உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, August 24, 2006
# 223 காலங்கள்
சித்திரை வைகாசி கம்பலம் விரிக்க
இளவேனிற்காலம் இங்கு உதிக்கின்றது
புதிய கண்ணோட்டம் புதிய எதிர்பார்ப்பு
இன்னொரு வருடம் பிறக்கின்றது
ஆனி ஆடி என பெயருக்கு பொருந்தி
பள்ளிச் சிறுவர் ஆடி வர
விடுமுரை வழங்கும் முதுவேனிற்காலம்
இந்த இரண்டாம் பருவம் சிறுவருக்கு
ஆவணி புரட்டாசி நிலப் பசியடங்க
மேகத்தாய் பாலூட்டும் கார்காலம்
வயல்வெளி போற்றும் விவசாயிக்கு
ஐப்பசி கார்த்திகை உடலில் குளிர்ந்து
கண்களில் ஒளிவீசும் குதிர் காலம்
கூடி வாழும் குடும்பத்திற்கு
மார்கழி தை குளிரைக் கூட்டி
மாலைபொழுதை மெல்லினமாக்கும்
முன்பனிக் காலம் காதலருக்கு
மாசி பங்குனி ஆண்டு முடிக்க
வெள்ளிப் பனியாய் விடியும் பின்பனிக் காலம்
முடிவுரை நினைவிற்கும்
எதிர்கால முகவுரைக்கும் பாலமிது
# 222 பாலையிலே சிக்கிய சக்கரவாகம்
என் மகனுக்குப் படித்துக்கொண்டிருந்த புத்தகங்களில் கலை அம்சமோ கதை அம்சமோ காணாததின் விளைவு இந்தப் பாடல். என்றாவது ஒரு நல்ல ஓவியனை சந்தித்தால் இதைப் பல மொழிகளில் புத்தகமாக்குவேன்.
ஒரு பாலையிலே சிக்கியது சக்கரவாகம்
அதன் பாதையிலே பார்க்கவில்லை பொழிந்திடும் மேகம்
ஒரு மூன்றுநாள் பயணத்தில் ஏரி கிடைக்குது
ஆனால் நூறடியும் அதன் சிறகு ஏற மறுக்குது
ஏழு நாள் வாழ்ந்திடத்தான் உயிர் இருக்குது
ஆனால் இருள்திரை விழுமுன்னே கதிர் ஒளிக்குது
ஆறு நாளில் ஏரிக்கு செல்ல ஒட்டகம் அழைக்குது
சென்றடைந்த ஏரி பாதி வற்றிக்கிடக்குது
ஏரி பாதி வற்றியதால் மீன்கள் இல்லையாம்
மீன்களில்லா மீனவர்க்கு பசியின் தொல்லையாம்
பசித்திருந்த மீனவர்க்கு பறவை விருந்துதான்
கல்லெறிக்கு பயந்து பறவை மரத்திலேறத்தான்...
வீசப்பட்ட கற்கள் தேன் கூட்டை உடைத்திட,
மீனவரைத் தேனி ஓடி ஓடி விரட்டிட,
தண்ணிதாகம் தீர்க்க வந்து தேனை அருந்துது
பறவை இடையூறின் முதுகிலே இன்பம் காணுது
Monday, August 21, 2006
# 221 மதுக்குடமே
ஆண்:
மதுக்குடமே மரகதமே
மருதாணிக் கலையகமே
பரிகொடுக்க பரிதவிக்க
இன்பம் மட்டும் அதிகரிக்க
இதழோடு இதழுரசும் இன்பத்தின் போர்முரசு
இருள்நேரம் துப்பறியும் தடயங்களை விரல் விரித்து
குழு சேர்ந்திசைக்கும்:
சரி சரி ஒற்றுமை ராகம்
கம கமா மல்லிகை வாசம்
பத பதப்பானது மனது
நிச நிசமானது கனவு
ஆண்:
இடம் பார்த்து எடைபோடும்
ஊர் கண்ணில் செல்வாக்கு
எனை மட்டும் கணிக்கையில்
இலை மறைவில் என் போக்கு
உனைக் கையில் பிடித்த கையில்
நிழற்குருவி ஒளி மழையில்
(மதுக்குடமே...
பெண்:
விரி விரி உன் சிறகை
எனக்கது நிழற்குடை
பிறர்க்கெடைப் பொருளாக
வாழ்ந்ததெல்லாம் என் சாபம்
வெளிச்சத்தின் வீண் அரவம்
ஒற்றைக்கிளி விரும்பாது
குழு சேர்ந்திசைக்கும்:
சரி சரி ஒற்றுமை ராகம்
கம கமா மல்லிகை வாசம்
பத பதப்பானது மனது
நிச நிசமானது கனவு
