உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 23, 2004
# 85 போராளியின் மனைவி
எல்லைக்கோட்டைக் காவல் காக்க
உன் தகப்பன் போயிருக்கான்
கொண்டாருவான் பாரு
நம்ம ஜில்லாவுக்கே பேரு
வீரசிங்கம் யாரு?
எங்க அப்பான்னு நீ கூறு
பட்டாடை பத்து வித பாவாடை
ஜிமிக்கித் தோடு வாங்கிக்கிட்டு வருவாக
ரத்தினத்தோடு, தங்கம், பவளம் எதுக்கு?
வைரம் உனக்கு முத்துப் புன்னகை இருக்கு
பட்டுப்பூச்சி எல்லாம் சட்டை தைக்குமே என் மகளுக்காக
பஞ்சவர்ணக்கிளி தாழப் பறக்குமே என் மகளச் சேர
ரத்தினதோடு தங்கம் பவளம் எதுக்கு?
வைரம் உனக்கு, முத்துப் புன்னகை இருக்கு
எட்டுபட்டிக்கும் ராணியப்போல நீயும் இருக்கிற காலம் வரும்
உன்னைக்கட்டிகொள்ள ஆயிரம் பேர் அப்பங்கிட்ட கேக்க வரும்
பொன்னே செல்லக் கண்ணே பிறிவு தீருமே
கொண்டாருவான் பாரு
நம்ம ஜில்லாவுக்கே பேரு
வீரசிங்கம் யாரு
எங்க அப்பான்னு நீ கூறு
(எல்லைக்கோட்டை...
வெப்பக் காத்தா வீசும் பெருமூச்சு
வாய்க்கா பூரா கொட்டும் கண்ணீரு
சொந்த மண்ணுக்காக ரத்தம் சிந்த போன மன்னவனே
இந்த பொண்ணுக்காக வீடு வந்து சேரணுமே
வெப்பக் காத்தா வீசும் பெருமூச்சு
வாய்க்கா பூரா கொட்டும் கண்ணீரு
இன்னும் எத்தனை காலமா சாக்கு சொல்லி இதை தூங்கவெப்பேனோ?
மனசுக் குள்ளே போர்களமா பொழப்பு நடக்கும் எந்திரமா
பொன்னே செல்லக் கன்னே பிரிவு தேருமோ
கொண்டாருவான் பாரு
நம்ம ஜில்லாவுக்கே பேரு
வீரசிங்கம் யாரு
எங்க அப்பான்னு நீ கூறு
(எல்லைக்கோட்டை...
தாமதமா இரவு நீளுதைய்யா
கண்ணசஞ்சா உன் சிரிப்பு கேக்குதைய்யா
எல்லைப் படை பத்தி சேதியெல்லாம் என்ன வதைக்குதைய்யா
கொள்ளை சனம் இங்கே இருக்கையில உன்ன பிறிக்கனுமா?
தாமதமா இரவு நீளுதைய்யா
கண்ணசஞ்சா உன் சிரிப்பு கேக்குதைய்யா
ஏறாத கோயில ஏறிப்புட்டேன் வேண்டாத சாமிய வேண்டிக்கிட்டேன்
பத்திரமா வீரப் புத்திரனா வந்து சேரணும் கேட்டுக்கிட்டேன்
பொன்னே செல்லக் கண்ணே விரைவில் சேருவோம்
கொண்டாருவான் பாரு
நம்ம ஜில்லாவுக்கே பேரு
வீரசிங்கம் யாரு
எங்க அப்பான்னு நீ கூறு
(எல்லைக்கோட்டை...
# 84 பொன் வைகரை
பொன் வைகரை புலர்ந்தான் குன்றத்தின் தோள்களில்
புல் நுனிகளில் வெப்பத்தால் சிந்திடும் பனித்துளி
சோலைக்குள் சுடர் விரல்கள்
தொட்டு நீக்கிடும் பனித்திரை
ஊரெங்கும் கூவல் இன்னிசை
தூக்கம் ஓட்டுமே சேவல்கள்
நேரத்தை நிர்ணயிக்க கோவில்மணி ஓசையும்
கொஞ்சம் தள்ளியே புகை மண்டிட ரயில் தன்குரல் எழுப்பிடும்
(பொன்...
குளக்கரையில் காலை தரிசனங்கள்
நான் சொல்வதிளம் பெண்களை
உந்தும் பாரமாய் சின்னஞ்சிறுவரை
கோனிப் பையைப் போல் புத்தகங்கள்
சந்தையில் விற்பனை ஆரம்பம் கடைக்கு கடை ஏலங்கள்
சித்திரமாய் வீதி எங்குமே பூசனிப்பூவுடன் கோலங்கள்
(பொன்...
# 83 காலம் போற்றும் கவிதை படைக்க
காலம் போற்றும் கவிதை படைக்க
எண்ணம் தீட்டி எழுத்து கோர்ககிறேன்
தாழை மலர்கள் தொலைவில் குயில்கள்
இன்பம் ஊட்டி எண்ணம் களைக்குதே
தென்றலே நீயும் வீசாதே
வெண்ணிலவே கண்ணைக் கூசாதே
இயற்கையே கவிதை எழுதவிடு
இடையூரு செய்யாதிருந்துவிடு
(காலம்...
மரமே இது ஞாயம்தானா?
மலர்கள் உதிர்த்து கவனம் களைக்கிறாய்
குயிலே இது ஞாயம்தானா
கூவிக்கூவி எதற்கு அழைக்கிறாய்
பாறை மணல்வெளி—பனிந்திடும்
பசுமைப் புரட்சியால்
கறிசல் மனங்களும்—கனிந்திடும்
கவிதைக் கிளர்ச்சியால்
ஏரிக்குள்ளே மேகம்
இறங்கிவந்தது போல
நாரை நகர்ந்து
உவமை வழங்குதே
# 82 பாதி ராவில்
பாதி ராவில் தூக்கமில்லா ஏக்கம்தானா என் விதி?
ஜன்னலோரப் பார்வை காட்டும் வெண்மதிக்கும் என் கதி
சாயங்கால காற்றில் கூட ஈரம் கண்டேன் உன்னதா?
மலரவள் இனங்காமலே மனம் வெந்து வெம்புதா?
மலர் மீது அன்பைப் பொழிவாய் இரவில்
விடியலில் களைந்துபோகும் வீண் கனவில்
இதுதானோ காதல் வாழ்கை நியதி?
இல்லை, கலை வாழ காலம் போற்றும் சதி
பள்ளத்தாக்கில்தானே தெரியும் சிகரம்
ஆழ்கடலில்தானே முத்தும் உதிரும்
# 81 சக்கரமே சுழல் சக்கரமே
சக்கரமே சுழல் சக்கரமே
அக்கரையில் என்றும் அக்கரையே
பாடற்குழு:
முன்பு வந்தவன் முன்னோடி
பின்பு வருபவன் பரிகாரி
நடுவில் வந்து நாம் நாடோடிகளாய் வாழ்கிறோம்
பிறப்பை மகிழ்ந்தோம் நம் கைசேர்ந்த குழந்தைகளில்
இறப்பை அறிந்தோம் நம்மை கலைந்தோடும் உறவுகளில்
வாழ்வை அறிவோம் நாம் கடந்தோடும் எல்லைகளில்
(சக்கரமே...
