# 159 சுண்டி இழுத்தால் சூரியன் கையோடு
பாடல் தலைப்பை அழுத்தினால், இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்தின் இணையத் தளத்தில் இந்தப் பாடலின் இசை வடிவம் அடங்கிய பகுதிக்கு கொண்டு செல்லும்!
(VERSE)
அந்த நிலவைக் கொடியில் காயவிடு
இந்த காற்றின் விசையை ஏற்றிவிடு
மரபுக்கு நீ மனதைக் கொடுத்துவிட்டால்
புரட்சி இங்கு விழிப்பது எப்பொழுது?
(CHORUS)
சுண்டி இழுத்தால் சூரியன் கையோடு
வீசிப் பார் வீசிப் பார் வலை வாலிபமே
விண்ணை இறக்கி வீட்டுக் கூரையிடு
வீசிப் பார் வீசிப் பார் வலை வாலிபமே
(VERSE)
பிரம்பென நரம்பிங்கு புடைக்குது புடைக்குது புடைக்குது
எழுந்திட மரபுன்னை தடுக்குது தடுக்குது தடுக்குது
பொருத்திடு பகிர்ந்திடு இருப்பதை மகிழ்ந்திடு
சிறுதுளி பெருவெள்ளம் போதனை பழங்கதை
உடலுக்கு உரமுண்டு இனியென்ன வழக்கு
நிலத்தினில் உரமது இறந்தபின் கணக்கு
அடக்கம் செய்வது உன் முடிவில்
ஆடிப் பார்த்திடு அது வரையில்
(CHORUS)
சுண்டி இழுத்தால் சூரியன் கையோடு
வீசிப் பார் வீசிப் பார் வலை வாலிபமே
விண்ணை இறக்கி வீட்டுக் கூரையிடு
வீசிப் பார் வீசிப் பார் வலை வாலிபமே
வீசிப் பார் வலை வாலிபமே
(VERSE)
இயற்கையின் விதியை மாற்றிப்பார்
தாமரையை தரையில் பிறக்க விடு
பெண் மயிலும் தோகை விரிக்கட்டும்
அதன் முதுகில் இறகைச் சொருகிவிடு
சொர்க்கம் என்னடா மூடரின் ஆசைகளே
ரத்தம் சிந்திப்பார் மண்ணும் மாளிகையே
கடிவாளம் மூடமையே, கட்டவிழ்த்துவிடு
சுரக்காத தேன்கூட்டை சுட்டெறித்துவிடு
பழுதான பழமொழிகள் பற்றியெரியவிடு
வறட்சி வேரிலே புரட்சி பூசிவிடு
விளையாத மண்ணின் விதியே மாற்றிவிடு
காட்டாறு வெள்ளமாகுமுன் கால்வாய் வெட்டிவிடு
வடக்கு வாழ தெற்கு தேயும்
வழக்கம் ஓட்டிவிடு
இடக்கு பேசும் இனவெறிக் கூட்டம்
இல்லாதாக்கிவிடு
மழை சிதறா வேளையிலே
முகிலை உருக்கிவிடு
காலச் சக்கர வேகத்தின்
காற்றிறக்கிவிடு
அறிவால் மாற்றாவிடில்
அறுவாள் மாற்றும் நிலை
மயிலே இறகு என்றால்
மாறாதென்றும் கதை
(Chorus)
சுண்டி இழுத்தால் சூரியன் கையோடு
வீசிப் பார் வீசிப் பார்
வலை வாலிபமே
விண்ணை இறக்கி வீட்டுக் கூரையிடு
வீசிப் பார் வீசிப் பார்
வலை வாலிபமே
# 158 இருட்டு வேளையில் (aka The Cart Song)
பாடல் தலைப்பை அழுத்தினால், இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்தின் இணையத் தளத்தில் இந்தப் பாடலின் இசை வடிவம் அடங்கிய பகுதிக்கு கொண்டு செல்லும்!
இருட்டு வேளையில் கறுப்பு சாலையில் வெண்மதி ஓடுதுங்க*
அந்த முறட்டு சூரியன் முறைப்பதைக் கண்டு முகத்தை மூடுதுங்க*
வயக்காடு கெழக்கால வழிப் பாதை மேற்க்கால
எட்டுத் திக்கும் தேடி உன்னை காணலியே
நான் வீடு செல்லுமுன்னே கதிர் மேற்கே மறையுமடி
வெளிச்சமா உன் சிரிப்பு போதுமே
ஊரறிஞ்ச உண்மை என் உறவு காத்த பெண்மை
மனம் திண்டாடுது உன் இடுப்பில
அந்த சேவல் கொண்டை சிலிர்ப்பில
(இருட்டு...
ஓய்வெடுங்க காளைகலே
இன்னும் கொஞ்ச தூரமே
நடுரோட்ட மூடிப்புட்டான்
ரயில் வரும் நேரமே
தோப்புக்குள்ள தனிமரமா
நான் திரிஞ்சேன் நேத்து
பள்ளத்துல வெள்ளம் போல்
நிறைஞ்ச கை சேர்த்து
பசுமை சூழ்ந்திருக்கு பருவம் கண்டிருக்கு
வைக்கோல் வண்டியிலே என் வைரம் வீற்றிருக்கு
படபடக்குதடி பறந்துவிட
என் பிஞ்சு மனசுக்கு இரக்கையில்ல
(இருட்டு...
ஓட்டமிடு காளைகளே
இன்னும் கொஞ்ச தூரமே
ரயில் வந்து போயிடுச்சு
இன்னும் கொஞ்ச நேரமே
மலை உச்சி நனைந்ததடி
கார்முகிலின் தூறலில்
தலை துவட்ட அனுப்புதடி
வெண்முகிலை வானமே
தலையனை புறக்கனித்து
மடியினில் இடம் கொடடி
வருடிடும் விரல் நுனிகள்
நினைவுக்கு வருகிறதே
உடல் சிலிர்க்குதடி நினைப்பதற்கே
என் கனவுகளை நீ கலந்திருக்கே
(இருட்டு...
*இந்த வரிகளை எடுத்துக் கொடுத்தவர் நண்பர் ரங்கா அவர்கள்
# 157 அரிதார விண்மீண்கள்
அந்நாந்து பார்க்க அரிதார விண்மீண்கள்
நிகழும் கனவாக நிழலாடும் தேவதைகள்
கனவுக் கன்னியாக்கி காதலிக்கும் காளையரும்
கதாநாயகிக்காக கண்ணீர் சிந்தும் மாந்தர்களும்
கலைமாதின் திறமையை புகழாத நாளில்லை
கற்பென்ற தகுதியைப் பேசாத வரையிலே
கடுகளவும் யோசியாது குற்றங்கள் சாட்டுகிறோம்
கலைஞரின் பன்பாட்டை விலைபேசிக் குறைகிறோம்
நமக்கு எட்டாமல் போனவர்மேல் பிழையா?
நம் வாழ்வில் இல்லாத சுகத்தின் குறையா?
உயர்ந்து விட்டோரை தாழ்த்தினால்
நாம் உயர்ந்துவிட்ட பிரம்மையோ?
முன்னேற்ற விலை கற்பு என்றால்
நாம் முன்னேறத் தேவையில்லையோ?
