உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, September 06, 2006
# 226 புத்துயிர்
சேதப் புயலில் சிக்கித் தவித்து
மாமலரொன்று மிரண்டு விழ
ஓடை மடியேந்தி
இலைமேடை அமைத்துத் தர
ஊர்வலமாய் பவனி வரும்
உல்லாச நிலை போலே
குடிவிலகி கீழ் விழுந்தும்
குன்றாத மதிப்போடு
உனை ஏந்திப் பிடித்திட நான்
ஓடையாய் காத்திருப்பேன்
இலைமேடை போல் இங்கே
மணமேடை அமைத்திடலாம்
ஊர்வலமாய் வாழ்ந்திருக்க
உல்லாச உறவிருக்க
பழைமைத் தீயில் உன்னை
பழுதுபார்த்து என்ன பயன்?
புத்துயிர் என்பது மற்றொரு பிறப்பிலல்ல
பிறர் கண்ணில் உன்னை பார்க்காதிருப்பதில்
# 225 வாடைக்குள்ளே சூடு
"ஆடி வெள்ளி தேடி உன்னை" என்ற கண்ணதாசனின் அற்புதமான அந்தாதி வடிவப் பாடலுக்கு எனது மொழியில் ஒரு எளிய முயற்சி
ஆண்:
வாடைக்குள்ளே சூடு வைக்கும் வாச மல்லிச் சாரம்
காலமெல்லாம் தேடுகின்றேன் காணவில்லை யாரும்...
காணவில்லை யாரும்...
பெண்:
யாரும் வந்து வாங்கிச் செல்லும் போதை அல்ல மோகம்
ஓர் மனதில் யாகம் வைத்தால் சேருமிந்த யோகம்...
சேருமிந்த யோகம்...
ஆண்:
யோகம் வெள்ள யாகம் என்ன தியாகம் செய்து நாட
நாளும் சித்தம் கேட்டுபாரேன் எந்தன் உயிர் கூட
பெண்:
கூட வரும் நெஞ்சினிலே காதல் ஜோதி வாழும்
வாழும் வரை செர்ந்திருந்தால் தேவையில்லை மீதம்
தேவையில்லை மீதம்
ஆண்:
மீதமின்றி அள்ளித்தர வேகம் கொண்ட காளை
காத்திருக்க வேண்டுமென்றால் பார்த்திருக்கும் நாளை
பெண்:
நாளை வரும் வேளையென்று நம்புகின்ற உள்ளம்
கண் சிவக்கும் சம்பவத்தை புன்சிரிப்பில் தள்ளும்
புன்சிரிப்பில் தள்ளும்
Sunday, September 03, 2006
# 224 ஊமை எழுத்து
சமுதாய வீதியில் சேர்த்திடாத போதும்
சன்னமான ஒளியில் பிரகாசிக்கும் உறவிது
அங்கீகறிப்பிற்கென அசலுலகில் வீடு
முகவரி சாட்சியின்றி மறைவில் சின்ன வீடு
இதயமெங்கும் நிலவும் இன்பமிங்கு இரவல்
கதிருறங்கும் இரவில் இவருலகின் விடியல்
பிறியும்போது அணைந்திடும்
இணையும் போது மிளிர்ந்திடும்
படி தாண்டிய உடனே பிடிபோகும் உரிமை
அடிக்கோடிட வைக்கும் ஆசையிதன் மகிமை
ஊராரின் பார்வையில் சகலமும் புலப்படும்
நடவடிக்கையின்றியே நடைபெறும் நாடகம்
கொண்டவர் யாருக்கும் அனுமதிக்க மனமில்லை
அடைக்கலம் தேடுவோர் அனுசரிக்க வழியில்லை
அவசியத்தின் நிருவலே நிழலுலக சுயம்வரம்
வார்த்தைக்குள் எழுத்தென அச்சிலேறி அமர்ந்துமே
வாய்ச்சொல்லில் இடம்பெறா ஊமை எழுத்திது
இறந்தவன் உயிலில் இடம் கிடைக்கையிலே
சகதியை மறந்து சேர்ந்திடும் தகுதி
