# 300 பூ
கிளைகளில் மிளிர்ந்தால் எழில்
பூஜைக்கு சென்றால் புனிதம்
காதலர் கைகளில் மோகம்
கூந்தலில் அமர்ந்தால் கவர்ச்சி
விருந்தாளி கொடுத்தால் பரிசு
சட்டைப் பொத்தானில் கெளரவம்
பக்தன் வழங்கினால் விண்ணப்பம்
மறைந்தவன் அருகே அஞ்சலி
சர்ச்சைகுப்பின் கிடைத்தால் மன்னிப்பு
மணமாலையில் தொடுத்தால் உறவு
மயானத்தில் இருந்தால் காணிக்கை
மண்ணில் விழுந்தால் நினைவு
# 299 ஓவியக்கதை
கூடாரமாய் நீலவானப் பலகை
அதனடியில் தூரிகையிட நீளும்
லட்சிய மரங்கள்
தொலைவில் கிழிந்த தாளைப்போல்
மலை நுனிகள்
அதன் தோளிறங்கி
தரை தவழ்ந்தோடும்
தளிரோடை
இந்த சூழலில்
என் எளிய குடிசை
என்னைச் சுற்றி
சூரிய அடுப்பில் இயற்கை சமைத்த
விருந்து பண்டிகை
பார்க்கப் பார்க்க பசியடங்கா நான்
காய சண்டிகை
# 298 வேண்டும் இன்னொரு பிறவி
இந்தப் பிறவியில் புறக்கணித்த
பாதைகளில் பயணிக்க,
வேண்டும் இன்னொரு பிறவி
சொல்ல நினைத்து தயங்கி
சிறைப்படுத்திய உண்மைகளை சிறகடிக்க
சிந்திய திவலைக்குள் சமத்தாகப் பொருந்தும் நீர் போல் வாழாமல்
காற்றில் கலந்தும் தன் மணம் காக்கும்
முல்லைப்பந்தலின் முகை போல வாழ,
வேண்டும் இன்னொரு பிறவி
பிறர் பார்வைக்கு எனைத்திருத்தாமல்
என் பார்வைக்கு பிறரைத் சுருக்காமல்,
உள்ளதை உள்ளபடி
கிடைத்தது கிடைத்தபடி
வரவேற்று உறவாட,
வேண்டும் இன்னொரு பிறவி
தனி மனித சுதந்திரம் பலியாகித்தான்
பொது நலம் காக்கமுடியுமென்றால்
இருசாரியும் தத்தம் கொள்கைகளை அனுசரித்து மறுபரிசீலனை செய்து
எதிர் வாதத்தை பாதிவழியில்
சமரசம் செய்யும் நிலை காண
வேண்டும் இன்னொரு பிறவி
வெற்றி பெற்றவனின் மை கொண்டு
சரித்திரம் எழுதாமல்
தொல்வியுற்றவனின் தழும்புகளையும்
தவிப்புகளையும் ஏக்கங்களையும்
தவறாமல் சேர்த்தெழுதும் உலகில் வாழ
வேண்டும் இன்னொரு பிறவி
பெரும்பான்மையின் ஊர்வலத்தில்
பங்கேற்காத
செல்வாக்கு ஏணியில்
சீராக உயர்ந்து
சுக போக வாழ்வை சுவைத்து கொண்டிருக்கும் சீமான்கள்
சமரசத் தீயில் சாம்பலாகி
சமத்துவம் போற்றும் நிலை காண
வேண்டும் இன்னொரு பிறவி
# 297 நெஞ்சம் இனிக்கிறது பிரிவு பொய்யாகிப்போகாதோ..!
"நெஞ்சம் இனிக்கிறது பிரிவு பொய்யாகிப்போகாதோ..!" கவிதை தலைப்பில் எழுத ஜெர்மானிய வானொலி நிகழ்ச்சி வாய்ப்பு கொடுக்க, இந்த கவிதையை நான் படித்தேன்.
உறவு, இனிக்கும் நேற்றைக் கடந்து
இன்னல் இன்றில் முறிந்து
தனிமை எதிர்காலம் நோக்கி
வேறு பாதையில் விரைந்து கொண்டிருக்கிறது
நெஞ்சோ நினைவு ஊரில்
தங்கி விட்டது
நினைவின் இன்பம் ஓங்கி இருப்பதால்
நிகழ்வின் உண்மை பிடிபடாமல்
பிரிவை பொய்யாக்கி மறுக்கிறது நெஞ்சம்
சுயநல நெஞ்சே, யோசி
தனிமையில் இன்று தவிக்காமல்
நாளைக்கு எப்படி தயாராவது?
