உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, June 14, 2006
# 210 மேட்டுக்குடி தேடும் மனசு
குதிரைப் பந்தயமாட்டம் காதல நடத்தும் கொணமொனக்கு
வெற்றின்னு தெரிஞ்சாதான் மாலைபோடும் ஓங்கழுத்து
மேட்டுக்குடி மக்களையே தேடிப் போகும் உம்மனசு
எவனோ ஒரு காசுக்காறன் கேடயமா நீ ஆகனுமா?
அவனுக்கு இன்னொரு பரிசு கிடைச்சிட்டா நீ தாங்குவியா?
வாழ்கையின்னா ஏத்தம் எறக்கம் வந்து போகும் காத்தாட்டம்
மின்னலப்போய் வெளக்கா நம்பிப் போனாக்க ஓந் திண்டாட்டம்
இருட்டானா நெலவப் பாத்து நடமாடத் தெரிஞ்சிக்கிட்டேன்
நீ மட்டும் ராத்திரிபூரா விடியலத் தேடி அலைஞ்சிருக்க?
விடிஞ்சதும் நான் எம்பாட்டுக்கு வேலை செய்யப் போயிடுவேன்
காணலையே விண்மீனுன்னு கோபப்பட்டா உம்பாடு
காதலுக்கும் கருத்தடை மருந்தா
கல்லிப்பால் இருந்திருந்தா
கண்ணு ரெண்டும் ஊத்தி ஊத்தி
நெஞ்சு முட்ட நெறச்சிருப்பேன்
கருத்தா நான் இத்தன சொல்ல
கிறுக்கு மனசு கேக்கலையே
சாயம் போன ஒறவுக்கு
சாக்கு சொல்லி பாக்குதே
Monday, June 12, 2006
# 209 இடையூரு இன்பம்
அனைகட்டா ஆசைகள் போல் மழையருவி பொங்கி வர
சாலைவழி குழிகளிலே செம்புனலாய் மணல் சரிய
கண் தேக்கிட நினைத்திடும் அழகிது
கவிதை பாடிட நனைந்திடும் மனமது
மண் தோண்டிட நறுமணம் பிறக்குது
சகதிச் சேற்றினில் புதுவிதையுதிக்குது
வண்ண வண்ண பூந்தொட்டிகளாய் வாகனங்கள் வழிநெடுக
அதற்குள்ளே மானிடரும் கொத்து கொத்தாய் பூத்திருக்க
இயற்கையவள் ஆளுகிறாள் அடிபணிந்து நின்றுவிட்டோம்
சேர்க்க நினைக்கும் ஓட்டுனரும் சேர வேண்டிய பயணிகளும்
பொதி வண்டி உடமைகளைப் பார்த்திருக்கும் வணிகர்களும்
பள்ளிவிட்ட சிறுவர்களை எண்ணியபடி பெற்றவரும்
தம் வாழ்வின் இடையூராய் இயற்கையை இன்று நினைத்திருப்பார்
எனக்குமுண்டு கடமைகள், காத்திருக்கும் சொந்தங்கள்
இருந்தபோதும் இந்த இன்பம் என்னைச்சேர கொடுத்து வைத்தேன்