இருள் நேரப் பிறை ஒன்று
பகல் நேரக் கதிர் ஒன்று
இரு விழிகள் வானுக்கு என்றானதே
நெறி சொல்லும் வழி ஒன்று
ஊர் சொல்லும் வழி ஒன்று
இடையில் நீ சதிராடும் நிலையானதே
ஒரு விழி மட்டும் மூடி விட்டால்
மறு விழி காட்டிடும் வழி என்று
நீ நினைத்தாலே போதும் இந்த சமுதாயம் சாயம் போகும்
(சக்கரமே...
சந்தர்ப்பம் சந்தோஷம்
இரண்டிற்கும் அளவேது?
பின்னதற்கு முன்னதை அதிகரித்திடு
கவலைகள் துன்பங்கள்
இல்லாத வாழ்வேது?
ஞானத்தின் வழி என்று அனுபவித்திடு
கவலைகள் நம்மை மூழ்கிடுமா?
நாம் அதில் முத்துக்குளித்திடுவோம்
என்ற மன நிலையில் நீ வாழ்ந்தால் இங்கே உன்னை மீற ஆளில்லை
(சக்கரமே...
பாடற்குழு:
முன்பு வந்தவன் முன்னோடி
பின்பு வருபவன் பரிகாரி
நடுவில் வந்து நாம் நாடோடிகளாய் வாழ்கிறோம்
பிறப்பை மகிழ்ந்தோம் நம் கைசேர்ந்த குழந்தைகளில்
இறப்பை அறிந்தோம் நம்மைக் களைந்தோடும் உறவுகளில்
வாழ்வை அறிவோம் நாம் கடந்தோடும் எல்லைகளில்
(சக்கரமே...
# 80 விறைந்தோடும் இரவுகள்
விறைந்தோடும் இரவுகள்
உன் நினைவிலே
உறங்காத நினைவுகள்
என் மனதிலே
நான் பார்க்கும் ஒவ்வொரு திசையும்
நான் கேட்கும் ஒவ்வொரு இசையும்
இனங்காமல் உள்ளம் அசையும்
உந்தன் நினைவில்தான்,
காலம் மாறலாம்
காயம் ஆறலாம்
நேசம் மாறுமோ?
என் அன்பே...
விடைசொல்லுமோ?
விபரீதமே
உயிர் மாய்ப்பது
அவன் வேலையே
வாழும் வாழ்கையே
காலக் கட்டணம்
தேதி தீர்ந்ததோ?
என் அன்பே...
பிறர் சூடும் பார்வைகளை
மனம் ஏற்பதில்லை
உனக்காக ஏற்றிய தீபம்
உயிர் தோற்கவில்லை
ஜோதியை சுமந்த கண்கள்
எரியாத திரியாய்த் திரியும்
பிரலாபன் பறித்த பூக்கள்
உந்தன் காணிக்கை,
கண்கள் நீர்குளம்
நெஞ்சம் போர்க்களம்
பொங்கும் பாற்குடம்
என் அன்பே...
அக்கரையாய்
வளர்ந்த உறவே
அக்கரையில்
கறைந்த பொழுதே
நீதி சாத்திரம்
தோற்றுப்போனது
கறுகலானது
என் அன்பே...
# 80 சலனம் சபலம்(feelings வாத்திய இசைக்கு வடித்த பாடல்
பாடல் தலைப்பை அழுத்தினால், இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்தின் இணையத் தளத்தில் இந்தப் பாடலை என்னுள் பிரசவித்த வாத்திய இசை அடங்கிய பகுதிக்கு கொண்டு செல்லும்!
சலனம் சபலம்
விருப்பம் விசனம்
குறையோ நிறையோ
தவிர்ப்பது முறையோ
நவரச நயங்கள்
கூட்டிப் படைத்துவிட்டான்
நொடிக்கொரு உணர்வு
என்றே எழுதிவிட்டான்
தொடரும்
(சலனம்...
மனமே மனமே
பூவில் தேனென கலந்து
காம்பில் முள்ளென முளைத்து
வருடுமோ நெறுடுமோ
சொல்ல முடியாது
உறங்கும்போதும் உறங்காது
உயரும்போதும் மறையாது
நிற்பதும் நிலைப்பதும்
மாறும் மனதுதான்
எட்டிப்போ என துறத்ததே
விட்டுப்போ என விலகாதே
முயற்சிப்போரை மறக்காமல்
புரட்சிப்போரென புறப்படு
விதியுடன் நடனமே
வீர செயல் இங்கு
(சலனம்...
# 79 செக்குமாடு போல
ஆண்:
செக்குமாடு போல ஒன்னை நான்
சுத்திவாரேன் பொண்ணே
பெட்டிபாம்பு போல ஆசைதான்
படுத்து கெடக்கு உள்ளே
வாசப் பருவமே வா
வாழைக் கொமரியே வா
அடி கெடஞ்சுபோட்ட நெஞ்சுக்குள்ள ஆசை வெண்ணை ஊறுதடி
(செக்குமாடு...
பெண்:
வெண்ணை இருந்தும் நெய்க்காக அலையும் பொண்ணு நானில்லையே
கிள்ளி முகந்து வாசம் பாக்க பூவும் நானில்லையே
வீசிப் பாயும் ஆத்துத் தண்ணிபொல மாமென் உன் போக்குதான்
ஆழம் தோண்டி பாத்தாத்தான் கெடைக்கும் ஊத்துத் தண்ணீரு நான்
ஆண்:
அன்னமே இனிமேல் அசை எண்ணங்கள் எண்ணங்களே
(செக்குமாடு...
# 78 நிதம் ஒரு புது சுவை தருவாய்
நிதம் ஒரு புது சுவை தருவாய்
என் உடல் உயிர் அனைத்திலும் நிறைவாய்
இனி கனவெது நெனவெது என தெரியாது
கால நேர நெறிகளை களைத்திடுவாய்
நிதம் ஒரு புது சுவை தருவாய்
தெளிவாகும் நிலையில் உன் போதையா?
நினைவே வளருதே நீ மயில் தோகையா?
பூகம்பம் உன் அங்கம் சரணடைவேன்
பேராசை தனிந்ததும் விடைபெருவேன்
(நிதம்...
வருங்காலம் நம் கதை சொல்லுமா
விடை தேடா கெள்விக்கு விடை சொல்லுமா
நிறைவேறா ஆசைகள் அரங்கெறுதே
கரைசேரா வார்த்தைகள் அலைமோதுதே
(நிதம்...
# 77 காய்ந்திடும் நிலவொளி
காய்ந்திடும் நிலவொளி கண்களில் தெரியும்
கலைமகள் பார்வையில் கற்பூரம் கறையும்
கடலின் அலை நான் ததும்பி எழுந்து
அருந்திடவா உன் அழகின் விருந்து
(காய்ந்திடும்...