நேற்றின் தவறுகள் தெரிந்தால்தானே
இன்று திருத்தி நாளைத் தேற முடியும்?
உனக்கு இனிக்கும் நினைவுகள்
உன் ஜோடிக் கிளிக்கும் இனியவைதானா?
அல்லது உன் இன்பத்தை நிறைவேற்ற
உன் ஜோடி துன்புற்றதா?
இது புரிந்திருந்தால், நீ பிரிவை ஏற்றிருப்பாய்
உன் இன்பமே உண்மை நீயே உலகம்
என்ற நினைப்பில்
நீ சிறையுண்டு இன்புற்றிருப்பது பரிதாபம்
# 296 நீ வாழ்க
என் ஒவ்வொரு துளியும்
உன் பதம் தேடி
உவகையானதடி
நீ வாழ்க
உன் பேச்சுச் சாரல்
கோடைக் காற்றில்
கோகிலமானதடி
நீ வாழ்க
சம்மதமில்லா
செயல்களைக் கூட
சமரசச் சிரிப்பில் ஏற்ப்பாயே
நீ வாழ்க
என் தொல்லைகள் எல்லாம் தீர்வுகாண கொள்ளிடமாவது
உன்னிடமே
நீ வாழ்க
ஒரு பார்வையிலே
யுக ஆறுதலை
போர்த்திவிட்டாயே
நீ வாழ்க
# 295 முத்தம் கொடு
முத்தம் கொடு
சத்தமில்லா
முத்தம் கொடு
நித்தம் நித்தம்
கெட்டதெல்லாம்
கத்துக்கொடு
மூவாறு
செய்யும் கோளாரு
நீயில்லாமல் இனி தீராது
முத்தம் கொடு
சத்தமில்லா
முத்தம் கொடு
நித்தம் நித்தம்
கெட்டதெல்லாம்
கத்துக்கொடு
பொத்தி பொத்தி வெச்சதெல்லாம்
கட்டவிழ்ந்து ஆடணும்
அட்டைகத்தி வீரன் கூட
கட்டபொம்மன் ஆகனும்
மத்தவங்க ஆசைக்காக வாழ்ந்ததெல்லாம் ஓயணும் சித்தகத்திப் பூவுக்குள்ள சித்தெரும்பு ஊர்வலம்
முத்தம் கொடு
சத்தமில்லா
முத்தம் கொடு
நித்தம் நித்தம்
கெட்டதெல்லாம்
கத்துக்கொடு
மூவாறு
செய்யும் கோளாரு
நீயில்லாமல் இனி தீராது
முத்தம் கொடு
சத்தமில்லா
முத்தம் கொடு
நித்தம் நித்தம்
கெட்டதெல்லாம்
கத்துக்கொடு
# 294 தனிமையின் வரைபடம்
மெளனத்தை எழுப்பிவிட
அமைதிச் சீர்ப்பாட்டில்
ஆளுக்கொரு ஒப்பந்தமிட்டதைப்போல்
சந்தில் பூனையொன்றும்
சாக்கடைத் தவளையொன்றும்
கோபித்து குற்றம் சாட்டின...
அறைக்குள்
மின்வெட்டு அமைதியில்
உடல் பிசுபிசுக்க
ஊனமான நெஞ்சம்
விசிறியின் சீற்றத்திற்கு
ஓலமிட்டது
சீராய் எரியும் மெழுகுவர்த்தி
சற்று சிணுங்கி நிழலை சிமிட்ட
தனிமை கொழுந்து விட்டது
தன்னைச் சார்ந்திராத எவரையும்
தட்டிக்கழிக்கும் நெஞ்சம்
மெளனத்தின் அரவணைப்பில்
தோள் சாய்ந்தது
# 293 இறுதிச் சடங்கு
நெஞ்சம் இறுதிக்கோட்டில
# 292 ஆயிரம் பௌர்ணமிகள்
தகவல்கள் சிலவற்றை நீக்கிவிட்டேன்.
