உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, May 08, 2004
# 144 வாகன வேகத்தில
வாகன வேகத்தில
விடுபட்ட உள்ளமிது
வழியனுப்பும் மரமெல்லாம்
உதிர்த்துவிட்ட எண்ணமிது
மயில் கல்லு எத்தனையோ
மணிக்கணக்கா போகையில
மனசுமட்டும் உன்னை சுத்த
பின் தங்கும் என் நெனப்பு
புகைமூட்டம் இல்லாத
புகைப்படமாய் நடந்ததெல்லாம்
பனிக்கல்லாய் ஒறைஞ்சிருக்கும்
பசுமையா நெஞ்சுக்குள்ள
சாட்டைக்கயிறப் போல
சொழட்டிவிடும் உஞ்சிரிப்பு
பம்பரமாய் ஆட்டுதடி
பாவி மகன் சிந்தனையை
மின்சாரம் போயிருந்த
மச்சுவீட்டு இருட்டிலே
ஊர்கதை பேசையில
உள்ளத்தில பதுங்குனியே
சின்ன சின்ன அசைவுல
சோறு பரிமாரயில
எலையிலே விழுமுன்னே
நெஞ்செல்லாம் நெறைஞ்சதடி
கண் நெறைய ஆசை வந்தும்
வேலை வசதி இல்லை
கல்யாண காலம் வந்து
வேறொருத்தன் கூட நீயும்
படிதாண்டி போனப்பவே
இடிதாங்கி ஆனேம்புள்ளை
காலம் கடந்து வாரேன்
குடியிருந்த கிராமத்துக்கு
ஊலைக்காத்து வீசுதடி
ஓங்கதையைப் பேசுதடி
சேத்து மண்ணு பூரா இப்போ
தார் உறுகி பொங்குதடி
சேத்து வெச்ச பாசம் கண்ணை
ஊத்தெடுக்கப் பாக்குதடி
Comments:
Post a Comment