வானத்தை நோக்கி மரம் வளர்ந்தாலும்
இருப்பிடம் என்பது நிலத்தினில்தானே
வேறோர் ஊரில் நான் வசித்தாலும்
வேரூன்றியது உன் நெஞ்சில்தானே
(காய்ந்திடும்...
# 76 நீ என் சுக சங்கீதமே
நீ என் சுக சங்கீதமே
என் நாவில் தினம் உன் ராகமே
உந்தன் பார்வையிலே
பார்வையிலே
மோகத்தின் ஆராதனை,
இந்தக் காதல் ஒரு சுக வேதனை
(நீ என் சுக...
நிறைகுடங்கள் தளும்பாதென்றால்
உன் இடை ஏறி நிற்கச்சொல் சரி பார்க்கிறேன்
கோவில் குளத்தில் உந்தன் கால் பட்டதால்
பல கமலங்கள் மூழ்கிய நிலை பார்க்கிறேன்
கோபுரம் மேலே ஆயிரம் குயில்கள்
ஓடையைத் தேடி பாடிடும் மொழிகள்
உந்தன் பெயரை உச்சரித்து சொல்ல
எந்தன் மனது தத்தளித்து செல்ல
நானும் குயிலாக
(நீ என் சுக...
குளிர்தெப்பங்கள் உந்தன் கண்கள் என்றால்
அதன் நெருக்கத்தில் நீந்திட வரம் தேவையா?
செவ்வந்தியே இதழ் கோர்வைகள் என்றால்
சுவை பார்க்க என் உதடு துணை தேவையா?
பாதுகாப்பாக சுவர் எழுப்பினாலும்
கார்த்திகை விளக்காய் என் காதலை வைப்பேன்
உந்தன் சொத்து என்று வைத்துக்கொள்ள
எந்தன் எண்ணம் இன்று ஆனதென்ன?
பெண்ணே பதில் கூறு
(நீ என் சுக...
# 75 மடி சாய்ந்திடும் மாலை
பெண்:
மடி சாய்ந்திடும் மாலை
மழையில் நனையும் பூஞ்சோலை
மலராத வாழ்வை எண்ணி
இவள் பாடும் வேளை
(மடி…
பூங்காற்றில் ஆடும்
என் வாழ்கை ஓடம்
புயல் வந்து வீசும் முன்னே
கரை சேர வேண்டும்
கல்லாக்கி வைத்திருந்தேனே
கசிகிறது என் இதயம்
முள்ளாகிப் போன வாழ்வை
மலர வைத்ததுன் உதயம்
ஆண்:
மடி சாய்ந்திடும் மாலை
மழையில் நனையும் பூஞ்சோலை
மணமாகும் நாளை எண்ணி
இவன் பாடும் வேளை
(மடி…
மழை தர வேண்டி இந்த
மேகத்திடம் காத்திருந்தேன்
விடை தர வேண்டி உந்தன்
விழிகளையே பார்த்திருந்தேன்
தோகை விறித்து என்ன பயன்?
கோதை மனது மாறவில்லை
மறக்க நினைத்தும் என்ன பயன்?
வேறு மலரில் வாசமில்லை
(மடி…
# 74 தோரண வாசலே
தோரண வாசலே
மண்டபம் பாழிலே
விருந்தினர் அழைத்துமே
வருவது காலனோ?
(தோரண...
நீலமில்லா வானம் நிரந்தரமோ?
சுழன்றிடும் பூமிக்கு சக்கரம் கழன்றிடுமோ?
எரிகின்ற சோலைக்கு காவலன் ஏன்?
எரிமலைக்குள்ளே பால் மழை ஏன்?
(தோரண...
விடைபெரும் வேளையில் வந்து
புகலிடம் தந்தால் பலனேது?
சிகை களைய, பூ உதிரும்
நசுங்கியபின் நார் எதற்கு?
உலகத்தின் கடைக்காட்சி கண்டால்
அது உன் முகமே
(தோரண...
Thursday, April 22, 2004
# 73 கீதங்கள் சப்த கீதங்கள்
கீதங்கள் சப்த கீதங்கள்
சேருங்கள் மேளதாளங்கள்
ஜீவநதி கூடி வரும்
ஆழ்மனதும் அமைதி பெரும்
(கீதங்கள்...
தோரணமாய் செவி வாசலுக்கே
வீற்றிருக்கும் புது இசைக்கருவி
நூதனமாய் இசை வழிகின்றது
நாதப்புணலில் தவழு
இசைத்தவன் எங்கோ இருக்கையிலே
இசைமழை பொழியுது என்னிடத்தில்
இசைப்பவன் ரசிகனைப் பிறிந்திடலாம்
இடைவெளி என்பது திசைகளில்தான்
இங்கு சங்கமம் என்பது இதயத்திலே...
(கீதங்கள்...
# 72 செவ்வானத்திலே
செவ்வானத்திலே ஓர் இறகு இட்டு
அவன் குழைந்தெடுத்தான் அவள் முகம் வரைய
மலை முகடுகளின் பல வளைவுகளை
மனம் படித்துக்கொண்டான் அவள் உடல் வரைய
(செவ்வானத்திலே...
திங்கள் குளிர்ந்திட கண்ணொளி
கடன் கொடுத்தாள்
பல மின்மினி புகைந்திட
புன்சிரித்தாள்
அவள் குளித்திட கடலே வலைவிறிக்கும்
அலை நாக்குகளில் இனி புல்லறிக்கும்
(செவ்வானத்திலே...
குரலின் மூலம் குயில்தான்
கூடத் தேனை கொஞ்சம் இறைத்தான்
பசும் வயலைக் கண்டு களித்தான்
பாவைப் பருவம் தீட்டி முடித்தான்
அவள் சிறுவிரல் சிறுநகம் கூட
மலர் இதழ்களில் முத்தினம் போல
இரவே வரவே உறவே
(செவ்வானத்திலே...
# 71 பஞ்சனையில்
ஆண்:
பஞ்சனையில் சஞ்சரித்த
கற்பனைகள் கைவசமா?
சந்தேகம் வந்த போது
நான் என்னை கிள்ளிப் பார்த்தேன்
என் இதயவாசலெல்லாம்
உந்தன் இளமைக் கோலம் கண்டேன்
பெண்:
சந்தனத்தின் உள் விழுந்த
வெண்ணிலவாய் உன் கையில் நான் குளிர்ந்தேன்
ஆண்:
என் இருட்டரை வானத்தை கிழித்தவளே
பொன் பெளர்ணமி நிலவாய் உதித்தவளே
பெண்:
விதை உரமிட்டு உரமிட்டு பூவானது
உந்தன் சிறு விதை இன்னும் நீண்டு நீண்டு உயராதோ?
ஆண்:
சுவை உண்பதிலா இல்லை உணர்வதிலா?
