<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 19, 2006
 
# 195 உறுதிமொழி
புவி போற்றும் உன் திறமை
நீ கற்றது கடலாகும்
நீ படித்து மறந்ததையே
நான் கிரகிக்க நாளாகும்

உன் நெஞ்சின் உயிர்துணை நான் என்றேதான் நினைத்திருந்தேன்
உன் அவசரத் தேவைகளை அனுசரித்தே வாழ்ந்து வந்தேன்
பரிவாகக் கிடைத்ததெல்லாம் பாசாங்காய் உணர்ந்தாயோ?
பலமென்று இருந்த என்னை பலவீனம் என்பாயோ?
உன் சேவைக்கென நானும் உதித்ததாய் நினைத்தாயோ?
அருமை தெரியாதவரின் அருகாமை வெற்றிடமே

உன் துரையில் உன் மதிப்பு
கோபுரக் கலசமது
ஊர் உனக்கு சிலைவைக்கும்
நூலகம் உன் பெயர் தாங்கும்
நாளிதழ்கள் உன் வாழ்வை வரலாற்றில் கொடி நாட்டும்
உடனிருந்த எனைக் கேட்டால்
உன் நிழலில் சுகமில்லை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, April 17, 2006
 
# 194 வசியக்காரி பதில் பாட்டு
கோதை பாத்த போதையிலே
தோகை விரிக்கும் ஆண்மயிலே
சோளக் காட்டை சுத்தி சுத்தி நடக்குறியா?
மனுசா...
ஆவிப் புகையா அலைவது ஏன்?
அம்புலி முகத்தை அனுகுவதேன்?

வெள்ளைக்காரி நான் இல்ல
வாய்க்கு ருசியா தரச் சொல்ல

பாசத்தோட விசமம் கலந்து
பரிமாரும் குணந்தான் உனது
சொல்லிப் பாத்தும் கேக்கலையா என் உசிரே?
உசிரே...
கோலம் போட்டும் வாசல் மூடிக் கெடக்கனுமா?
வெளக்கு ஏத்தி வைக்காமே
மனசு எரிஞ்சா உன் பாடு

வெள்ளைக்காரி நான் இல்ல
வாய்க்கு ருசியா தரச் சொல்ல

சேத்து வெச்ச காசையெல்லாம்
செலவழிச்சு ஊதாதே
பாக்குவெச்சு பரிசம் போட வேணாமா?
வாலிபா
தாங்கத் தாங்க தலைக்குமேல ஏறுவியே
சாவிக் கொத்தா சினுங்கிக்கோ
பூட்டு தெறக்க முடியாது

வெள்ளைக்காரி நான் இல்ல
வாய்க்கு ருசியா தரச் சொல்ல

சங்கு கழுத்தை நெனைச்சுபுட்டா
கங்கு தெறிக்கிற கரித்துண்டா
நெஞ்சு கொதிப்பது நெசமானா
வாரியா?
வண்டிமாட்டை ஓட்டிகிட்டு
வாடிப்பட்டி பொண்ணெடுக்க

வசியக்காரி வருவேனே
வாக்கப்பட்டா தருவேனே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com