உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, January 18, 2007
# 235 காற்றடைப்பு
நிலவே உன் வாசலை
விஞ்ஞானத்திற்கு திறந்தாய்
உன் மடியில் தடம் பதித்த மனிதர்களை பொருத்தாய்
தடமோ கனமோ இல்லாத இந்தக் காற்றை மட்டும்
நுழைய மறுத்தால் ஞாயமா?
உன் மனதில் கொடி நாட்டுவதே
தொழில் சிலருக்கு
இதில் உலகளவில் போட்டியும் உண்டு
நான் நட விரும்புவதோ காதல் கொடி
உன்னை இருகத் தழுவ எனக்கு
கொடுத்துவைக்கவில்லை
முல்லைக்கொடியால் முடியுமென்று
நியமிக்கிறேன் அனுமதி
உன்னைச் சுற்றி மின்மினிகள்
வெள்ளிக் கன்னி உனக்கோ நகையில்லையே
பகலவனிடம் பேரம் பேசி
பொன்னில் ஒரு கிரீடம் செய்தால்
உனக்குப் போட விடுவாயா?
நீ இரவின் அமைதியில் பொழுதைக் கழிக்க
அலைகளை எழுப்பி ஆட வைத்தேன்
பறவைகள் தம் துணை தேட வைத்தேன்
சோலைகளின் பரவச மூச்சை
சுற்றி வளைத்து உன்னைச் சேர வைத்தேன்
உன்னை எட்ட எத்தனையோ மொழிகளில்
என் அன்பை இசைத்திருக்கிறேன்
நீ எனக்கு மட்டும் என்றும்
இசையவேயில்லை