மெலிந்த மேனி
செழிப்பான சிந்தனை
கற்றதை கணக்கிட்டால்
பல நூலகங்களை மீறிடும்
கையளவு என்பது இவர்
உண்பது மட்டும்தான்
அன்றாடம் இறை தேடி
அலையும் எறும்பைப் போல்
படிக்க நூல் தேடித் திரிவார் இவர்
குளித்து முடித்து வெறும் துண்டுடன்
அறைக்குள் நுழைந்தவர்
புது நூல் ஒன்று மேசையில் ஈர்க்க
உடல் தலை ஈரம் துவட்டாமல்
படிக்க நேர்ந்ததை பார்த்து
ரசித்திருக்கிறேன்
சிறு வயதில், மஞ்சள் காமாலை
முத்திய நிலையில் நான் இருக்க
எதற்கும் தயாராகிய என் பெற்றோர்
நான் பார்க்க விரும்பியவரையெல்லாம்
வீட்டிற்கு வரவழைத்தனர்
பெரியவர்கள் மாற்றி மாற்றி
ஒவ்வொரு வேளையும்
உணவு ஊட்டிவிட
இவர் சிரித்த முகத்துடன்
கதைக்கு மேல் கதையாக
சொல்லிச் சொல்லி உறங்க வைத்தது
மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று.
திருமண விழாக்களில்
தலைவர்கள் செல்வந்தர்களை
சுற்றி பிறர் கூட்டம் போட
சராசரி தொண்டர்களுடன்
கலாய்த்துக் கொண்டிருப்பார் இவர்
அங்கேதானே சுவையான கதைகள் கிடைக்கும்
பெரும்பாலும் அறிஞர்கள்
பாமரர்களை சகிப்பதில்லை
இவரோ சாமான்யரை
சாதனையாளர்போல் பாவிப்பவர்
ஒரு முறை தெருவில் வந்த ஒருவரை
தழுவி விசாரித்து உரையாடிவிட்டு
என்னிடம் கூறினார், "இவன் பெரிய ஆளுடா,
அந்த சினிமா கொட்டகையில, டிக்கெட் பணம்
போக மீதி பணம் எல்லாம் இவனுக்குதான்." என்றார்.
வீடு சென்றதும், சித்தியிடம் நாங்கள் சந்தித்த
பெரிய ஆளைப் பற்றி கூற, அவர்கள் சிரித்துக்கொண்டே,
"உங்க அப்பாவுக்கு அந்த கொட்டகையில சோடா விக்கிறவனை
தெரியுமாக்கும்?" என்றார்.
சுயநலத் தேவைகள் இருப்பதால்
கல்லை தெய்வமாக பார்க்க முடிகிறது
இவரால் மட்டும்தானே ஒரு சாமானியனின்
பற்றாக்குறையையும் பெருமையாக பார்க்க முடிகிறது
கிரகங்களின் அமைப்பைப் பற்றி சிந்திப்பவர்
பூமியின் சங்கடங்களில் லயிப்பதில்லை
உலக சரித்திரங்களை படிப்பவர்
நம்மில் தோன்றி முடிவதல்ல வாழ்க்கை
என்ற சூத்திரம் அறிந்தவர்
சமூகவியல் உளவியல் அரசியல் தத்துவம்
என்று கற்று தனக்குள்ளே தர்க்கம் செய்பவருக்கு
சடங்குகள் சம்பிருதாயங்களின் பாசாங்கும்
உறவுப் பிணைப்புகளில் சலசலப்பும்
வெறுமையின் ஓலமாகத்தானே ஒலிக்கும்
துன்பமும் தோல்வியும் இவரை
கைகோர்த்து நடந்த போதும்
ஞானத்தின் சலங்கையுடன்
வீர நடை போட்டவர் இவர்
குன்றாத தன்மானமும்
குறையாத வைராக்கியமுமாய்
கும்பலிலே அதிகம் சிரித்து
வாழ்வை முழுமையாக வாழ்ந்து வரும்
கோடியில் ஒருவர் இவர்
இவரை பிரகாசிக்கச் செய்ய
ஆயிரம் பௌர்ணமிகள்
எம்மாத்திரம்
# 291 இரவல் இன்பங்கள்
(mid tempo, innocent voice)
வாடி என் கூட்டணி
கைக்குள்ள மாட்டு நீ
காதோரம் எட்டிப்பாக்கும் நெஞ்சுக்குள்ள கூத்தடி
ஆசைக்கு எல்லையில்ல இன்னும் கொஞ்சம் தீட்டு நீ
போதைக்கு பாதையில்ல போவதெல்லாம் நம் வழி
சொர்கத்தைத் தேடிப்போவோம் வேகமாக ஓட்டு நீ
(slow chorus buildup)
