<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, March 31, 2007
 
# 241 தத்தகாரம்
ஓடையோரக் குயிலுக்கெல்லாம்
மேடையேறத் தெரியாது
கேக்க நெனைச்ச நேரம் குயிலை
பாட வைக்க முடியாது
பாடும்போது கேக்க நெனைச்சா
ஓடைப்பக்கம் குடியேறு

தத்தகாரம் தேவையில்லை இது
தாந்தோன்றிக் குயில் பாட்டு
கத்துக்கொடுக்க நெனைச்சாக்கூட
கட்டுப்பாட்டை மதிக்காது

இதுபோல எத்தனையோ
இயற்கையில ஒளிஞ்சிருக்கு
தனக்குன்னு ஒரு இயக்கம்
படைப்பிலெல்லாம் இருந்திருக்கு
தன் போக்கில உலகத் திருப்பும்
மனுசனுக்கெது புரிஞ்சிருக்கு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, March 26, 2007
 
# 240 புதிய பாதை
பனி என்ன வானின்
மகரந்தப் பொடியோ?

முளைவிடாத மரங்களையும்
மூடி மறைத்து முத்துப் பந்தலாக்கி
விழுந்த பாதையெல்லாம்
வார்த்தை வருமுன்னே கவிதையாகிய
வெள்ளைக் காகிதமாக்கி
உன் கால் பதியப் பதிய
சிதறித் தூவி அடிக்கோடிட்டு
மேகமாகி
உன்னை இனம் காட்டியது
வண்ண நிலவாய்

உன் வருகையிலே
பூமி திரை விலக்கிட...
புதிய பாதை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com