<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, May 09, 2008
 
# 260 பால் மனங்கள்
அப்படி வாய்த்தால் எப்படியிருக்கும்
என்ற சிந்தனை பெண்ணின் மனம்
இதுதான் நிலைமை தற்சமயம்
என்று வாழ்ந்திடும் ஆணின் மனம்

வாய்த்ததற்கும் வேண்டியதற்கும்
உள்ள இடைவெளியை அலசும்
இவள் ஏக்கப் பெருமூச்சை
தன் இயலாமையின் பிரதிபலிப்பாய்
அவன் உணர...

வெவ்வேறு கோணத்திலிருந்து
வாக்குவாதம் வளரும்
கங்கு வளர்க்கும் எரிமலையாய்
இருவரின் காயமும் ஆழமாகும்

உறவின் வரலாற்றில்
இணைந்தவரின் ஒற்றுமைகள் இழைவதென்னவோ
கொஞ்சம்தான்
வாழ்வின் ஒவ்வொரு படியிலும்
எதிர்நோக்கும் கட்டாயத்தில் எடுக்கப்படும் முடிவுகள்
ஆணின் வழியோ பெண்ணின் வழியோ
எதுவானாலும் சிரமம்தான்

எடுத்த முடிவின் வெற்றியைவிட
புறக்கணித்த முடிவின் கசப்பு
நீண்ட நாள் நிலைக்கும்
எடுத்த முடிவின் தோல்வியோ
விரிசலை இன்னும் பெரிதாக்கும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, May 08, 2008
 
# 259 தேர் பாகன்
ஊரெங்கும் நீ உலா வர
நான் உன் லீலைகளின் சாட்சியாகிறேன்

வணங்கும் உயரத்தில் நீ இல்லை என்று
என் நிலையில் பிறர் கூறலாம்
ஆனால் பழிக்கும் உயரத்தில் நான் இல்லை

துணைவனில்லாத குறையில்தான்
துணைக்கு இருப்பவனிடம் மனம் திறந்தாயோ?

சமுதாயம் நமக்கு மறுத்த சமத்துவம்
நீ அயர்ச்சியில் என்னிடம் பகிர்ந்த
உண்மையின் பலவீனத்தில்
பிறந்தது

பல வேடங்கள் சூடும் உன்னிடம்
வாழ்க்கை, தன் வேடம் கலைத்த சோகம் கொடியது

விரக்தியில் நீ சிரிக்கையில்
கைகுலுக்கல் உறவுகளின்
காயத்தைப் புரிந்தேன்

உன் வாழ்க்கையின் விசை
வேகத்திலேயே இருப்பதை
பிறர் அதிசயிக்க
உன் அழகிற்குக் காலக் கட்டணம்
உயர்ந்து வருவதை உணர்ந்தேன்

உனக்குக் காற்றுள்ளபோதே
உன்னை தூற்றிய உலகம்
உன் திரை இறங்கிய பின்னர்
என்ன கூறுமோ?

இருந்தும் தேவதையை ஓட்டிச்செல்லும்
தேர் பாகனே
ஆசை கொள்வதா?
தயங்குகிறேன்...
இது வேலிக்கும் பயிருக்கும்
உள்ள உறவா?
குழம்புகிறேன்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Sunday, May 04, 2008
 
# 258 பட்டுப்பூச்சியே
மொட்டுச் செடிகளையும்
உன் முணகலால்
மலர வைக்கும்
பட்டுப்பூச்சியே

பரவசப் பெருமூச்சுடன் பிறர்
உன்னைப் பார்த்திருக்க

பறந்து பறந்து
உன் பஞ்சவர்ணத்தை
வசிய விசிறியாய்
நீ விரித்து மூட

அழகு உன் அந்தஸ்தென
அற்பனுக்கும் தெளிவாகிறது

ஆனால் ஒய்யாரமாய் உயரப் பறந்து
விண்ணளந்த காற்றாடியும்
திசை மறந்து தவித்தோ
நூலினை அறுத்தோ
மரத்தில் சிக்கிய பின்னே
பார்ப்பவர் கண்களில்
தென்படப்போவது
பரிதாபமோ ஏளனமோ
மட்டும்தான்

பட்டுப்பூச்சியே
நீ புழுவாக இருந்தபோதே
உன்னை பழகியவன் நான்

என்னிடத்தில் ஏன் இந்த
ஆடம்பரம்?

காதல் என்ற காற்றாடி
உறவுக் கயிற்றால் உயர்ந்து
விதியெனும் காற்றில்
வளைந்தாடுகிறது

காற்றிழுத்த பக்கமெல்லாம்
கை பிடித்து ஆடிவிட்டு
பெருமையெல்லாம் தனதென
பட்டம் நினைப்பதென்ன விபரீதம்?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com