இளமை மேடையில் கொட்டடிக்கும் கால்களே
இரவை ஏய்த்திடும் மின்சாரப் பூக்களே
(hyper beats and fast chorus)
ஆடு ஆடு தேகம் எங்கும் புல்லறி
பாடு பாடு கூச்சல் இங்கு பல்லவி
ஆடு ஆடு தேகம் எங்கும் புல்லறி
பாடு பாடு கூச்சல் இங்கு பல்லவி
(slow down, dramatic voice)
வேஷங்கள் களையட்டும்
கோஷங்கள் உயரட்டும்
எல்லைகள் கறையட்டும்
தொல்லைகள் மறையட்டும்
(slow chorus buildup)
இளமை மேடையில் கொட்டடிக்கும் கால்களே
இரவை ஏய்த்திடும் மின்சாரப் பூக்களே
(hyper beats and fast chorus)
ஆடு ஆடு தேகம் எங்கும் புல்லறி
பாடு பாடு கூச்சல் இங்கு பல்லவி
ஆடு ஆடு தேகம் எங்கும் புல்லறி
பாடு பாடு கூச்சல் இங்கு பல்லவி
(fast tempo, reflective voice)
விடியும் வேளையில் நிணைவெல்லாம் மின்மினி
உடலும் உள்ளமும் ஓலமிடும் வெற்றொலி
தெளிவு தேடிப்போனா தொந்தரவு தொந்தரவு
மயங்கிக் காத்திரு விரைவில் நல்லிரவு
(fast tempo, reflective voice)
மீண்டும் சந்திக்க இன்னோரு கூட்டணி
சந்தர்ப்பம் பறித்திட ஏக்கம் உதிர் கணி
தற்காலிக சொந்தங்கள் இரவல் இன்பங்கள்
வளர்பிறையா அறைகுறையா கணக்கிடு நீ
(slow chorus buildup)
இளமை மேடையில் கொட்டடிக்கும் கால்களே
இரவை ஏய்த்திடும் மின்சாரப் பூக்களே
(hyper beats and fast chorus)
ஆடு ஆடு தேகம் எங்கும் புல்லறி
பாடு பாடு கூச்சல் இங்கு பல்லவி
ஆடு ஆடு தேகம் எங்கும் புல்லறி
பாடு பாடு கூச்சல் இங்கு பல்லவி
# 290 saxophone-இல் சுலோகம்
நண்பன் ஸ்ரீகாந்த் இயற்றிய Jazz-Carnatic Fusion மெட்டிற்க்கு எனது வரிகள்:
பெண்:
saxophone-இல் சுலோகம் சொல்லவா?
trumpet ஊதி தீபம் காட்டவா?
பளிங்கு தரையில் உருளும்
பத்து விரலும் பக்தர்
சில்லரைபோல cymbal குலுங்காதோ
saxophone-இல் சுலோகம் சொல்லவா?
trumpet ஊதி தீபம் காட்டவா?
நிரம்புது நெஞ்சம்
துறந்தது துன்பம்
நிரம்புது நெஞ்சம்
துறந்தது துன்பம்
திடுதிடு அருவி, அது தாளம்
சுதந்திர குருவி, அது ராகம்
வளைந்து நெளிந்து விலகிக் கலந்து பிணையும் அழகே Jazz!
(break)
ஆண்:
மேற்க்கத்திய இசை மட்டும் மதிக்காதே
ச ரி க ம பா சங்கதிகள் ஒதுக்காதே
கடலே இசையும்
அக்கரை தந்து பயில முடிந்தால்
இக்கரை சிப்பியும் முத்து கொடுக்கும்
அக்கரை பச்சை தேடி திரிந்தாய்
இக்கரை கலையும் இன்னுமொரு தாய்
தொடரும் கலை
அது நாளுமுனை
ச ரி க ம ப த நி
பெண்:
saxophone-இல் சுலோகம் சொல்லவா?
trumpet ஊதி தீபம் காட்டவா?
(piano interlude
saxophone-இல் சுலோகம் சொல்லவா?
trumpet ஊதி தீபம் காட்டவா?
(cymbal beat
பெண்:
ஒன்றை மீண்டும் ஆயிரம் முறைகள் சொன்னால் மெய்யாகாது
ஒன்றை மட்டும் வழிபட்டாலே மற்றது பொய்யாகாது
ஆண்:
கண்ணை மூடி இருட்டென்றாலே என்னால் ஏற்க முடியாது
கலைத்தாயின் புதல்வருக்கு மொழி பேதம் கிடையாது
பெண்:
என்னுள் நீ உன்னுள் நான் சங்கமம் எப்போது?
