா?
அனை கட்டியதால் மனைகெட்டவர் பாடு
சாகசமா சூசகமா?
விதைத்தவன் மீது
வேர் கொண்ட மான்பு
பறித்தவன் கைகள்
அறிவது ஏது?
கடலுக்கு மேலா மழையின் குறி?
இந்தப் புவியினில் ஏழை மிதிபட்டு சாக
சாகசமா சூசகமா?
சாதகமா சம்மதமா?
அனை கட்டியதால் மனைகெட்டவர் பாடு
சாகசமா சூசகமா?
மின்சாரம் தேடித்தான்
அனைக்கட்டு என்றார்
உற்பத்தி வேகத்தில்
ஆதிவாசியை ஆ...
பிறந்த மண் என்றும்
பிறப்புரிமை என்றார்
பிறந்தது ஏழை
என்றால் அண்டார்
ஓடை மீணை
கடல் கொல்லும்
ஏழை நீதியை
செல்வம் வெள்ளும்
நர்மத நதியின் நெடுமேனியெலாம்
விலங்குகளாகப் பூட்டிய அனைகள்
தேக்கியதெல்லாம் தண்ணீரல்ல
கண்ணீரடா
வெள்ளம் அனைகளில் அடங்கித் தூங்க
இல்லம் கொள்ளை கொண்டு அரசு போக
கொண்ட வித்தை எங்கும் செல்லாது
கற்க வித்தை ஒன்றும் இல்லாது
வறுமைக் கோடெனும் வாளால்
உயிரை மாண்டனர் ஊரார்
தந்திர அரசு
இயந்திர மனசு
# 116 வான் வரைந்து முடித்தான்
வான் வரைந்து முடித்தான்
மலையும் படைத்தான்
வனமும் கொடுத்தான்
இதையெலாம் ரசித்திடவே
நீரிலே மிதக்கவிட்டானோ?
பாய்மரப் படகென்றாலும்
படைப்பினில் திலைக்கவைத்தானோ?
நீரின் சுதந்திரம் நீங்கா நிரந்திரம்
தெய்வ ஏற்பாடுதானோ?
நாளும் வதைத்திடும் பாடு நிலத்தினில்
மனித முறன்பாடுதானோ?
தானாகப் படைப்பின் ரகசியஙள்
தேடாத மனங்களில் உதிப்பதில்லை
தேடாத மனதின் வழிநடந்தால்
தேனாக வாழ்வும் ருசிப்பதில்லை
(வான்...
இது போலவே
மனிதரின் உள்ளமும்
இருப்பதனால் தேடிடவே புலப்படும் உண்மை
நீரின் கோடுகளைப் பார்க்கவே, ஓ
நினைவுக் கூட்டுக்குள்ளே சிறகிடும்
பசுமை நினைவுகளும் ருசித்திடும், ஓ
மனதில் காலங்களே சிறைபடும்
வாழ்வே முன்னோக்கி உனைத்தள்ளும் ஓடம்
மனது நீர்போலே பின்னோக்கி ஓடும்
நீரின் கோடுகளைப் பார்க்கவே, ஓ
நினைவுக் கூட்டுக்குள்ளே சிறகிடும்
பசுமை நினைவுகளும் ருசித்திடும், ஓ
மனதில் காலங்களே சிறைபடும்
கிடைக்கின்ற மீணெல்லாம் அனுபவப் பாடம்
பறிபோன மீணெல்லாம் சந்தர்ப்பமாகும்
வந்தாலும் போனாலும் பாதிப்பு உண்டு
வருவோரும் போவோரும் உளிபோலன்றோ?
உனைப் போலவே
உலகமும் உள்ளதே
உறவாடி உறசாது பயனும் ஏது?
(வான்...
# 115 ரெட்டை சடை
ரெட்டை சடை வயசு வயசு
ஒத்தை வழி மனசு மனசு
கத்திரிப்பூ தாவணி
கண்ணக்குழி பூரணி
காத்திருக்கு ஆவணி
என்ன செய்யப்போரே நீ?
கன்னிமலரிவ ஒத்துக்கிட ஒத்துக்கிடனும்--காளை மனச
கட்டிக்கிட கட்டிக்கிடனும்--மெட்டிக் கொலுச
சந்தோசம் பொங்கப் பொங்க சதிராடும் பூஞ்சோலை
கண்டவுக நெஞ்சுக்குள்ள பலுவெல்லாம் சுலுவாக
மப்பு மந்தார வானம்
கொடைசாஞ்சு குளிப்பாட்ட
(ரெட்டை சடை...
