<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, October 22, 2008
 
# 269 சாமக் கோயில்
மேடையிலிருந்து கூரைவரை
வீற்றிருக்கும் வெள்ளிக் கம்பம்

அதில் கொடி சுற்றி சுழன்றேறும் கிளையாக
கோதையவள் ஆடிடுவாள்
கொஞ்சம் கொஞ்சமாய் தன்னையே
துயிலுரித்து

வாலிபக் கோமான்களும் வயோதிகச் சீமான்களும்
சன்னதியைச் சுற்றி சம்மனிட்டு
அவள் அந்தரங்க அழகை அசைபோட்டு
அர்ச்சனைத் தட்டாகும் உள்ளாடைக்குள்
ஒன்று முதல் நூறுவரை வசதிப்படியோ
வசியத்தின்படியோ
ஒருபாதியாய் மடித்து
நாரில் பூவைக்கும் நளினத்துடன்
நயமாகச் சொருகிடுவார்

அங்குலம் அங்குலமாய் உடை
அங்கே உரித்துவர
கண்ணாடி சீசாக்களில் சாராயம் தீர்ந்துவர
ஊளையிடும் இசைக்கருவி
காமத்தை விசிறிவிட

நுழைவாயில் கட்டணம்
தரிசிக்கும் கட்டணம்
உண்ண உறிஞ்சிட கூடுதல் கட்டணமென்று
தேர்தல் தொகுதியென தோன்றுமளவுக்கு
பணமிங்கே புரலும்
வசூலிக்கும் விடுதிக்கும்
தரிசித்த பக்தருக்கும்
இங்கு தினந்தோரும் திருநாளே

காட்சிப்பொருளான கன்னிக்கோ
கல்லூரி செலவிற்கும்
குடும்பச் செலவிற்கும்
பாலமாக
இந்த மோப்ப நாய்களின்
மத்தியில் மாமிசத் துண்டாய்
தான் நடிப்பதாய் ஏளனம்
"இன்னும் சில நாட்களே"
என்று அவள் மனதில் முனுமுனுக்கும்
இருமாப்பு மந்திரம்

இச்சையை பட்டியலிட்டு
இருட்டுலகில் பதுக்கிவிட்டால்
துன்பமும் இன்பமும்
கொடுக்கல் வாங்கல்
என்று இருதரப்பாய்
பிறிந்துவிடும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 268 முதற்காதலே
நண்பர் மாருதி நம்பியின் இசை வடிவிற்கு இயற்றிய பாடலிது.

M:
முதற்காதலே என்றும் மறவாததே
உணர்த்தாததா உள்ளம் உணராததா

F:
அடுத்தடுத்து சொந்தம் பெருக்கெடுத்தும்
பருவத்தில் கண்ட காதல் முதலானதே

முதற்காதலே என்றும் மறவாததே
உணர்த்தாததா உள்ளம் உணராததா

M:
படிக்கும்போது பழகும்போது நடந்ததெலாம்
நினைவே கிளறிவிட

F:
அழைத்துப் போகும் இளமைக்காலம் நீந்திடலாம்

(முதற்காதலே...


F:
இரவுகலிலும் பிரகாசமாய் முகம் மாறுவார்
சுடரென சுடும் அவன் புகும் இவள் மனம்
உலகிவரது மைதானமாய் சுழன்றாடுவார்

M:
கடற்கரையிலும் கலாபமாய் முகம் தேடுவார்
தனிப் படுக்கையில் தவித்திட தவித்திட
இயக்கமெலாம் இவள் அவன் அவன் இவள்

F:
மயங்காது மோகம் உண்டா
கலங்காது காதல் உண்டா

M:
ஆடல் பாடல் ஊடல் கூடல் நடந்திட
காலம் சென்றும் காதல் வரும்

(முதற்காதலே...


M:
இடைவெளியினை மதித்திடா இளம் காளைதான்
உள்ளம் பறித்தவன் உரிமையில் துடித்தவன்
அவள் மதிப்பினை அடைந்துதான் எடுத்தாளுவான்

F:
அசைந்தெரிந்திடும் அகல் ஒளி இவள் பாங்குதான்
உணர்வலைகளை மறபெனும் சுவரிட்டு
இவள் தவிப்பதை மறைத்துத்தான் புகழ் காக்கிறாள்


M:
இளம் காதல் யாகம் தானே
நிகழ்கால மோகம் தேனே

F:
மீண்டும் மீண்டும் நீயும் நானும் இணைந்திட
காதல் நெஞ்சில் காலம் சிறை

(முதற்காதலே...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, October 21, 2008
 
# 267 கடன் கூடு
செந்தூர வாகன விளக்கொளி
இருவிழியாய் ஜொலித்து நகரும்
என் முன்னே வெள்ளப்பெருக்காய்
கொந்தலித்த எரிமலையாய்...

கண் முன்னே நீளும் நீளும் சாலைகள்
நெஞ்செங்கும் யாகம்
வேகும் நினைவின் ஓலைகள்

விடுதி விட்டு வீடு செல்லும்
நடுவர்க நாயகர்கள்
வெளியூரில் படையெடுத்து
தரம் குறைந்த தொகுதியில்
தகுதி மறந்து மாளிகை கட்ட

விதி என்னும் சுடலைமாடன்
விறகுக் கிடங்கை விரிவாக்கினான்

ஒளிவு மறைவாய் உண்மை இருக்க
ஒப்பந்தங்கள் கை மாற
கடன் கொடுத்த கடன் காரர்கள்
அரசாங்கத்தில் அடைக்கலம்

பணங்காய் உருண்டு மண்ணில் விழ
குருவிக்கு தலை வலி
மருந்தாய் கிடைத்தது முக்காடு

அனாதைப் பினமாய் எத்தனை வீடுகள்
பொலிவிழந்து பூட்டி நிற்பதோ?

ஆண்மை இழந்த அரசாட்சி
அம்பலமானது அனைவருக்கும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com