<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, April 09, 2015
 
# 292 ஆயிரம் பௌர்ணமிகள்

என் சித்தப்பாவின் 80-ஆம் ஆண்டு விழாவிற்கு எழுதியது, போதுப்பார்வைக்காக சொந்தத்
தகவல்கள் சிலவற்றை நீக்கிவிட்டேன்.

மெலிந்த மேனி
செழிப்பான சிந்தனை
கற்றதை கணக்கிட்டால்
பல நூலகங்களை மீறிடும்
கையளவு என்பது இவர்
உண்பது மட்டும்தான்

அன்றாடம் இறை தேடி
அலையும் எறும்பைப் போல்
படிக்க நூல் தேடித் திரிவார் இவர்

குளித்து முடித்து வெறும் துண்டுடன்
அறைக்குள் நுழைந்தவர்
புது நூல் ஒன்று மேசையில் ஈர்க்க
உடல் தலை ஈரம் துவட்டாமல்
படிக்க நேர்ந்ததை பார்த்து
ரசித்திருக்கிறேன்

சிறு வயதில், மஞ்சள் காமாலை
முத்திய நிலையில் நான் இருக்க
எதற்கும் தயாராகிய என் பெற்றோர்
நான் பார்க்க விரும்பியவரையெல்லாம்
வீட்டிற்கு வரவழைத்தனர்

பெரியவர்கள் மாற்றி மாற்றி
ஒவ்வொரு வேளையும்
உணவு ஊட்டிவிட
இவர் சிரித்த முகத்துடன்
கதைக்கு மேல் கதையாக
சொல்லிச் சொல்லி உறங்க வைத்தது
மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று.

திருமண விழாக்களில்
தலைவர்கள் செல்வந்தர்களை
சுற்றி பிறர் கூட்டம் போட
சராசரி தொண்டர்களுடன்
கலாய்த்துக் கொண்டிருப்பார் இவர்
அங்கேதானே சுவையான கதைகள் கிடைக்கும்

பெரும்பாலும் அறிஞர்கள்
பாமரர்களை சகிப்பதில்லை
இவரோ சாமான்யரை
சாதனையாளர்போல் பாவிப்பவர்
ஒரு முறை தெருவில் வந்த ஒருவரை
தழுவி விசாரித்து உரையாடிவிட்டு
என்னிடம் கூறினார், "இவன் பெரிய ஆளுடா,
அந்த சினிமா கொட்டகையில, டிக்கெட் பணம்
போக மீதி பணம் எல்லாம் இவனுக்குதான்." என்றார்.

வீடு சென்றதும், சித்தியிடம் நாங்கள் சந்தித்த
பெரிய ஆளைப் பற்றி கூற, அவர்கள் சிரித்துக்கொண்டே,
"உங்க அப்பாவுக்கு அந்த கொட்டகையில சோடா விக்கிறவனை
தெரியுமாக்கும்?" என்றார்.

சுயநலத் தேவைகள் இருப்பதால்
கல்லை தெய்வமாக பார்க்க முடிகிறது
இவரால் மட்டும்தானே ஒரு சாமானியனின்
பற்றாக்குறையையும் பெருமையாக பார்க்க முடிகிறது

கிரகங்களின் அமைப்பைப் பற்றி சிந்திப்பவர்
பூமியின் சங்கடங்களில் லயிப்பதில்லை
உலக சரித்திரங்களை படிப்பவர்
நம்மில் தோன்றி முடிவதல்ல வாழ்க்கை
என்ற சூத்திரம் அறிந்தவர்
சமூகவியல் உளவியல் அரசியல் தத்துவம்
என்று கற்று தனக்குள்ளே தர்க்கம் செய்பவருக்கு
சடங்குகள் சம்பிருதாயங்களின் பாசாங்கும்
உறவுப் பிணைப்புகளில் சலசலப்பும்
வெறுமையின் ஓலமாகத்தானே ஒலிக்கும்

துன்பமும் தோல்வியும் இவரை
கைகோர்த்து நடந்த போதும்
ஞானத்தின் சலங்கையுடன்
வீர நடை போட்டவர் இவர்

குன்றாத தன்மானமும்
குறையாத வைராக்கியமுமாய்
கும்பலிலே அதிகம் சிரித்து
வாழ்வை முழுமையாக வாழ்ந்து வரும்
கோடியில் ஒருவர் இவர்
இவரை பிரகாசிக்கச் செய்ய
ஆயிரம் பௌர்ணமிகள்
எம்மாத்திரம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com