உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, June 13, 2005
# 169 பருதாவுக்குள் பருவ நிலா
முகத்திரை விலக்கி நீ நீர் அருந்த
முக தரிசனத்தில் என் தாகம் பிறந்தது
வாசம் புனிதம் என்றால்
நுகரும் சக்தி கொடுப்பானா?
கீதம் உரிமைக்கென்றால்
எவரும் கேட்கப் படைப்பானா?
தாமரை கூட தண்டைத்தானே மறைக்கிறது?
தள்ளிவைத்தும் தாழை ஏன் மணக்கிறது?
ரசனை தவறாயிருந்தால் அழகைப் படைத்திருப்பானா?
ருசிக்கக் கூடாதென்றால் சுவையை சேர்த்திருப்பானா?
சோலையைப் பாதுகாக்க போர்வையால் மூடவில்லையே?
அருவியை சேகரிக்க அளவு பார்த்து ஊற்றவில்லையே?
மின்மினிகள் பிரகாசிக்க உத்தரவு கேட்பதில்லையே?
கண் இமைகள் சிமிட்டியுமே கண்மணிகள் ஒளிவதில்லையே
ஆடை என்ற பெயரில் உன் அழகுக்கு கறுப்புக்கொடி
ஆசை என்ற இயற்கைக்கு மதம் என்னும் தடுப்பூசி
ஆடை கலைந்தோர் எல்லாம் சம்சாரியா?
ஆசை கலைந்தோர் எல்லாம் சன்யாசியா?
உன் உருவத்தை சிறை வைத்தால்
பருவம் பதுங்குமா?
ஆடைக்குள்ளே அதன் அங்கலாய்ப்பு
அலைமோதும் தோனியின் அனுசரிப்பு
ஈர்ப்பு சக்தி இழப்பது நிலவுக்குள்ளேதான்
நான் பூமியென பிரமிப்பது என் இயல்புதான்
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்
நீ நிலவாய் இருந்திருந்தால்
மேகம் கூட மூட விரும்பாது உன்னை