பெண்:
என்னை பருகிடவா இல்லை உறுகிடவா
ஆண்:
அடி நேற்றுவரை நான் தனிமரம்தானே
நீ வந்தபின்னே தோரணம் தானே
(பஞ்சனையில்...
பெண்:
மனம் தனக்கென ஒரு வழி செல்கின்றது
உன் நினைவிற்கு பல வழி காண்கின்றது
ஆண்:
இனி துயரென்ன உயிரென்ன கிடக்குது
இரு மனங்களின் சமர்ப்பணம் மட்டும் போதாதோ?
பெண்:
இது வாய்ப்பதெல்லாம் காதல் வாழும்வரை
ஆண்:
உயிர் பிறவிகளின் கடை மூச்சு வரை
பெண்:
உன் சிறு நகம் கூட இதயத் தளத்தில்
சிகரத்தை போல பதிவானதென்ன?
(பஞ்சனையில்...
# 70 முகம் ஒரு பொன் அந்தி
முகம் ஒரு பொன் அந்தி
மனம் ஒரு பச்சோந்தி
உடை போல உள்ளத்தை மாற்றும்
பொல்லாதவள் வஞ்சி
(முகம்...
கடற்கரையில் கைகோர்த்து நடந்தது,
கணல் தெறிக்கும் பார்வைகளில் கறைந்தது,
தொலைபேசியில் முத்தம் கொடுத்தது,
தலைவைக்க உன் மடி விரித்தது,
எல்லாம் வேடங்களா வேசி?
வேறொரு ஆடவனின் தாசி
இந்தக் காதல் என்னும் ஒரு புனித நதியை
இன்று களங்கம் செய்துவிட்ட துரோகியே
என் மனம் பூக்கடை
உன் மனம் சாக்கடை
ஏன்?
(முகம்...
இன்று களைந்துபோனது எந்தன் கற்பனை
நீ பேரம் பேசிவிடும் விற்பனை
மனம் பிடித்து காதலித்தல் என் வழி
பணம் பிடித்து காதலித்தல் உன் வழி
நான் வரவா விடை கேட்டேன்
அவன் வரவு என்று கண்டேன்
வீண் பொழுது போக்க ஒரு பொம்மை போல
எனை ஆடிப் பார்த்து விட்டு சென்றியே
திரி இங்கு எரியுது
விளக்கங்கு திறியுது
ஏன்?
(முகம்...
# 69 விழாக் காலமிது வனம் பூக்கிறது
விழாக் காலமிது வனம் பூக்கிறது
வசந்தம் வரும் நிலையே
எந்தன் பார்வை பூக்க உன்னை வேண்டும்
விண்மீன் பல வானிலிருந்தென்ன திங்கள் நீங்கும் நாளிலே?
பெண்ணின் நிலை என்று மாறும்?
வாழ்கை விதியென்று சாக்கு சொல்லிவிட
நம்பும் பேதை நெஞ்சமே
ஆணும் பெண்ணும் என்று சேர்த்துச் சொல்லும் ஊரில்
விதவைப் பூவின் நிலை
வேண்டாத கேள்வி
(விழா...
சுவிசேஷங்களை ஓதும் எந்த மதமும் கூறவில்லையே
அவனை நீங்கிய அவள் நிலை
என்ன கூறவில்லையே
அன்று கூடலில் பெற்றது
இன்று பிறிந்ததில் அழிந்ததா?
சொர்க வாசலின் கதவுகள் இந்த
மாந்தரை நினைப்பதா?
(விழா...
Wednesday, April 21, 2004
# 68 சிந்திப்போகும் முகிலே முகிலே
சிந்திப்போகும் முகிலே முகிலே
மழையெனும் முத்துத் தூறல் இனிதே இனிதே
முகவனம் மலர்கிறது
முதுகிலும் நானைகிறது
இளைஞரின் தவமறிந்து
தரிசனம் வழங்கிடுது
புனலென பொங்கிடுதே சாலையிங்கு
(சிந்திப்போகும்...
கைக்குட்டை கூந்தலில் பொய்க்குடையாய் மாறாதோ?
காப்பிக்கடை புகைகூட கற்பூரம்போல் வீசாதோ?
அழுக்குப்போல அரிதாரம் முகத்தை நீங்கி ஓடுதே
எட்டிப்போகும் வாகனம் எழுப்பிப்போகும் தாரையே
நெஞ்சோரத்தில் என்றும் நீராடிடும் உன் என்னமே
(சிந்திப்போகும்...
மின்னல் கீற்று தோன்றுதே
வானவர் எடுத்த புகைப்படமோ?
சத்தம் போட்டு இடிப்பது
மூலவர் கை தட்டி நகைப்பதோ?
முல்லைக் காட்டின் வாசனை
கொள்ளை கொண்டு போகுதே
மூங்கில் காட்டின் ஓசைகள்
மெளனக் காற்றைக் கூசுதே
செந்தாமரை குளிபாட்டவே முனைந்ததோ?
(சிந்திப்போகும்...
# 67 மூச்சுக்கட்டிப் பாடல்
மூச்சுக்கட்டிப் பாடல் ஒன்று பாடிக்காட்டத் தேவையோ?
மெட்டுக்கட்டிப் பாடும்போது அர்த்தம் ஞானம் ஊமையோ?
ரெண்டும் சேர்ந்த ஒன்றைப் பாடி காட்டவா?
சந்தத்திலே வார்த்தை ஊஞ்சல் ஆட்டவா?
முக்கனியில் தேனைக் குழைக்க வந்திடும் சுவையையும்
மிஞ்சிவிடும் கடலலையில் மின்னிடும் நிலவொளி
பள்ளியரை தந்த சுகமும் இன்னொரு உயர்நிலை
பெற்றவளின் இன்பப் புன்னகை அதன் முன்னிலையில்
சொல்லிவிட குறையா எத்தனையோ அழகு
செய்துவிட்டு மறைந்தான் சொர்கத்திலே இறைவன்
கிளைகளில் இலையின்றி பனி மட்டும் உறங்குது
கவிஞனின் மனதினில் இது ஒரு அழகியல்தான்
(மூச்சுக்கட்டி...
ஊமையாகப் பிறந்திருந்தால் பார்வை இசை உண்டு
குருடாகப் பிறந்திருந்தால் இசை மொழியும் உண்டு
செவிடாகப் பிறந்திருந்தால் பார்வை மொழி உண்டு
முடமாகப் பிறந்துவிட்டால் மேற்கண்ட மூனும் உண்டு
இருப்பதை மறந்து இல்லாத நினைப்பே
கழித்திடும் வாழ்வில் உண்டாக்கும் கசப்பே
இருப்பவன் இல்லை என்றும் அடுத்தவன் தொல்லை என்றும்
நினைக்கிற வரையினில் உறுப்பட வழி இல்லையே
# 66 செந்தாழை
ஆண்:
செந்தாழை
சுடர் அதிகாலை
எழில் மிஞ்சாதோ
குழி கன்னங்கள்?
