<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, May 20, 2022
 
# 300 பூ

 கிளைகளில் மிளிர்ந்தால் எழில் 

பூஜைக்கு சென்றால் புனிதம்


காதலர் கைகளில் மோகம் 

கூந்தலில் அமர்ந்தால் கவர்ச்சி


விருந்தாளி கொடுத்தால் பரிசு

சட்டைப் பொத்தானில் கெளரவம்


பக்தன் வழங்கினால் விண்ணப்பம்

மறைந்தவன் அருகே அஞ்சலி


சர்ச்சைகுப்பின் கிடைத்தால் மன்னிப்பு 

மணமாலையில் தொடுத்தால் உறவு 


மயானத்தில் இருந்தால் காணிக்கை

மண்ணில் விழுந்தால் நினைவு 


| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 299 ஓவியக்கதை

 கூடாரமாய் நீலவானப் பலகை

அதனடியில் தூரிகையிட நீளும்

லட்சிய மரங்கள்

தொலைவில் கிழிந்த தாளைப்போல்

மலை நுனிகள்

அதன் தோளிறங்கி

தரை தவழ்ந்தோடும் 

தளிரோடை

இந்த சூழலில் 

என் எளிய குடிசை


என்னைச் சுற்றி

சூரிய அடுப்பில் இயற்கை சமைத்த

விருந்து பண்டிகை 


பார்க்கப் பார்க்க பசியடங்கா நான் 

காய சண்டிகை



| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 298 வேண்டும் இன்னொரு பிறவி

 இந்தப் பிறவியில் புறக்கணித்த

பாதைகளில் பயணிக்க,

வேண்டும் இன்னொரு பிறவி


சொல்ல நினைத்து தயங்கி

சிறைப்படுத்திய உண்மைகளை சிறகடிக்க

சிந்திய திவலைக்குள் சமத்தாகப் பொருந்தும் நீர் போல் வாழாமல்

காற்றில் கலந்தும் தன் மணம் காக்கும்

முல்லைப்பந்தலின் முகை போல வாழ,

வேண்டும் இன்னொரு பிறவி


பிறர் பார்வைக்கு எனைத்திருத்தாமல்

என் பார்வைக்கு பிறரைத் சுருக்காமல்,

உள்ளதை உள்ளபடி

கிடைத்தது கிடைத்தபடி

வரவேற்று உறவாட,

வேண்டும் இன்னொரு பிறவி


தனி மனித சுதந்திரம் பலியாகித்தான்

பொது நலம் காக்கமுடியுமென்றால்

இருசாரியும்  தத்தம் கொள்கைகளை அனுசரித்து மறுபரிசீலனை செய்து

எதிர் வாதத்தை பாதிவழியில்

சமரசம் செய்யும் நிலை காண 

வேண்டும் இன்னொரு பிறவி


வெற்றி பெற்றவனின் மை கொண்டு

சரித்திரம் எழுதாமல்

தொல்வியுற்றவனின் தழும்புகளையும்

தவிப்புகளையும் ஏக்கங்களையும்

தவறாமல் சேர்த்தெழுதும் உலகில் வாழ

வேண்டும் இன்னொரு பிறவி


பெரும்பான்மையின் ஊர்வலத்தில்

பங்கேற்காத 

செல்வாக்கு ஏணியில்

சீராக உயர்ந்து

சுக போக வாழ்வை சுவைத்து கொண்டிருக்கும் சீமான்கள்

சமரசத் தீயில் சாம்பலாகி 

சமத்துவம் போற்றும் நிலை காண 

வேண்டும் இன்னொரு பிறவி



| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com