கன்னிமலரிவ கட்டிக்கிட ஒத்துக்கிடனும்--காளை மனச
ஒத்துக்கிட கட்டிக்கிடனும்--மெட்டிக் கொலுச
ஐப்பசி மழை போயும்
எம்பசி தீராது
கார்த்திகை நீ அனைச்சா
மார்கழியும் குளிராது
குத்துவெளக்கெரிஞ்சா
குடிசையெலாம் தெய்வீகம்
(ரெட்டை சடை...
# 114 கேளாதோ எங்கள் கவிதை?
கேளாதோ எங்கள் கவிதை?
மாறாதோ எங்கள் சரிதை?
வானத்தில் சுதந்திரப் போராட்டம்
நாம் மாய்ந்தால் பருந்துக்கு கொண்டாட்டம்
ஏமாந்த கீழ்நாடு கொடியவர் என்று
பிரச்சாரம், தீர்மானம், அனுகுண்டு ஆராய்ச்சி என்னாச்சு
அன்னாச்சி?
கேளாதோ எங்கள் கவிதை?
மாறாதோ எங்கள் சரிதை?
ஐ.நா. சபையும் ஆள் விட்டுப் பாத்தாங்க என்னானது?
எல்லா நாடும் யோசிக்க சொன்னாங்க யார் கேட்டது?
எதிர்ப்பு சொன்னவன் எதிரிக் கூட்டம்னு பேரானது
விளக்கம் கேட்டவன் பேர்கெட்டுப்போய் பாழானது
இதுக்கு மேல் துன்பம் தாங்காது சாமி
இறந்த நிரபராதி எண்ணிக்கை காமி நீ
மிதித்துக் கொல்லத்தான் கீழ் நாடு என்று
அடித்துச் சொன்னது மேல்நாடு நன்று
நரகத்தை மண்ணில் கண்டோம்
சொர்க விலாசம் எங்கே?
மேல்நாடே சொர்கம் என்று பதில் வந்தது
(கேளாதோ...
தேடும் கொடியவன் சிக்காமப் போனது தீங்கானது
கிடைத்த கொடியவன் மேல் குண்டு போட்டால் சூடாறுது
ஒரு வலி போக்க மறு வலி சிகிச்சைதானே இது?
தொட்டிலும் ஆட்டி பிள்ளையும் கொள்ளும் ஊர்தான் அது?
உங்கள் வாகன எரிபொருள் தேவை
எங்கள் சடலம் எரிந்தது சேவை
சகித்துக் கொள்ளத்தான் கீழ் நாடு போலும்
சுகித்துக் கொள்ளத்தான் மேல்நாடு நாளும்
நரகத்தை மண்ணில் கண்டோம்
சொர்க விலாசம் எங்கே?
மேல்நாடே சொர்கம் என்று பதில் வந்தது
# 113 முகிலினை போக்கும்
முகிலினை போக்கும் புகைத்திரைக் கூட்டம் கட்டிடங்கள்
வானைத் துளைக்கும்
முகிலினை போக்கும் புகைத்திரைக் கூட்டம்
கட்டிடங்கள் வானைத் துளைக்கும்
பாதங்களின் கீழே பளிங்குத்தரையே
செம்மண் நிலத்தின் சமாதியாய்த் தாரே
(முகிலினை...
பச்சை வயல்வெளி தேடும் விழி
பார்த்த இடமெலாம் கற்சுவர் நரகம்
தென்றலைக்கூட குறுக்கிடும் தெருக்கள்
கோலமில்லா வாசல்கள்
விஞ்ஞானம் போற்ற, ஞானம் தோற்க,
இது போலே பல மாற்றங்கள்
(முகிலினை...
இரவைத் தேடி பகலும் அங்கு சென்ற போதுமே
விடியலாக்கிட வண்ண வண்ண தீபம் மின்னுமே
பொழுது சாயும் நேரம் பூர்வீகம் ஆகிப் போனதே
இன்றைய கடலும், மலைக்காடும் நாளை நகரமே
தாவரம் போனதே தாழ்வாரம் ஆனதே
இதுதான் நாகரீகமா?
தாவரம் போனதே தாழ்வாரம் ஆனதே
இதுதான் நாகரீகமா?
மண்வாசம் போச்சுதே, வாகன மூச்சிலே,
இது போலதான் பல மாற்றங்கள்
(முகிலினை...