ஆண்:
சமபந்தி ஜுகல்பந்தி சேர்ந்தால் தப்பேது?
இனி ராகம் தாளம் சங்கீதம்
பெண்:
saxophone-இல் சுலோகம் சொல்லலாம்
நாயணமும் இங்கு Coltrane ஊதலாம்
Piano சினுங்கிய மெட்டை
அந்த வீணை வாய்மொழியும்
சமத்துவம் புதுக்கலையே
saxophone-இல் சுலோகம் சொல்லலாம்
நாயணமும் இங்கு Coltrane ஊதலாம்
# 289 புண்ணியம்
திரும்பத் திரும்பக்
கூப்பிடும் கிறுக்கன்
நானாகத்தான் இருப்பேன்
உன்னைப் பிறிந்தாலும்
உன் அனுசரணையை
கனிவை
வேண்டிய பொழுதெல்லாம்
ஓயாமல் கேட்க
இனி அது ஒன்றுதானே வழி
தொலைபேசிச் செய்திகளை
சேகரிக்கும் கருவியில்
வரவேற்ப்புரையாக
உன் குரலை பதிவு செய்தது
நான் செய்த புண்ணியம்
# 288 தந்தைக்கு நினைவாஞ்சலி
கல் மனக்காரன் பேசுகிறேன் அப்பா!
உங்கள் நினைவுக் கல் மனக்காரன் பேசுகிறேன்!
தலைவாழை உபசரிப்பு உங்களைப்பற்றி
அதிகம் கூறப்படும் சிறப்பு
நம் குடும்பத் தோட்டத்தில் இப்பொழுது தலைவாழை
சரிந்து விட்டது
தமையன், சகோதரன், தோழன், வழக்கறிஞன்,
கணவன், தந்தை, பாட்டன் என்று பூணிய வேடங்களில் எல்லாம்
பரிபூரணமாய் வாழ்ந்த ஒரு
மனிதனின் மகத்துவத்தை
ஒரு மடலில் வடித்து முடியாது
உங்கள் சகாப்தத்தை நான்கு சட்டங்களுக்குள்
அடைத்து சுவரேற்ற முடியாது
உங்கள் வாழ்வு வானத்தைப் போல பிரகாசமானது
அதிலிருந்து ஒரு ஒளிக்கீற்றை உருவி
இந்த நினைவுச் சுடரை ஆராதிக்கிறேன்
கல் மனக்காரன் பேசுகிறேன் அப்பா!
உங்கள் நினைவுக் கல் மனக்காரன் பேசுகிறேன்!
தேகம் கூட இளைத்ததில்லை
உங்கள் தன்மையை என்ன சொல்ல தந்தையே!
தேயத் தெரியாத முழு மதி நீங்கள்!
கவலை எனும் விருந்தாளிக்குக்
கதவு திறக்காதவர் நீங்கள்!
"சிக்கலுக்கு தீர்வு காணு அல்லது
சீக்கிரம் கைகழுவு."
என்று சொல்லிக் கொடுத்த சித்தர் நீங்கள்!
சாமானியரின் சங்கடத்தை
வழக்காடி முடித்தவர் நீங்கள்!
கோட்டை ஆண்ட கோமான்களையும்
வசைபாடி குவித்தவர் நீங்கள்!
சொந்தங்களைத் திட்டியதெல்லாம்
செல்லமாகத்தான் ஒலித்தது
திட்டிக் கேட்க வேண்டுமென்று
வேண்டிய சொந்தமும் இருக்குது
சுக ஊருக்கு வழி
தனக்குத் தெரிந்தும்
பிறருக்குப் புரியவில்லையே
என்று பரிதாபப்பட்டவர் நீங்கள்!
மாதம் ஒரு முறை கூட
மறையாத முழுமதி நீங்கள்!
தெற்கிலிருந்து மட்டும்தானே
வீசத்தெரியும் தென்றலுக்கு!
எட்டுத்திக்கும் அரவணைத்து
மொட்டுச் செடியும் விட்டுப் போகாமல்
பட்ட மரத்தையும் தட்டிக் கழிக்காமல்
தொட்டுத் துலாவி மணம் கமழ்ந்த
பட்டுத் தென்றல் நீங்கள்!
கல் மனக்காரன் பேசுகிறேன் அப்பா!
உங்கள் நினைவுக் கல் மனக்காரன் பேசுகிறேன்!
# 287 அளவைநூல் மதி
நண்பர் ஈஷ்வர் ரவிகுமாரின் மெட்டிற்கு எழுதிய பாடல் இது.