பெண்:
மகரந்தம்
பனிப் பூ மஞ்சம்
பறைசாற்றாதோ
இணைந்தோர் நெஞ்சம்?
ஆண்:
ரவி வர்மன் வரைய
அருள் பிரம்மன் இசைய
அரும்பிய அழகே
உன் வடிவம்
பெண்:
சந்தனத்தில் நனைத்து
பன்னீர்தனைத் தெளித்த
மலரென மனதை
மணக்க வைத்தாய்
ஆண்:
அன்பின் அகல் விளக்கு பன்பின் பிரதிபளிப்பு,
பெண்:
நெஞ்சில் பரபரப்பு என்றும் அவன் நினைப்பு
(செந்தாழை...
பெண்:
கொட்டுகின்ற அருவி
தத்திச் செல்லும் ஓடை
மண்ணில் மழை வாடை
காதல் குணம்
ஆண்:
பச்சை வயல் செழிப்பை
பூங்குயிலின் அழைப்பை
கொண்டுவரும் தென்றல்
மொழி காதல்
பெண்:
சங்கு முழங்கிடுதே திங்கள் திகழ்ந்திடுதே
ஆண்:
இன்பம் இழைந்திடுதே எல்லை அழிந்திடுதே
(செந்தாழை...
# 65 மாலைக் கறுக்கல்தான்
பெண்:
மாலைக் கறுக்கல்தான்
மனதில் கிறக்கம்தான்
மான்விழி மாணவி
காக்கிறாள் பள்ளியில்
பாடம் தொடங்காதோ?
பயில முடியாதோ?
(மாலை...
ஆண்:
இருளும் நேரம் களையும் காலம்
போட்டி இடுவோமா?
எந்த உடலில் ஆடை குறைவோ
அங்கு வெற்றிதான்
பெண்:
தோற்பதே இங்கு வெற்றியோ?
களைப்பவன் மேல் குற்றமோ?
தண்டனை இங்கு இன்பமே
தாளிடு இனி தனிமையே
ஆண்:
விரும்ப கொடு விரும்ப
திரும்ப தொடு திரும்ப
சங்க ஏட்டிலும் சந்தப் பாட்டிலும்
கிடையா சுகமே
(மாலை...
பெண்:
அரசன் ஆணை ஆண்ட வேளை
அடிமை நிலை ஏது?
படையெடுத்துப் பருவம் பார்த்தால்
பறிவு குறையாது
ஆண்:
பெண் முகம் ஜொலிக்குதே
ஆரத்தி தீபமோ?
சூடனாய் எரிவது
ஆடவன் இதயமோ?
பெண்:
அழைப்பு அந்தி அழைப்பு
அணைப்பு உந்தன் பொருப்பு
சுவர் கோழிகள் இன்று கூறையைச்
சேருமோ...
(மாலை...
# 64 பொற்பாதமே வா வா
பொற்பாதமே வா வா
தென்றலாய் ஓடிவந்தேன் பூவை இல்லை
கண் போன நாளில் மன்றாடவில்லை
கண் வந்த பின்னே கண்ணீரின் பிள்ளை
பொற்பாதமே வா வா
பார்வையும் வந்த பொழுதிலே
மறைமுகம் இன்னும் தேவையோ?
பாதங்கள் பதித்து நடமிட
பாறையும் வாடி கறையுமே?
பருகினேன் உந்தன் ஆடல் கலையினை
பழகினேன் உந்தன் அன்ன நடையினை
குருடன் என்ற போதும் செவியினால்
உன்னை சேகரித்தவன் செல்வியே
சிறையை விட்டிங்கு வெளியேற்றி என்
இதயம் மட்டும் ஒரு வெற்றிடமென்று
சொல்லுவதால் சுவைத்திடுமா?
இது விடுதலையா?
கண்ணை எடுத்துவிடு
பெண்ணைக் கொடுத்துவிடு
காலத்தின் போக்கினை பின்வழி திருப்பிடு
கவிதைகள் மலர்ந்திடும் நடனமும் தொடர்ந்திடும்
கடந்ததில் புதைந்த இதையமே
கலையின் கறுவரை களைத்தது வன்முறை
கேளுங்களே ஞயாயங்களே தேவர்களே
நடன தேவியே
நெஞ்சுத் தாளம் கேட்டுவா
சலங்கை...ஜதியே
புவியாவும் உந்தன் பாதம் கீழே
நடன தேவியே...
தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் நிலை
இதுதானோ? இதுதானோ?
புயலாக வந்து பொறி தட்டிவிடும் கலை
இதுதானோ? இதுதானோ? இதுதானோ?
குருடனின் நெஞ்சிற்குள் திரி வளர்த்தாய்
கண் வந்த வேளை ஏன் விளக்கனைத்தாய்?
சிந்தும் ரத்தம் நெஞ்சில் நித்தம்
உன்னை இன்றி உள்ளம் பித்தம்
உள்ளுக்குள்ளே ஊமைச் சத்தம்
கண்ணீர் கோக்கும் காதல் மேகம்
சிந்தும் நீரே சோகக் கீதம்
பாதத்திற்கென் பாடல் முத்தம்
பிறியாவிடையில் விடையும் உண்டோ?
கேட்பதற்கு இல்லை கேள்வி இங்கே
நடன தேவியே
# 63 பெளர்ணமி முகம்
ஆண்:
பெளர்ணமி முகம் கொண்டாய் நீ
பல்லவன் சிலை உந்தன் மேனி
யாழிசை மீட்டச் சொல்வேன்
அஞ்சனம் தீட்டச் சொல்வேன்
உன் பதி இனி நானடி
(பெளர்ணமி...
பெண்:
சாரதி இல்லாது ஓடும் தேர்தான்
இன்று என் கதி
மாரணைக்கும்போதும் கேட்டேன்
உந்தன் நெஞ்சில் போர் மணி
ஆண்:
வாழ்விருக்கும்போது ஏனோ தீங்கினை எண்ணினாய்
கோழைகளின் சாவில் என்றும் ஜீவன் இல்லை
எண்ணுவாய்
பெண்:
வஞ்சி நான் வந்தேன் உனக்காக
வஞ்சனை எண்ணம் எதற்காக?
ஆண்:
கண்களில் உன்னைக் கொண்டு வைத்தேன்
கண்ணில் நீர் என்றால் என்ன செய்வேன்?
(பெளர்ணமி...
# 62 மண்ணுக்கு வேர் உறவு
மண்ணுக்கு வேர் உறவு
முகிலுக்கு நீர் உறவு
மலருக்கு வண்டுறவு
மனதுக்கு நீ உறவு
(மண்ணுக்கு...
புல் மீது பனி உறவு
படகுக்கு கடலுறவு
வானோடு மதி உறவு
வாழ்வோடு விதி உறவு
காதலுக்குக் கண் உறவு
கவிதைக்குப் பெண் உறவு
சிலையோடு உளி உறவு
சிதை மீது தீ உறவு
(மண்ணுக்கு...