Monday, May 03, 2004
# 112 பெளர்ணமி
சந்தர்ப்பம் கதை மாற்றும், உயிர் நட்பில் துயர் நீங்கி
உயர் மோகம் உருவாகும் நிலை...
பெளர்ணமி
இனி நிரந்தரம்
பகல் கனவு இன்று நிஜம் நிஜம்
இருட்டரை
இனி பொறிதட்டும்
இள வட்டம்
இனி கொடி கட்டும்
தோழியர் கூடியும்
தனித்து நீ தெரிகிறாய்
விண்மீண்கள் பிறரடி
வெண்ணிலா நீயடி
உன் அருகில் என் நெஞ்சம் அது பள்ளிச் சிறுவரின்
விடுமுரை நாள்
உன் பிறிவில் என் நெஞ்சம் அது இறுதித் தேர்வின்
முந்திய நாள்
(பெளர்ணமி...
கட்டவிழ்த்த காளைகள் சூழ
கன்னிமகள் என்னில் என்ன கண்டாள்?
கப்பல் போல வாகனத்தை விட்டு
கட்டுமரக்காரனிடம் வந்தாள்
ஆருதல் நட்பில் மாறுதல் தந்தாள்
தோள் கொடுத்தேன் இதயம் கொடுத்தாள்
என் சட்டையில் உதட்டுச் சாயம்
பட்டதைப் பார்த்து நண்பர் காயம்
எந்தெந்த நாளில் எந்த ஆடை
என்னிடம் கேளு மனப்பாடம்
படிக்க வந்த பாடம் வேறு
படித்துச் சென்றதோ நூறு
புதிய மேடை அரங்கேறு
(பெளர்ணமி...
காலத்தின் சக்கரங்கள் யாவும்
காத்திறக்கி வைத்துவிடவேணும்
கனப் பொழுதை நீட்டிவிடு பாவம்
வாழ்கையிலே ஓய்வு ரொம்ப வேணும்
செல்வத்தை செலவழித்துத்தானே
நினைவுகளை சேகரிக்க வேணும்?
காதலில் காசு பணம் இல்லை
சேரியில் பூத்திடுமே முல்லை
சந்தர்ப்பம் கால நேரம் ஏது?
காதல் உன் வாசல் வரும்போது
காகிதம் நூல் இணைந்தே பட்டமாகுது
காதலில் சேர்ந்த நெஞ்சம் வானுலாவுது
துயரை தள்ளி உயரு
# 111 போராடுதே மனம்
போராடுதே மனம்
புலனாய்வதில் தினம்
படைப்பெதிர்பார்த்திரா சப்தங்கள்
திகைக்க திலைக்க வைக்கும் ஓசைகள்
இறைச்சலில் இசையைத் தேடியே
ஒலிகளைச் சல்லடையில் வீசியே
போராடுதே மனம்
புலனாய்வதில் தினம்
வேண்டா வசையோ கடலளவு
தேடும் இசையோ முத்தளவு
செவிகள் மூழ்கிடும் கடலிலே
இசையின் முத்துக்கள் குறைச்சலே
நித்திலங்கள் மின்னும் இசைமண்டபம் கட்ட
போராடுதே மனம்
உயிர்வாழும் வரையில்
கேட்டு ரசிக்கும் பாடலில்
மருந்தாகவேனும்
கொஞ்சம் கற்பனை சேருங்கள்
கூச்சல் மொழியினிலே
நீச்சலிடும் பாடல்களே
இவைதான் இனி தமிழிசையா?
போராடுதே மனம்
படைப்பெதிர்பார்த்திரா சப்தங்கள்
திகைக்கத் திலைக்க வைக்கும் ஓசைகள்
இறைச்சலில் இசையைத் தேடியே
ஒலிகளைச் சல்லடையில் வீசியே
போராடுதே மனம்
# 110 நண்பன்
கிடைத்திடாது இது போல் சொந்தம்
ரத்தத்தில் இணையாதிருந்தும்
சந்தர்ப்பத் தேவை இருந்தால் சிந்தும் உதிரம்
நட்பென்றால் உயிரும் பொதுவே
(கிடைத்திடாது...
