உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, November 17, 2004
# 166 பூஜைப் பூவோ அது?
பூஜைப் பூவோ அது?
முளைத்தவுடனே எடுத்துக்கொண்டு போய்விட
வாசம் பார்த்தால் வன்முறையா?
தென்றல் கொண்ட அங்கீகாரம்
தோட்டக்காரன் அடையலையா?
அடைகாத்த ஆசைத் தீயில்
அன்பும் சேர்ந்து வேகிறதே
விதைத்ததும் வளர்த்ததும்
கடமையென்று சொல்வதென்ன பேச்சு?
பறித்தவனுக்கு மட்டும் பரிசாகிடவா
புதிய பூவின் மூச்சு?
Tuesday, November 16, 2004
# 165 அமாவாசை பிறந்த கதை
அமாவாசை பிறந்த கதை இதுவே!
தாமரை குளம் வந்த கதை இதுவே!
வானை விட்டு மதி நழுவி
தோட்டம் வந்து
தாமரையை காதல் செய்தது
இடை தழுவி
வானவர் பார்த்தனர் பொறாமையில்,
"சந்திரனே நீ மேலவனே
ஒரு கீழ்த்தர பூவிற்கா மனமிழந்தாய்?
அந்தத் தோட்டப்பூவின் காலழகு
இனி உலகப் பார்வைக்கு மூழ்கிவிடும்"
"கழுத்து வரைக்கும் புதைந்து கிட,
குளத்துக்குள்ளே மிதந்து கிட"
தாமரைக்கு தண்டனையாய்
விதித்து விட்டனர் வானவர்கள்!
வானவர் விடுத்த கட்டளையை
மறுக்கும் நிலைமை நிலவுக்கில்லை
கழுத்து மறைந்த காதலியை
கண் கொட்டாமல் பார்த்தபடி,
"தொலைவில் இருந்து காதலிப்பேன்
திங்களுக்கு ஒரு முறை சேர்ந்திருப்பேன்
உன்னுடன் தான் நான் நான் ஆகும்
இனி திங்கள் எனக்கு பேர் ஆகும்"
வெண்மதி வாக்கை வானவர்கள்
ஒப்புக்கொண்டனர் விரக்தியுடன்,
"சமரசம் இன்றி நிலவு இல்லை
நிலவில்லாது வான் விதவை?"
அமாவாசை என்ற இரங்கல் நாள்
வானம் கருப்பு அணிந்திருக்கும்
குளத்தில் நிலவும் குளித்திருக்கும்
வெண்தாமரைகள் உருவகிக்கும்
# 164 உரை நீங்கி வீணை
உரை நீங்கி வீணை
மொழி பேசும் வேளை
கேட்காமல் உணர்வேன் இல்லாத சொல்லை
குறை சொல்லவில்லை தொடுக்காத வில்லை
துளை கொண்ட நெஞ்சு குறி பார்க்கும் உன்னை
செவி பார்த்தா செல்லும் இசையும்?
திசை பார்த்தா தென்றல் அசையும்?
வாசகனை நினைத்தா கசியும்
வாசிக்கும் வார்த்தை ருசியும்?
பூக்களின் வாசமே வீசுமே என்றும் இலவசம்
சுடுகாட்டிலும் பூக்கள் மலரும்
சோலையிலும் களைப்புல் விளையும்
காதலெனும் காந்த சக்தி
முறைகளுக்கு முறன்படும் யுத்தி
எழுதாத நூலிலே என்றுமே எல்லைகள் இல்லை