ஓடமொன்று மெல்ல மெல்ல நதியில் இறங்குது
உள்ளமொன்று மென்று மென்று வலியை முழுங்குது
இந்த ஓடக்கோளே தூரிகை அந்த ஆறு மைக்கூடு
நிறங்கள் மாறி மாறி நதியின் ஆடை நெய்யுது
மனிதனின் மனமுமே நொடியிலே நிறம் மாறும் நதி போலவே
இன்பமும் துன்பமும் *அளவைநூல் மதியின் கையிலே
மரத்தின் வேர்கள் மறைந்த போதும் மணலில் நீரிருக்கும்
காதல் மாலை களைந்த போதும் தோல்வி கழுத்தறுக்கும்
உறவு சொந்தமாயுமே உனக்குரிமை அங்கே ஏதடா
உன் தேவை ஆசை எல்லாம் பிறர்க்கு ஞாயமா?
*அளவைநூல் = logic
# 286 அகமருடணம்
பாடல் எழுத இன்னொரு அழைப்பு, இந்த முறை நண்பர், ஷியாம் வய்-இடமிருந்து. பிரயோகத்தில் அதிகம் இல்லாத வார்த்தைகளைத் தேடித் தேடி கொஞ்சம் தூவியிருக்கிறேன். கருத்துக்கள் புதிதில்லையென்றால், சொல்லும் விதமாவது மாற வேண்டும். காதல் தன்னிறக்கப் பாடலில், இனி இதுதான் வழி என்று நினைக்கிறேன்.
கோடைவெயில் வாடி நின்ற தென்னை
தென்றலென்று சேர்ந்திடுமோ என்னை
எதிர்திசை நோக்கி நடைகட்டிப்போக
இதயக்குறி நீ அன்பே
முகம்தான் நிலவோ?
மனம் தேய் பிறையோ?
அடிவினை பொழுதோ?
அகமருடணமோ?
பெளர்ணமி பொங்கும் அலை கண்ணில்
காரிருள் போர்வை எந்தன் நெஞ்சில்
(கோடைவெயில்…
இருவினைதான் இருவரின் உறவு இருமடியாகும் இங்கே
இருநிலம் நீரும் இருநினைவாக இவன் வசிப்பான் இங்கே
ஒரு சில நொடிகள் அதில் பல யுகங்கள் கடத்திடுமே நெஞ்சே
உடையான் என்றோ
உடைமை என்றோ
மோகத்திலே இல்லையோ
யாகத்தைப் போலிதுவோ
மோகராசி விட்டுப் போனதென்று
ஏகராசி வானமெங்கும் இன்று
(கோடைவெயில்…
ஒருசிறைதான் ஒருதலை வழக்கு இவன் மனது இங்கே
ஒருக்காலும் சேரா ஒருவாமையே அவள் ஒலிசை அங்கே
ஒருவன் ஒருத்தி ஒருசேரப் பாதை எதிர்வழி போவதென்ன?
இதுதான் விதியோ?
இதயச் சதியோ?
சுதந்திர லாபம்
சமத்துவ தீங்கோ?
சாத்திரரோகம் இந்த மோகம்
காலப்போக்கில் சிந்தை சுகமாகும்
(கோடைவெயில்…
obscure words:
_____________
*irunilam = big earth
*iruneer = ocean
*iruninaivaaga = broken thoughts
*iruvinai = good and bad
*irumadi = doubling; changing in opposite directions
*adivinai = showing true colors/fading
*agamarudam or agamarudaNam = water immersing ritual to rid of sin
*yaegaraasi= new moon
*orusiRai= one-sided
*oruthalai vazhakku = partial judgment
*oruvaamai = unwavering
*olisai = dowry
# 285 ஆதாம் நீயோ?
நண்பர் பிரவீன் கிரிஷ்னா இயற்றிய மெட்டிற்கும், விரும்பிய சூழலுக்கும் பொருந்திய வரிகள் இவை:
அலைகளிலே
நீராடுவாள் இந்த ஏவாள்
நினைவினிலே
போராடுவாள் உன்னைத் தேடி
கனியுடன் நான் அழைக்கவா
பனியிதழ் தீ பதிக்கவா
தழுவிடவா தடை ஏது
ஆதாம் நீயோ?
