உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, June 08, 2006
# 208 இசைக் கார்த்திகை
திரு. எஸ்.பீ.பி. அவர்களின் அறுபதாம் பிறந்ததினத்தை முன்னிட்டு அவருடன் நடத்திய தொலைபேசி சந்திப்பில் படித்துக் காட்டிய வாழ்த்து இது:
என் மனச்சோலையின் நிரந்தர இசைமேகமே
உங்கள் வருகையைக் கொண்டாடும் காணிக்கை மடல் இது
இதைக் கவிதை என்று
நினைக்காவிட்டாலும் சரி
கட்டுக்கதை என்று மட்டும்
நினைத்துவிடாதீர்கள்
ஒரு குழந்தையின் உணவுப்பழக்கம்
பாலில் தொடங்கிப் பிறகு பல்சுவைகளையும்
சுவைக்கும் நிலைக்கு
படிப்படியாக வளர்கிறது
ஆனாலும், பிறவி முழுதும் அடிப்படை சக்திக்கு
பால் அவசியப்படுகிறது
தமிழில் பாலுன்னு எழுதினாலும் பாலுன்னு
எழுதினாலும் ஒன்றாகத்தான் இருக்கும்
தமிழ் இசைப் பாடல் என்று எடுத்துக்கொண்டால்
எனக்குத் தாய்ப்பால் தமிழ்ப்பால்
எல்லாமே நீங்கள்தான் அய்யா
இசையும் சந்தமும் தெய்வீகம் என்றால்
அவற்றில் மொழியை நீங்கள் பிரசாதமாக
வழங்கினீர்கள் உங்கள் குரலில்
அந்தக் குரலில் இல்லாத குணமும் உண்டா?
அந்தக் குரல் காணாத உணர்வும் உண்டா?
வெகு நாட்களுக்குப் பிறகு நீங்கள்
நடிக்க வந்ததாய் சொன்னார்கள் நண்பர்கள்.
இதென்ன வேடிக்கை?
"அவர் பின்னணி பாடினாலும் நடிகனின் குணச்சித்திரமாய்
அவனது உணர்ச்சிப் பெருக்காய் முன்னணியில்
இத்தனைக் காலம் வாழ்ந்துதானே வந்திருக்கிறார்"
என்றேன்
உங்கள் அறிமுகமே ஒரு ஏகாந்தப் பரிசு எனக்கு
ஆனால் உங்கள் மூலம் எத்தனையோ கலைஞர்களை
நான் இனம்கண்டு கொண்டேன் என்றால் அது மிகையாகாது
ஒரு காலத்தில் அத்தனை சாலைகளும்
ரோமாபுரியையே எட்டும் என்கிற சொல் வழக்கத்தில் இருந்தது.
என் இசை ராஜ்ஜியத்தின்
நியதி இதற்கு நேர் எதிர்.
எந்த தமிழிசை அமைப்பாளரையும், பாடகரையும்
உங்களை வைத்துதான் நான் நேசிக்கத் தொடங்கினேன்
அதனால் எனக்கு எல்லா இசைச் சாலைகளும்
உங்களிலிருந்தே தொடங்கும்
மன்னியுங்கள் அப்பொழுது சிறுவன் நான்.
திருவிளையாடல் இசை கே.வி. மகாதெவன் என்று
கேள்விப்பட்டு உடனே
"ஓ, நம்ம எஸ்.பீ.பி.க்கு 'ஆயிரம் நிலவே வா'
பாட்டு போட்டாரே அவரா என்றேன்"
'மழை தருமோ என் மேகம்' என்ற உங்கள்
பாடலைக் கேட்டவுடன்
பித்தாக அலைந்து தேடி அறிந்து, ஷ்யாம்
என்ற உள் வட்டம் மட்டுமே அறிந்திருந்த மேதையை
என் அன்றாட தெய்வங்களில் ஒன்றாக்கினேன்
'தொடுவதென்ன தென்றலோ' கேட்டுத்தான்
ஜி. கே.வி. அவர்களை பரிச்சயம் செய்து கொண்டேன்
'படைத்தானே பிரம்மதேவன்' என்ற பாடலின் தாக்கத்தில்
மெய்மறந்து லயித்துத்தான்
வி.குமார் அவர்களின் உண்மையான தன்மையை புரிந்துகொண்டேன்
'அன்பு மேகமே இங்கு ஓடி வா' என்று நீங்கள்
வருடி அழைக்க, அந்த கிறக்கத்திலேயே
யாரிந்த விஜயபாஸ்கர்? என்று அலசி
அவரது பாடலையெல்லாம்
என் நினைவுப் பக்கங்களில்
மயிலிறகாக்கினேன்
தக்ஷிணாமூர்த்தி அவர்களைத் தெரியாதென்று
யாரும் சொன்னால், 'அட கொடுத்து வைக்காதவனே'
என்று கடிந்து, 'நந்தா நீ என் நிலா' பாடலைப் போடுவேன்.
