உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, July 26, 2006
# 217 பிஞ்சுத் தாமரை
கண்ணதாசன் எழுதாத கவிதையா
நீ எழுதப் போகிறாய்?
பரதமாட நீ என்ன பத்மினியா?
இசை பயில நீ என்ன இசைஞானியா?
ரவி வர்மன் என்ற நினைப்பா?
உனக்கெதுக்கு ஓவியம்?
பாகவதர் என்ற பிரம்மையா?
உன் பாட்டை நிப்பாட்டுவாயா?
என்று என்னைக் கேட்டவரை எல்லாம்
ஒரு குளத்திற்கு அழைத்து
ஒரு பிஞ்சுத் தாமரையை
கிள்ளியெறிந்து மிதித்தேன்
என்னைக் கொடியவனைப் போல் பார்த்துவிட்டு
கூட்டம் விளக்கம் கேட்டது என் செயலுக்கு.
"சுற்றிலும் மலர்ந்து பெரிதாகப் படர்ந்த
பிற தாமரைகளை விடவா
இந்தப் பிஞ்சு மலர் சாதித்துவிடப் போகிறது?"
என்று கேட்டுவிட்டு பிறிந்தேன்
என் கலையைப் பயில
Monday, July 24, 2006
# 216 காதலர்கள் தோளுரசத்தானே...
இந்தப் பாடல் வரிகளின் வீச்சும் அமைப்பும், ஜாஸ் இசையின் மேல் எனக்குள்ள அபரிமிதமான ஆர்வத்தின் விளைவு. நான் இசைக் கலைஞனாய் இல்லாதபோதும் இப்பாடலின் ஒலி வடிவமும் வாத்திய அம்சங்களும் என் மனதில் எப்படியோ பதிந்துவிட்டன. அதை விரைவில் சில நண்பர்களின் தயவில் வெளிக்கொண்டு வருவேன்.
சோலை மலர் ஓடை கொடுத்தானே
காதலர்கள் தோளுரசத்தானே
காற்று கூட காதல் சேரத்தானே
தென்றல் என்று பேரை மாற்றினானே
சேதி சொல்லடி செல்லக் கள்ளி
சேதமல்லடி இன்ப வள்ளி
ஊருலகம் பூட்டி வைக்க காதலென்ன குற்றமா?
நான்கு சுவர் சூழ்ந்திருக்க காதல் என்ன கைதியா?
அன்ப வெளிப்படுத்த இத்தனை சோகமா?
அடுத்தவன் சந்தோசம் தடுப்பது நியாயமா?
சோலை மலர் ஓடை கொடுத்தானே...
காதலர்கள் தோளுரசத்தானே...
மைனாக் குருவிகள் மரக்கிளையில் கொஞ்சிட
யாருமில்லையே அங்கு தடை சொல்லிட
ஏனோ நம்மையும் ஊர் கவுக்கப் பாக்குது
தீமை ஒழிப்பதாய் கத்தி கம்பை தூக்குது
காதல் நெஞ்சின் ஆழம் தெரியாது
ஆள் மறிக்கும் ஆசை மறிக்காது
சோலை மலர் ஓடை கொடுத்தானே
காதலர்கள் தோளுரசத்தானே
காற்று கூட காதல் சேரத்தானே
தென்றல் என்று பேரை மாற்றினானே
சேதி சொல்லடி செல்லக் கள்ளி
சேதமல்லடி இன்ப வள்ளி
ஊருலகம் பூட்டி வைக்க காதலென்ன குற்றமா?
நான்கு சுவர் சூழ்ந்திருக்க காதல் என்ன கைதியா?
அன்ப வெளிப்படுத்த இத்தனை சோகமா?
அடுத்தவன் சந்தோசம் தடுப்பது நியாயமா?
சோலை மலர் ஓடை கொடுத்தானே...
காதலர்கள் தோளுரசத்தானே...