அலைகளிலே
நீராடுவாள் இந்த ஏவாள்
நாள் பார்த்து நாளேடு தேயாமலா
தீ வார்த்த பூமிக்கு கார்மேகம் யார்
பார்வை நீ என்று
தேடும் வலைவீசி
ஊமை வேடத்தில்
கொள்ளும் தொலைபேசி
ராதா நான்
இன்று மீராதான்
ஒரு சொல் வேண்டி
செவி மண்றாடும்
விடை சொல்வாயா
விதை மலராக
விடை சொல்வாயா
விதை மலராக
அலைகளிலே
நீராடுவாள் இந்த ஏவாள்
நினைவினிலே
போராடுவாள் உன்னைத் தேடி
கனியுடன் நான் அழைக்கவா
பனியிதழ் தீ பதிக்கவா
தழுவிடவா தடை ஏது
ஆதாம் நீயோ?
# 284 அலைமோதும் நிலைபோதும்
ராக் அன்ட் ரோல் பாடல் வடிவில் எழுதிய இன்னொரு பாடல் இது:
அலைமோதும்
நிலைபோதும்
விடை சொன்னால் நோகாதே
நிலைமாற்றம் ஒன்றேதான்
வாடிக்கை வினையிங்கே
சூராவளிக் காற்றில் நீந்தும் பாய்மரம்தானே காதல்
ஆலமரம் சாய்த்த புயலில் காலூன்றும் புல் காதல்
விளக்கை ஊதி அனைத்திடலாம்
இதயம் அடுப்பாய் எரிகிறதே
நாளை மண்ணில் கால் வைத்தால்
நேற்றின் நிழலே படிகிறதே
சூராவளிக் காற்றில் நீந்தும் பாய்மரம்தானே காதல்
ஆலமரம் சாய்த்த புயலில் காலூன்றும் புல் காதல்
நான் பார்க்கும் கண்ணாடி
என்றைக்கும் பின்னோடி
என் தோற்றம் தெரியவில்லை
உன் மறைவு தெரிகிறது
சூராவளிக் காற்றில் நீந்தும் பாய்மரம்தானே காதல்
ஆலமரம் சாய்த்த புயலில் காலூன்றும் புல் காதல்
அலைமோதும்
நிலைபோதும்
விடை சொன்னால் நோகாதே
நிலைமாற்றம் ஒன்றேதான்
வாடிக்கை வினையிங்கே
# 283 உதய காலத்தை நோக்கி
காலச் சக்கரமே
கொஞ்சம் நில்லு
என்னை இறக்கிவிட்டு
உன் வழி செல்லு
நாளை நாளையென்று
நெட்டித்தள்ளிப் போவது உன் இயல்பு
உன் பயணிகள் இறுதி அடைந்துதான்
உன்னை விலகுவர்
நீயோ இறுதியற்றவன்
இன்னொரு நாளையைத்தேடி
இன்றையும் நேற்றைப்போல்
அலட்சியமாக சுருட்டிவிடுவாய்
எனக்குத் தேவையில்லை
இந்த குறிக்கோலற்ற
அசுரப் பயணம்
நான் வந்த வழியே
விரும்பிய இடங்களில்
மீண்டும் தங்கப்போகிறேன்
இன்றில் கொஞ்சம் இளைப்பாரி
நேற்றில் கொஞ்சம் நீந்தி
விரிசலில்லாத சொந்தங்களை...
நேசம் மறவாத நட்பை...
விலைபேசாத அன்பை...
உதய காலத்தை நோக்கி
ஊர்ந்து செல்லப்போகிறேன்
# 282 கையடக்கக் காதலி
என் கையடக்கக் காதலி
பொருப்பாக தலைகுனிந்து
என் மனதிற்கேற்றபடி
தலையசைத்து சிந்துகிறாள்
உயிர் மையை
அவள் உதிரம்
உமிழ் நீர்
இரண்டும் ஒரே நிரம்
என் சிந்தனையின் நிறங்களெல்லாம்
அதில் நிழலாய் வெளிப்படும்
எங்கள் கலாபக் கலவை
வாசிக்கும் விழி மகுடிக்கு
வெள்ளைத்தாளிலோ
மின் ஏட்டிலோ
படம் எடுத்தாடும்
# 281 படைப்பு
ஒரு கலைஞனின் படைப்பை
பிரசவம் என்று கூறக்
கேட்டிருக்கிறேன்
ஆனால் மனித பிரசவத்தில்
வெளியீட்டில்தான் வேதனையின்
உச்சம்.
கலைப்பிரசவத்திலோ சிந்தனை
உருவெடுக்கும் வேளியீடுதான்
பூரிப்பின் உச்சம்.