சிவாஜி ராஜாவைத் தெரியாது என்றால் அங்கே
'சின்ன சின்ன மேகம்' உடனே பொழியும்
இதுபோல் எத்தனையோ...எனக்கும் என் நண்பர்களுக்கும்
உங்கள் படைப்புகள் பிறரை சுட்டிகாட்டும்
கலங்கரை விளக்கமாய் விளங்கி வருகின்றன.
உங்கள் துதியை ஓயாமல் பாட முடியும்
ஆனால் நேரம் எனும் அரக்கன்
என்னை நிறுத்தச் சொல்கிறான்
உங்களுடன் முன்பு ஒரு முத்தான உரையாடல்.
இன்று இன்னொன்று பாக்கியமாக கிடைத்திருக்கிறது...
செர்ரி மலர்களின் நம்பகமே
அவை குறுகிய காலத்தில் தோன்றி மறைந்துவிடும்
அறிய காட்சிதானாம்
ஆனாலும் செர்ரிகளின் மலர்ச்சியை
ஒரு முறை பார்த்தாலே
அது வாழ்வில் நீங்காத பாதிப்பை ஏற்படுத்துமாம்...
அது போலவே உங்கள் தோழமை
எங்களுக்கும் அய்யா.
சாமானியர்களின் வயதைத்தான்
மெழுகை அமர்த்திக் கொண்டாடுவார்கள்
பாடும் நிலாவிற்கு ஒலியாலே ஒளி வீசித்தானே பழக்கம்
அறுபது விளக்குகளை சுற்றிலும் ஏற்றி
இசைக் கார்த்திகையாக
உங்கள் பாடல்களை ஒலித்துக் கொண்டாடினால்தான்
உங்கள் பிறந்தநாளுக்குப் பொருந்தும்
ஆனந்தத்தால் ஆயுள் கூடுமாம்.
எங்கள் ஆயுள்களை அதிகரித்த உங்களுக்கு
ஆயுள் மேலும் பன்மடங்காய் நீடிக்க
வாழ்த்துக்கள்
Sunday, June 04, 2006
# 207 சங்க கால அரசி
வழக்கம்போலவே போன வெள்ளி
சந்தைக்கடை அடைத்து சாயங்காலம்
பேருந்து நிலையத்தில் காத்திருக்க
காலம் கடத்திப் போனதென்னை
பல ஆயிரம் வருடங்கள் முன்பு...
ரூபென், ரவி வர்மா வரைந்ததுபோல்
தற்கால மதிப்பீட்டில் அடங்காததோர்
கம்பீரப் பெண்மை கண்முன்னே!
ஆடை ஆபரணம் ஒளி வீசி
ஒப்பணை பொடிகளுடன் மை பூசி
காலத்தை மீறிய காவியம்போல்
சங்ககால அரசியவள் காணக்கண்டேன்
பக்கத்து ஊரிலே நாடகமாம்
நாலைந்து காட்சிகளே இவள் ஆட்சியாம்
பட்டாடை நகைநட்டு அத்தனையும்
சில மணிநேரத்து வாடகையாம்
கொக்கரிக்கும் கோழிகளும் கூடைகளாய் காய்கறியும்
பிரயாணித்த வாகனத்தில் மனிதர்களும் ஏறினோம்
இத்தனை நெரிசலிலே அரசியும் நிற்பதா?
என் இறுக்கை தானத்தில் அரசிக்கு ஆசனம்
அருகில் இருந்தவரை நகரச்சொல்லி வேண்டுதல்
அலுங்காமல் குலுங்காமல் ஏழுமணியாட்டத்திற்கு
இந்த சேவகன் சேர்த்துவிட்டேன்
சங்க கால அரசியை