பாசம் கண்ணை என்றும் மறைக்காது நட்பில்
என்னை நீங்கிய வேறோர் மனசாட்சி நட்பில்
நிதம் காணலாம்
என் வழிகாட்டிதான்
சுக துக்கத்தில்
என் பங்காளிதான்
உதவிக்கு முதல்வன் உரிமைக்கும் அவனே
பெற்றோர்க்கும் இவனே இன்னோரு மகனே
தொல்லை கொடுத்தே என் எல்லை விறியச் செய்வான் நண்பனே
பாதி ராத்திரி என்றாலும் வந்திடுவான்
பார்த்த மாத்திரம் தொல்லைகள் போக்கிடுவான்
விதி என்னும் சதுரங்க அரங்கத்தில் காத்திடுவான்
எனை மறந்த எனக்கென்னை அடையாளம் காட்டியே
உதாசினம் செய்யாமலே குறைகளை அவன் ஓட்டிடுவான்
வழக்கமெனும் புழுக்கத்திலே
தென்றலாகும் நண்பா
எனக்குமுந்தன் வேடம் உண்டு
உரிமை கொண்டாடடா
# 109 பூபாலமே கேள் வானமே
பூபாலமே கேள் வானமே
உன் வாசலில் கதிர் கோலமே
பொற்காலை விடிந்தாலுமே
பனி தூங்கும் பூங்காவிலே
இதயத்தில் உணர்ந்தாலுமே
நினைப்பு ஒன்று நடப்பு ஒன்று, பாதை ரெண்டு
(பூபாலமே...
நீர் வடிந்தும் பெயர் ஓடை என்று
இலை உதிர்ந்தும் மரம் இருக்கின்றதல்லவோ?
அனை கட்டியும் நீர் அசைகின்றது
பரிசின்றியும் நீ தொடர்வதில் பொருள் உள்ளது
ஆதரவில்தான் அன்புள்ளதோ?
அனுபவப் பாடம் தோல்வியின் பரிசோ?
பாற்கடலையும் சிறு பாய்மரம் கடக்கும்
ஓர் புயலினில் மாமலைகளும் சிதறும்
காலமண்ணின் கால்தடத்தில் நீ துரும்பே
(பூபாலமே...
இசைப்படைப்பில் இறைவனென்றால்
இனப்பிறிவு யார் பொருப்பு?
நண்மைகளை நயம் செய்த கை
தீமைகளை ஏன் துறத்தவில்லை?
இன்ப துன்ப பிளவு அத்தனையிலும் இருந்தால்
படைத்தவன் பெருமை ஒருபாதிதானே?
கேள்விகளை எழ வைத்ததும் அவனா?
பதில்களை மறைத்ததும் அவனா?
மூலத்தையும் முடிவையும் அறியாத மனிதா
உன் வாழ்வின் பொருள் என்பதும் புறியாத புதிரா?
# 108 என் இதயச் சாயலைத் தேடுகிறேன்
என் இதயச் சாயலைத் தேடுகிறேன்
வாழ்வின் அத்தனைப் போக்கிலும் கிடைக்கிறது
என் கண்கள் கவரும் நிறக் கலவை
பிறர் ஆடையில் கண்டால் இணைப்பு;
கண்கள் பரிமாரும் அன்பின் மொழி
உறவுக்கு அப்பால் ஓர் தவிப்பு.
என் நடை உடை பாவத்தின் காந்தம்
அந்நியரை சுண்டி இழுக்கையில் பிணைப்பு;
இதே நிலயில் பிறர் நானாக
அங்கும் உள்ளது இப்பிணைப்பு.
அந்தி சாயும் பொழுதை
விடை சொல்லி அனுப்பிவிட
கடலிடம் ஒதுங்கும் கூட்டத்தில்
அனைவருமே என் இதயப் பிரதி
இயந்திரமாய் கடைப் பொருளைப்
பார்த்துவரும் மனிதர்களில்
பிடித்த பாடலை முனுமுனுத்தால்
வழிப்போக்கனும் சிநேகிதனே
கலையின் சாரம் அலசுகயில்
என் கணிப்பைத் தெரிந்து வார்த்தைகளாய்
உருக்கொடுக்கும்போதெல்லாம்
உறவினனாகிறான் விமர்சகன்
ஒரே காரணமாய் சிரிப்பதிலும்
பிறர் ஒற்றுமை காட்டும் நிலை உண்டு;
என்னைக் காட்டிலும் சிறந்தவன்
என்று இதயம் வைக்கும் சிலை உண்டு
சொந்தமெல்லாம் நம்மைச் சார்ந்ததில்லை
நெஞ்சைச் சார்ந்ததுதான் சொந்தாமாகிறது;
நம் இதய வீதிக்கு நுழைவாசல்
எங்கெங்கேயோ இருக்கிறது