நாணலிடம் நதி கொள்ளும்
நிலைமாற்றம் ஓர் உறவு
நாணத்துடன் ஆசையிடும்
போர்தானே ஊடுறவு
மலை மீது மூடுபனி
தலைகோதல் ஓர் உறவு
மடியாததொன்றென்றும்
மணமான நம் உறவு
(மண்ணுக்கு...
# 61 சாய்வானத்தில்
ஆண்:
சாய்வானத்தில் சுடர் தேயுது இனி காதல் பரிமாறவா?
பெண்:
சொற்கள் கேட்டுப் பார்க்கும் சீர்களை
இந்தக் கண்கள் ஊட்டிவிடும்
(சாய்வானத்தில்...
ஆண்:
சந்திர திலகம் சூடுது வானம்
மந்திரப் புகையாய் சூழுது மோகம்
பெண்:
மங்கை மனதின் மகுடாதிபதி
மனதை இழந்தேன் உந்தன் கண் கருதி
(சாய்வானத்தில்...
பெண்:
கார்குழல் அவிழ்ந்தது கைவிரல் கோதி
மார்கழி வாடையை மறக்குது மேனி
ஆண்:
இளமை இரவில் இரு மின் மினிகள்
இரவல் வாங்கும் இல்லற சுகங்கள்
(சாய்வானத்தில்...
# 60 உறவளிப்பாயோ உறவழிப்பாயோ?
உறவளிப்பாயோ உறவழிப்பாயோ?
விடை தெரியாமல் மலர்களைக் கொய்தேன்
மயக்கவும் மலர்கள் மறக்கவும் மலர்கள்
தீர்ப்பென்ன கூறடி
கண் இமை வேளிக்குள் காதலை சிறை வைத்தால் ஆகுமா?
காதலின் அம்புகள் எய்தவன் குறி தப்பும்
கேலியா வெறும் கேலியா?
காதல் கொண்ட ஜீவன் எந்தன் உயிர் ஆவி நீயடி
நிராசையாய்ப் போனால் நானும் நீராவி தானடி
(உறவளிப்பாயோ...
இசையின் பிழை காதறியும் இதயப் பிழை யாரறிவார்?
தவறென்றால் காதல் ஏன் தோன்றுதடி?
அப்பாவி ஆசைப்பட்டேன் அந்நாந்து பார்த்துவிட்டேன்
நிலத்தில்தான் என்றும் உண்டு ஈறமடி
நீ நிலவு தூரத்தில் நின்றால்
நான் கடலின் ஓரத்தில் செல்வேன்
இந்தக் காதல் வானிலே ஏணியிட
ஒரு முறை சொல்வாயோ சம்மதமென்று
(உறவளிப்பாயோ...
சதுரங்க ஆட்டத்திலே அரசன் ஒரு மூலையிலே
அரசி உன் வருகை தேடி வாடுகிறேன்
என் ராணி நீயென்று இதுவரை எண்ணிவிட்டேன்
எதிர்ப்படை ராணியென்று ஆகிடுமோ?
மனம் போரைத் தாங்கிடும் களமா?
நீ அமைதிப் படைகளின் இனமா?
ஒரு வார்த்தை சொல்ல பல யுகங்கள் சென்று
இனி முடிவில்லாமல் என் விடிவும் இல்லை
(உறவளிப்பாயோ...
# 59 சிறகாய் விறியும் என் காதல் நெஞ்சு
பெண்:
சிறகாய் விறியும் என் காதல் நெஞ்சு
உந்தன் உடைமை என் உள்ளம் என்று
உரிமை பயிலும் உன் கண்கள் ரெண்டில்
விழுந்தேன் மீணாய் நீ இன்பத் தூண்டில்
ஆண்:
சிங்காரப் பூச்சூடி அம்மன் சிலைபோலே
கைகூப்ப வைத்தாயே காதல் அருளாலே
இல்லாத வேதனை கொண்டாடும் கண்கள்
இருப்பது மெய்யென்றே கொண்டாடும் கைகள்
பெண்:
அகம் ஒன்று புரம் ஒன்று நிலை வாராதே இங்கு
துணை உன்னையன்றி போனால் உயிர் வாழாதே நெஞ்சு
(சிறகாய்...
ஆண்:
கடல் சேரும் வானத்தை கண்டேன் கன்னத்தில்,
பெண்:
கரை சேர்க்கும் தேக்கினை கண்டேன் தோற்றத்தில்.
ஆண்:
சந்தத்தைச் சேரத்தான் வார்த்தை பாவாகும்,
பெண்:
நெஞ்சத்தைச் சேரத்தான் மொட்டு பூவாகும்.
ஆண்:
தடை வென்று துணை கொண்டு திரை கடலை தாண்டத்தான்,
பெண்:
மனம் அஞ்சும் பின் கெஞ்சும் இழுபறியும் இன்பம்தான்.
(சிறகாய்...
# 58 அதரம் துடிப்பது
ஆண்:
அதரம் துடிப்பது
அழைப்பா? கூச்சமா?
பெண்:
விரகம் இயற்கையா?
பெற்றதா? பயின்றதா சொல்லேன்?
(அதரம்...
ஆண்:
உணர்ச்சி தொடங்கியது மூதாட்கள் முன்னமே,
பெண்:
பகிர்ந்து கொள்வதில் பாகுபாடு இல்லையே,
ஆண்:
தேகம் அணை நான் ஆறிட,
பெண்:
தீபம் அனை இருள் சூழ்ந்திட,
ஆண்:
நிலவின் ஒளியில்,
பெண்:
நிழலின் நடனம்,
ஆண்:
மார்கழியின் மூச்சு ஈரமா?
(அதரம்...
பெண்:
கிணற்றுத் தண்ணியென வாறி இறைத்த இன்பமே,
ஆண்:
துவட்டும் கைவிரலில் தவழும் மேனி நிலமே,
பெண்:
ஆசை விதை பயிரானது,
ஆண்:
ஆற்றல் மிக அழகானது,
பெண்:
விரைவாய் விரைவாய்,
ஆண்:
விருந்தைப் பெறுவாய்,
பெண்:
யுக சாந்தி கண்ட எண்ணமே.
(அதரம்...
Tuesday, April 20, 2004
# 57 குரும்பு விழி அழகே
ஆண்:
குரும்பு விழி அழகே
நீ குறு குறுத்துப் பார்க்கையிலே
நான் இத்தனை நாள் காத்துவந்த
பெண் விரதம் தீக்கப்போறேன்
இந்த புள்ளி மான் மேனியெங்கும்
கோலமிட்டுப் பாக்கப்போறேன்
பெண்:
கண் அருகே வேர்ப்பதெல்லாம்
கண்ணீரு ஆகிடுமா?
சந்தோஷம் தாங்கமுடியாம
தவிப்பதும் ஒரு சுமையே
நீ உச்சரிக்க பேரு வெச்சேன்
தொட்டு உழுதிட ஏரு வெச்சேன்
இனி கட்டுச்சோறு கொண்டு வந்து
ஊட்டிவிடும் வேளை வருமா?
