<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, January 04, 2006
 
# 184 கற்பனைத் தூண்டில்
கற்பனைத் தூண்டிலைக் காற்றில் வீசினேன்
கைக்கு வந்தன சில உவமைகள்

துண்டு நிலவு
சாவி நுழைவழி
காரிருள் வானம்
கருங்கதவாம்

பனி மழை
தேவதைகளின்
தலையனைப்போராம்

மேகக் கூட்டங்கள்
வானவர்களின்
ஊதுவர்த்தி புகையாம்

விண்மீன்கள் ஓட்டைகளாம்
பின் ஒளிந்திருப்பது
ஒளிப்புனலாம்
வானின் நிர்வாணம்
பகற்பொழுதாம்

கால நேரங்கள்
வித்தைகளாம்
வயது வாழ்க்கைக் கட்டினமாம்
நோய் மருந்துகள் வட்டிகளாம்
மரணம் மொத்த முதல் தொகையாம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 183 ஆயுள்
அந்த வானின் வயதைக் கேட்டேன்
பதில் காற்றில் வந்தது
எனைக் கேலி செய்வது போல
கேள்வி மீண்டும் ஒலித்தது

இந்தப் பூவின் வயதைக் கேட்டேன்
அதன் வாசம் வந்தது
இந்த வாசம் போன பின்னே
ஏது வாழ்க்கை என்றதோ?

அந்த நதியின் ஆயுள் என்ன?
என்ற கேள்வி கேட்டதும்
அது கரையை நோக்கிப் பாய்ந்து
நிலப் பசியைக் குறித்தது

இந்த பூமியின் ஆயுள் என்ன?
நான் பயந்து கேட்டதும்
என் கையில் புழுதி ஏற்றி
அது நம் கையில் என்றது
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com