உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, June 01, 2005
# 167 மழை கோர்க்கா வான்மேகம்
மனக்கதவுக்குள்ளே
மடிந்திடவா இந்த எண்ணங்கள்?
அர்த்தம் கண்டு கொள்ள ஆள் இல்லையே
அடித்துத் திருத்தவும் வாய்ப்பில்லையே
முயற்சி இல்லாது
மூர்ச்சையாகவா ஏக்கங்கள்?
ஏற்பு காணா யோசனை சொல்ல
துணிவிருந்தால் நிச்சயம்
பழமை கண்டு பயமறியாது
புலமை வெல்லும் லட்சியம்
துணிவு தூங்குகையில்
தன்மானம் விரயம்
தன்னிரக்க சுகத்தில்
கோழைமை நிறையும்
வெளியேறா வார்த்தை எல்லாம்
விலைபோகா வியாபாரம்
எதிர்ப்பு சொல்ல மறந்தவன்
ஒத்துப் போவதாய் உவமானம்
செவி சேரா சிந்தனைகள்
மழைகோர்க்கா வான்மேகம்
மேகம் வானுலாவி வேடிக்கை மட்டும்
காட்ட நினைத்தால் என்னாகும்?
சிந்தனை பகிர்ந்த உரையாடலில்
சிக்கல் தீர்ந்து தெளிவாகும்
இருள் போர்வை மூடிய நெஞ்சில்
சூரியனுக்கே சிறைவாசம்