அந்த நல்ல தினம் வந்துவிட
உன் உடம்பு பாடு படுமா?
(குரும்பு...
பெண்:
மேகம் கொண்டு வலைய பின்னிவிட்டா
நெலவு என்ன வழுக்கி விழுந்திடுமா?
ஆண்:
அமாவாசை போர்வை அனுப்பிவிட்டா
பவுர்ணமி ஒளிஞ்சு படுத்துக்குமா?
பெண்:
ஜோடி இன்றி நெலவில்லையா?
வேலி இன்றி வானில்லையா?
வலைய வரும் முத்தினத்த
எடுத்திட அவசரப்படுத்தினா
தனிமையைத் தேடி போவேன்
ஆண்:
அடி பொல்லாப்பு ஏதுக்கடி?
நீ மாராப்பை போத்திக்கடி
இனி தள்ளி நின்னு பேசிப்புட்டு
வார்த்தையால வருடு இனிமே
ஒரு எக்குத்தப்பு ஆகுமுன்னே
கண்ணும் கைய்யும் கட்டிப் போடனுமே
(குரும்பு...
ஆண்:
பல்லாக்கு தோளும் எதுக்கிருக்கு?
அன்னாந்து பாக்க தூக்கிடவா?
பெண்:
சில்மிஷத்த போதும் விட்டுடுங்க
சாமத்துக்கு நேரம் எட்டுதுங்க
ஆண்:
வெளிநாட்டு பெண்கள் எல்லாம்
உன்னாட்டம் இல்லையடி
மனசு போகும் வழியில உடம்பையும்
அனுப்பிட கூச்சம் அங்க இல்லையே
பெண்:
அட மேல்நாட்டு பெண்களுக்கு
மானமென்ன விதிவெலக்கா?
நீ சொன்ன வழி போறதுக்கு
வேறாளப் பாரு மச்சான்
நீ உச்சுகொட்டி ஜொல்லு விட
தள்ளுவண்டி தீணி நானா?
(குரும்பு...
# 56 புகைந்தோடும் சாம்பல் எண்ணம்
புகைந்தோடும் சாம்பல் எண்ணம்
பகை தாண்டி தூங்கும் என்று
மடியேந்திப் பாடல் சொல்வேன்
மறந்தேனும் தூங்கு அன்பே
(புகைந்தோடும்...
குழந்தைப்பருவம் கண்ட அதிர்ச்சி
குமரி உன்னை குழப்பத்தில் தள்ள
குமுறி அழுதும் குழப்பம் தீரா
உணர்ச்சிக் கடலே
பிறர்போல் உனக்கிங்கு கிடைக்காதோ சாந்தம்?
உறக்கம் வந்தாலும் விறித்தாடும் எண்ணம்
மனோபாவம் புரிந்தால் கூட
மறக்காதோ நினைவை நெஞ்சே,
மறக்காதோ நினைவை நெஞ்சே
(புகைந்தோடும்...
சிதறி விழுந்த சிலையாய் உணர்ச்சி
உருதெரியாமல் உன்னை மாற்றும்
கவிதை புனைந்த கவியும் எங்கே?
கண்கள் தேடும்.
எரிமலை வெடித்தாலும் இழப்பேனோ உன்னை?
தீக்குளித்தேனும் காப்பேன் என் கண்ணை
தராசிட்டு அளந்தால் கூட
நிறை என்றும் வெள்ளும் குறையை
நிறை என்றும் வெள்ளும் குறையை
(புகைந்தோடும்...
# 55 வாலிபம் ஆடும் கோளாட்டம்
ஆண்:
வாலிபம் ஆடும் கோளாட்டம்
வஞ்சியைத் தேடும் கண்ணோட்டம்
வான்வரை முரசொலிக்குதடி
மாணவ மனம் துடிக்குதடி
சுகம் தந்திடுவாளோ
அவள் என் இதழ் மீது?
சுவை கண்டிடுவாளோ
என் கவிதையின் மீது?
அவள் இல்லாவிடில்
விடியாதென் இரவு
கண் விளக்காகும்
அவள் வரும்போது
(வாலிபம்...
பட்டுப் பூச்சிகளின் சொர்கம் இதுதான்
சுற்றம் யாவிலும் வர்ணமயம்தான்
மொய்க்கும் வண்டுகள் வாலிப கண்களடி கண்களடி
பெண்:
செல்வம் என்பதை பிறப்பில் கண்டேன்
செல்லம் என்பதை வளர்ப்பில் கண்டேன்
காதல் என்பதை கண்டேனே உன் கண்ணில் கண்ணில்
ஆண்:
விதையிட்ட காதல் பயிரானதிங்கு
கருத்தொருமித்தால் அறுவடைதானே
பெண்:
சேர்த்துவைத்த ஆசை செலவழியும் நேரம்
பகிர்ந்துகொள்ளத்தானே ஆசை இன்னும் கூடும்?
ஆண்:
என் கனவுச்சாலைக்கு பணி ஏது
உன் கணவனாக நான் வரும்போது
பெண்:
இனி சாவு என்றொரு நிலை ஏது
நாம் சொர்கம் அடைந்தோம்
பூமியில் காதலிலே காதலிலே
ஆண்:
காதலிலே
(வாலிபம்...
# 54 தப்புவா விருட்சம் கொண்டு
பெண்:
தப்புவா விருட்சம் கொண்டு
ஆதாம் ஏவால் தப்பு செய்து
தொடங்கிய நம் இனம்
தொடர்வது தவறோ?
வினாவிற்கு விடை சொல்லு
எட்டி நின்று எண்ணம் சொல்லு
இனாமலாய்க் கிடைத்திடும்
இனிப்பல்ல நெஞ்சு
வான்மதி காய்வதேன்?
விருட்சத்தில் கூட பகை கொண்டு வைத்தான்
விருப்பத்தில் கூட பழி கொண்டு வைத்தான்
அர்த்தங்களை ஆசை மெள்ள
ஆசை வலை பின்னப் பின்ன
இதயம்தான் சிலந்தியோ
வலைக்குள்ளே யாரோ?
பாடற்குழு:
வெள்ளம் அனைதாண்டிவா
வெட்கம் விலைபேசவா
விரகம் விறகாக்கவா
விருந்தே விரைவாக வா
ஆண்:
வான்மதி காய்வதேன்?
எண்ணமெங்கும் உந்தன் பிம்பம்
ஏற்றம் கொள்ளும் எந்தன் நெஞ்சம்
நிழற்படம் நகைக்குது நிஜமென அன்பே
பெண்:
பயணமில்லாது பயணிக்கும் எண்ணம்
வேடிக்கை இன்றி புன்னகை சிந்தும்
ஆண்:
அலைகளும் கூட உன் பெயர் ஓதும்
இதயத்தின் துடிப்பில் இன்னிசை சேரும்
பெண்:
வர்ணனைக்கொவ்வாத வசியங்கள் செய்தாய்
கண்ணசைவு ஒன்றிலே கைப்பற்றிவிட்டாய்
ஆண்:
உன் முகம் பார்த்து கம்பன் இன்னும் கொதிப்பான்
இரண்டடி குறள் மீறி வள்ளுவன் உரைப்பான்
பெண்:
கவிஞர்கள் உரைத்தது காதலின் வேதம்
கணிவாகப் பேசிடு கவிதைகள் போதும்
வான்மதி காய்வதேன்?
