உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, May 05, 2006
# 200 காதல் அகராதி
காதல் அகராதியில் கோடி அர்த்தமுண்டு
எனக்கு தெரிந்ததெல்லாம் இங்கு சொல்லுகின்றேன்
பற்றாமல் எரியும் ஜோதி
செலுத்த முடியாத சக்தி
ஓடி ஒளியாத உண்மை
மறைக்க முடியாத ரகசியம்
பக்தியில்லாத பரவசம்
உணர்த்த முடியாத உணர்வு
கவர்ச்சியான பாசம்
தவிர்க்க முடியாத தீவிரம்
சுயநலம் கலந்த தியாகம்
சேமிக்க முடியாத செல்வம்
மிதக்க வைக்கும் பித்து
தீர்க்க முடியாத வியாதி
தன்னை இழக்கும் தேடல்
செரிக்க முடியாத சுமை
வரவழைக்காத நினைவு
விரட்ட முடியாத எண்ணம்
பிறரை எண்ணி வாழ்தல்
ஆள முடியாத ஆற்றல்
தேடி அடையும் சொந்தம்
கணிக்க முடியாத பந்தம்
Thursday, May 04, 2006
# 199 அமுதகானம்
புகைந்து கொண்டிருக்கும் இனம்புரியா ஏக்கங்களை
அங்கீகரித்து அலசிட
சோக முனகலாய் சாரங்கி...
முடிவில்லா தொடக்கமாய்
காலத்தைக் கட்டிப் போட்டு
நிற்கவா நடக்கவா என்ற தீர்மானம் தேவையின்றி
நிலைகளைப் பொய்த்தபடி
தடம் பதிக்கும் தபேலா...
இவை மத்தியில் மூச்சுக் காற்றை
உயிர்குழாய்களில் வழியவிட்டு
சாதகப் புயலில் சூடுசெய்து
எண்ணி முடியாத கட்டைகளில் பண்டிதன்
பாடல் வரிகளாய் பதம்பார்த்து
அசைபோட்டுப் பரிசீலித்து அரவனைத்து
புடம்போட்டுப் படியேற்றி
அனுப்பி விடும் அமுதகானமே
கசல் பாடல்
Monday, May 01, 2006
# 198 தமிழுக்கொரு கண்ணகி
மந்தமாருதமெல்லாம் மந்தமாகக் காரணம்
சந்தமிங்கு செத்துப்போனதே
கட்டும் தமிழ் கவிதை
மெட்டுக்கென்ற நிலையில்
சொற்சுவையும் குட்டுப்பட்டதே
மெல்லினத்தில் இருந்தால் பாடுவது சுலபம்
சாக்கு சொல்லி பொட்டழிக்கிறான்
தமிழை
மெட்டுக்காரன் பொட்டழிக்கிறான்
பொருள் நீங்கி விதவை ஆகிவிட்ட பிறகு
வார்த்தைகளைக் கற்பழிக்கிறான்
இசைக்கென வார்த்தைகளைக் கற்பழிக்கிறான்
உடந்தை பாடகனும் சேர்ந்திருக்கிறான்
வெட்கம்கெட்ட ரசிகன்
கப்பம் கட்டிக் கேட்பதால்
செவிகளில் காறி உமிழ்வார்
தமிழரின்
செவிகளில் காறி உமிழ்வார்
துரோகிகளை சுட்டெறிக்க
தமிழுக்கொரு கண்ணகி
சிலம்பெடுக்கப்போவதில்லையா?
கற்பு பெண்ணுக்குண்டு
தமிழுக்கில்லையா?
