உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, May 16, 2011
# 288 தந்தைக்கு நினைவாஞ்சலி
கல் மனக்காரன் பேசுகிறேன் அப்பா!
உங்கள் நினைவுக் கல் மனக்காரன் பேசுகிறேன்!
தலைவாழை உபசரிப்பு உங்களைப்பற்றி
அதிகம் கூறப்படும் சிறப்பு
நம் குடும்பத் தோட்டத்தில் இப்பொழுது தலைவாழை
சரிந்து விட்டது
தமையன், சகோதரன், தோழன், வழக்கறிஞன்,
கணவன், தந்தை, பாட்டன் என்று பூணிய வேடங்களில் எல்லாம்
பரிபூரணமாய் வாழ்ந்த ஒரு
மனிதனின் மகத்துவத்தை
ஒரு மடலில் வடித்து முடியாது
உங்கள் சகாப்தத்தை நான்கு சட்டங்களுக்குள்
அடைத்து சுவரேற்ற முடியாது
உங்கள் வாழ்வு வானத்தைப் போல பிரகாசமானது
அதிலிருந்து ஒரு ஒளிக்கீற்றை உருவி
இந்த நினைவுச் சுடரை ஆராதிக்கிறேன்
கல் மனக்காரன் பேசுகிறேன் அப்பா!
உங்கள் நினைவுக் கல் மனக்காரன் பேசுகிறேன்!
தேகம் கூட இளைத்ததில்லை
உங்கள் தன்மையை என்ன சொல்ல தந்தையே!
தேயத் தெரியாத முழு மதி நீங்கள்!
கவலை எனும் விருந்தாளிக்குக்
கதவு திறக்காதவர் நீங்கள்!
"சிக்கலுக்கு தீர்வு காணு அல்லது
சீக்கிரம் கைகழுவு."
என்று சொல்லிக் கொடுத்த சித்தர் நீங்கள்!
சாமானியரின் சங்கடத்தை
வழக்காடி முடித்தவர் நீங்கள்!
கோட்டை ஆண்ட கோமான்களையும்
வசைபாடி குவித்தவர் நீங்கள்!
சொந்தங்களைத் திட்டியதெல்லாம்
செல்லமாகத்தான் ஒலித்தது
திட்டிக் கேட்க வேண்டுமென்று
வேண்டிய சொந்தமும் இருக்குது
சுக ஊருக்கு வழி
தனக்குத் தெரிந்தும்
பிறருக்குப் புரியவில்லையே
என்று பரிதாபப்பட்டவர் நீங்கள்!
மாதம் ஒரு முறை கூட
மறையாத முழுமதி நீங்கள்!
தெற்கிலிருந்து மட்டும்தானே
வீசத்தெரியும் தென்றலுக்கு!
எட்டுத்திக்கும் அரவணைத்து
மொட்டுச் செடியும் விட்டுப் போகாமல்
பட்ட மரத்தையும் தட்டிக் கழிக்காமல்
தொட்டுத் துலாவி மணம் கமழ்ந்த
பட்டுத் தென்றல் நீங்கள்!
கல் மனக்காரன் பேசுகிறேன் அப்பா!
உங்கள் நினைவுக் கல் மனக்காரன் பேசுகிறேன்!