பாடற்குழு:
வெள்ளம் அனைதாண்டிவா
வெட்கம் விலைபேசவா
விரகம் விறகாக்கவா
விருந்தே விரைவாக வா
ஆண்:
வார்த்தைகள் ஊற்றாக வருவது உன்னால்
வாசகன் போல் உன்னை விமர்சிக்கிறேன் நான்
பெண்:
உயர்வாக என்னை வைத்திருப்பாயோ?
உடன்வர நினைத்தேன் வழிபடுவாயோ?
ஆண்:
இனம்கொள்ள முடியாத இன்பத்தைக் காட்ட
உனைக்கொண்டாடிட, அது உன்னை வாட்ட
பெண்:
கிடக்குது கற்பனை கைப்பற்றிக்கொள்வாய்
உணர்ச்சிகள் காட்டிட உவமைகள் வெள்வாய்
வான்மதி காய்வதேன்?
# 53 சில்லறிக்க சில்லறிக்க
ஆண்:
சில்லறிக்க சில்லறிக்க
சிந்துபடி புல்லறிக்க
கட்டழகு கண்ணறிக்க
அங்கமெங்கும் துடி துடிக்க
பாடற்குழு: உஷாரு உஷாரு உன் மேலே கண் வெச்சான் உஷாரு
பெண்:
சில்லறிக்க சில்லறிக்க
சிந்துபடி புல்லறிக்க
கட்டழகு கண்ணறிக்க
அங்கமெங்கும் துடி துடிக்க
பருவம் எல்லாம் பரவசம்
மேனி கண்டு சிலுமிஷம்
கண்ணுக்குள்ள கனாக்கண்டு ஒரே கலவரம்
காதல் நெஞ்சில் ஒரு விஷம்
உதடு ரெண்டில் பழரசம்
உறவு தேடி வந்தால் உண்டு அடைக்களம்
ஆண்:
ஏய்…கர்வத்துக்கு வழிவிடு
தர்மத்துக்கு தொடவிடு
கண் இமைகள் படபடக்க கவிதை ஊறுது
பாடற்குழு: உஷாரு உஷாரு உன் மேலே கண் வெச்சான் உஷாரு
ஆண்:
அஞ்சு விரல் பஞ்சே
ஆருதலாய் வந்தே
தினசரி அஞ்ச
அனுசரி கொஞ்சேன்
எரிவது வாலிப வேட்கையில் நெஞ்சே
பெண்:
அஞ்சுதலால் உன் கெஞ்சுதலா?
ஆருதலா அன்பு மாறுதலா?
ஆண்:
அஞ்சலிட்டேன் காதலிக்க
மண்டியிட்டேன் கைப்பிடிக்க
பெண்:
நுகரத்தான் பூக்களய்யா
பறித்திடக் கூடாதய்யா
பெண்:
ஆதாம் ஏவால்
சரித்திரம் கூறும்
ஆடவன் கண்கள்
ஆயுதம் ஆகும்
முறைத்து நீ பார்த்திட முறையே மாறும்
ஆண்:
ஆவணியில் கண்டேன் தாவணியில்
ஐப்பசியில் வந்தேன் பசி ஆற
பெண்:
சில்லறிக்க சில்லறிக்க
சிந்துபடி புல்லறிக்க
முத்தம் மட்டும் வாங்கிக்கோ நீ
மத்ததுக்கு வேண்டிக்கோ நீ
பாடற்குழு: உஷாரு உஷாரு உன் மேலே கண் வெச்சான் உஷாரு
# 52 கடலை நீங்கிய சங்குக்குள்ளே
கடலை நீங்கிய சங்குக்குள்ளே
அடைந்திருக்கும் என்றும் அலையோசை
சலனம் அடைந்த நெஞ்சுக்குள்ளே
கவனம் கலைக்கும் உன் நினைவே
யார் அடைந்தாரோ உன் பரிசை
அனுபவிப்பார் உன் கைவரிசை
துன்பம் நீக்கக் குரல் கொடுத்தேன்
நான் குரலின்றி வீசும் அலைவரிசை
(கடலை…
ஊர்கொண்டு இழுத்தால் தேராகும்
புரவிகள் இழுத்தால் போராகும்
நினைவுகள் இழுத்தே வீணாகிறேன்
என் சுயம்வரக் குதிரை நிழலினிலே
இரு மலர் வலைகள் மங்களமே
பல மலர் வலைகள் இரங்களிலே
காதல் உணர்வுகள் சமமில்லையோ?
என் ஆழத்திற்க் கிணையென நீ இல்லையோ?
(கடலை…
சாதனைப் பூவென சட்டையிலே
சொருகிடத்தானோ நான் கிடைத்தேன்?
வாடிடும் நிலையில் வீசிவிட
சமயம் வந்ததும் செய்துவிட்டாய்
உணர்ச்சிக் கடலில் மூழ்கிவிட்டேன்
முத்துக் குளிப்பதாய் எண்ணமில்லை
சதையினை மட்டும் காதலித்தாய்
அது சடலமாய்க் கிடைத்தால் என்ன செய்வாய்?
(கடலை…
Monday, April 19, 2004
# 51 பூமகளே
வீசும் காற்றும் சுவையாகும்
குரல் கொடு
இல்லா சுகம் சேர்ந்திடும் இயற்கையில்
வாய்மொழிந்தால் நீ
பூமகளே...
மணல் ஆவேன் நீ வேரூண்றவா
புல்லாவேன் நீ பனி மூடவா
செந்தாமரை...செந்தாமரை கண்களில் வாழ்கிறாய்
கண்கள் நீர்குளம், எங்கும் நீந்தினாய்
பூமகளே...
நிஜமது கசந்த பின்னும் சோகமில்லையே
நினைவிற்கு செலுத்திவிட்டேன் இந்த வாழ்க்கையே
பாதைகள் மாறிட பாசம் மாறுமோ?
தள்ளி வைத்த பூவில் வாசம் நீங்குமோ?
செந்தாமரை கண்களில் வாழ்கிறாய்
நெஞ்சுக்கூட்டிலே தீயை மூட்டினாய்
கண்கள் நீர்குளம், எங்கும் நீந்தினாய்
பூமகளே...
துரைமுகம் தேடும் தோனி தத்தலிக்கையில்
கலங்கரை விளக்கம் எல்லாம் உந்தன் பாடலே
மெய் உயிர் என்றெழுத்தை யார் பிறித்தது?
கொடியினைக் கத்தரித்து யார் பூ எடுத்தது?
செந்தாமரை கண்களில் வாழ்கிறாய்
கண்கள் நீர்குளம் எங்கும் நீந்தினாய்
பூமகளே...
