<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, March 20, 2009
 
# 275 தாய்வீடு
274-க்கு எழுதிய மெட்டிற்கே வேறு விதத்தில் இயற்கை பராமரிப்பு, பச்சை புரட்சியென்று எழுதியது:

பூரிக்கும் உள்ளம் இது இயற்கை நாடும்
பார்வைக்கு யாவும் பரவசமாகும்
வித வித உடைகள் மாற்றுவாள்
வெப்பம், பனி, மழை காட்டுவாள்

இதயங்கள் போலே உதயம்
ஒவ்வொன்றும் ஒரு குனமே
ஒரு நிறமாய் நின்ற இலைகள்
பல வகையாய் மாறிவருமே

பச்சை உலகத்தை
பார்த்து கொண்டாடு
என்றும் தாய்வீடு
இதை இழக்கலாகாது

பாலைமண் விதையெலாம்
ஒருநாள் மழையில் பூக்கலாம்,
பிறந்ததும் நடக்கிற
பிஞ்சுக் குதிரை பார்க்கலாம்,
எரிமலையும் செதுக்கிப் போகும் சிற்பமே
இதையெல்லாம் மறக்கலாமா மனிதனே?
உயிர்மூச்சையும் தரும் தாவரம் வாழ வைப்போமா?

பச்சை உலகத்தை
பார்த்து கொண்டாடு
என்றும் தாய்வீடு
இதை இழக்கலாகாது

ஓடைக்கே ஆடைபோல்
இலைகள் படர்ந்த அம்சமே
காணத்தான் முடியுமா
கட்டிட நகரம் கூடிவந்தால்?
எதிர்கால தாகத்திற்கு ஒட்டகம்
நிகழ்காலம் சேமிப்பதுபோல் நாமுமே
தாய்பூமியை பல தலைமுறை வாழ வைப்போமே!

பச்சை உலகத்தை
பார்த்து கொண்டாடு
என்றும் தாய்வீடு
இதை இழக்கலாகாது
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, March 16, 2009
 
# 274 கோரிக்கை
நண்பன் சிரீகாந்தின் இசைக்கு இயற்றிய பாடலிது. ஒரு இளம் பெண் இலையுதிர்காலத்தை நீடிக்கச்சொல்லி இயற்கை அண்ணையிடம் கோரிக்கையிடுவதாய் கற்பனை.

பூரிக்கும் உள்ளம் இது இலையுதிர்காலம்
வாடைக்கு முன்னே புதுப்பிக்கும் காலம்
வித வித உடைகள் மாற்றுவாள்
பழையதை உலுக்கியும் நீக்குவாள்

ஒளி கொஞ்சம் மங்கியதாலே
பல வண்ணம் தென்படுமே
ஒரு நிறமாய் நின்ற இலைகள்
பல தினுசாய் மாறிவருமே

முத்து மனதம்மா
சற்று பொரு அம்மா
வாடை காற்றைத் தாமதித்து
வண்ணம் காட்டம்மா

வாடிக்கை என்பதால்
மீண்டும் அதையே செய்வதா?
கோரிக்கை செய்திடும்
குமரியின் பேச்சைக் கேட்பதால்
முக்காடு போடும் முகங்கள் மலருமே
எங்கெங்கும் சிரித்த படியே மனிதரும்,
நடமாடிட, கலை கூடிட, நீயும் செய்வாயா?

முத்து மனதம்மா
சற்று பொரு அம்மா
வாடை காற்றைத் தாமதித்து
வண்ணம் காட்டம்மா

ஓடைக்கே ஆடைபோல்
இலைகள் படர்ந்த அம்சமே
காணத்தான் முடியுமா?
குளிரும் பனியும் கொண்டுவந்தால்
படகெல்லாம் ஓரம்கட்டி கிடக்குமே
உடலெல்லாம் விரைத்த படியே மனிதரும்,
சிரிக்காமலே, ரசிக்காமலே, இயந்திரம்போலே நகருவதா?

முத்து மனதம்மா
சற்று பொரு அம்மா
வாடை காற்றைத் தாமதித்து
வண்ணம் காட்டம்மா
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com