<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 27, 2007
 
# 244 அந்தி வரட்டும்
எச்சரிக்கையின்றி பொங்கியெழுந்து
அதரத்தில் வெடித்துச் சிதறும்
உன் சிரிப்பு
ஓயாமல் ஒலிக்குதடா
உள்மனதில்

மொழியிலா தென்றலாய்
முனகி வரும் உன் பேச்சு
பணிபுரியும் கவனத்தை
திருப்புதடா திரும்பவும்

தொழில் ஒரு சடங்காகி
சோடைபோனதென்றோ
சொந்தம் ஒரு ஒப்பந்தம்
புரியும் பார் விரைவில்
நிறைவேற்றும் கடனுக்கேற்ப
நிழல் கிடைக்கும் அங்கே

இவ்வுலகின் தன்மைகளை
நீ புரிந்து ஆளுமுன்
விண்ணப்பம் தேவைகளை
நீ அடுக்கிப்போகுமுன்
கொடுக்கல் வாங்கல் வாழ்க்கையில்
நீயும் வழக்காடுமுன்

உன் விலையிலா பாசத்தில்
ஒளிவான் உன் தந்தை

உன்னைச் சேர்ந்து
என்னை மறக்க
அந்தி வரட்டும்
அது வரையில் கடமையை
செய்ய விடு கண்ணா
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 243 ஊசிப்பார்வை
ஊசிப்பார்வையால் எனை நூற்க்கிறாள்
ஆசை நூலாக நெஞ்சைப் பிண்ணுதே

இருள் வானின் போர்வையிலே
அடைபட்ட இதயத்தை
வைரப் புன்னகையுடனே
சிறு மின்னல் சிறை மீட்க

ரணமான இடமெல்லாம்
ரம்மியமாய் புதுப்பிக்க

ஊசிப்பார்வையால் எனை நூற்க்கிறாள்
ஆசை நூலாக நெஞ்சைப் பிண்ணுதே

மனமே தாளாக
அதில் இவள் சிதறும் மையாக
பின் வார்த்தை கோர்த்த பா ஆக
மென்மேலும் வளர்கிறாள்
வடிவம் பெருகிறாள்
ஊடுருவி

ஊசிப்பார்வையால் எனை நூற்க்கிறாள்
ஆசை நூலாக நெஞ்சைப் பிண்ணுதே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com