பிறர் மதிப்பீட்டில்தான்
தன் படைப்பின் பெருமை
ஒரு தாய்க்கு பெருமிதம் அளிக்கிறது.
தன் படைப்பை வெளியிட்டபின்
அதன் வரவேற்ப்பு
கலைஞனுக்கு ஒரு
நினைவு நாளைப்போல்;
படைத்து முடித்ததும்
அடுத்த படைப்பின் பிரசவத்தில்
ஆழ்ந்துவிடுகிறான்.
ஒரு குழந்தையின் வளர்ப்பில்தான்
தாயின் வெற்றி இருக்கிறது.
கலைஞனின் வெற்றியோ
அவன் சிந்தனையின் கரு
படைப்பாக வெளியேறும் பொழுதே
முழுமையடைந்து விடுகிறது
ஆரவாரம், அங்கலாய்ப்பு
ஆதரவு, எதிர்ப்பு
இதையெல்லாம் தனக்குள்ளே
தாண்டவமாடித் தன் படைப்பிலேயே
புரிந்துகொள்கிறான்
கலைஞன்
# 280 காதலும் பூமியும்
காதலும் பூமியும் இயல்பானவை
ஆனால் ஒன்றுக்கொன்று முறனானவை
காதலில் பச்சை சேர்த்தால் வீழ வைக்கும்
பூமியில் பச்சை சேர்த்தால் வாழ வைக்கும்
காதலிலே கால்தடமும் புனிதம்
பூமியிலே கரியின் கால்தடம் சேதம்
காதலை மறைக்க சுவர் எழுப்பினால் கொண்டாட்டம்
பூமியை மறைத்து சுவர் எழுப்பினால் திண்டாட்டம்
காதல் நமக்குள்ளே தோன்றி மறைகிறது
பூமியில் நாம் தோன்றி அதற்குள்ளே மறைகிறோம்
# 279 ஆரம்பத்தின் எதிரொலி
ஆரம்பத்தின் எதிரொலியை
இறுதியில் கேட்ட மூடன் நான்
சோலை இருந்த நினைவில்
அங்கு செல்லத் தொடங்கினேன்
கண்கள் முட்டி நின்றன
தொழிற்சாலை இரும்பில்
சில நேரம்
உள்ளின் அவலம்
வெளியில் விளக்கப்படுகிறது
கோவில் விளக்கில்
கண்கள் உறசினோம் அன்று
அகம் முகம் அப்புறம் அலசினோம்
வேண்டிக்கொள்ள வேண்டியதில்லை
வரம் கிடைக்க
என நினைத்த காலமது
நாளடைவில் நாம் வளர்ந்தோம்
காலம் குனிய வைத்தது
என் தகுதியறியாமல்
நீ உன்னை வழங்கினாய்
உன் தகுதியறிந்த நான்
என்னை மறுத்துவிட்டேன்
பிறகு தெரிந்தது
நீ பற்ற நினைத்த குட்டிச்சுவர்
புதைகுழியை தவிர்க்க என்று
நீ விழுந்த புதைகுழியும்
புஷ்பகுளமாகுமென்று நம்பினேன்
இன்று புரிகிறது
கல்லறை மலர்கள்
கால் நனைப்பதில்லையென்று
# 278 ஜெய் கோ-ii
'ஜெய் கோ' என்ற இந்திப் பாடலை நண்பர் ஒருவர், ஒரு மதிக்கத்தக்க சமூக சேவை குழுவிற்கு பயன் படுத்தலாமா என்று நினைக்க, அதற்கு எழுதியதிது. #277-க்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும் இதன் நோக்கம் சற்றே வேறு.
ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ
தேவை நீக்க சேவை செய்வோம் பாரதத்திலே
எங்க கைகள் சேர்ந்துவிட்டா எல்லையே இல்லே
ஜெய் கோ ஜெய் கோ
தேவை நீக்க சேவை செய்வோம் பாரதத்திலே
எங்க கைகள் சேர்ந்துவிட்டா எல்லையே இல்லே
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ
ஆத்திரத்தில் சாத்திரத்தை சாடிவிட்டு சாயாதே
ஊக்கமெல்லாம் உன்னிடத்தில் யாரிடமும் தேடாதே
நாளையென்ற நாளையொட்டி வேலைசெய்ய தோயாதே
பூட்டிவைத்த வித்தையெல்லாம் காட்டிவிடு ஓயாதே
தேவை நீக்க சேவை செய்வோம் பாரதத்திலே
எங்க கைகள் சேர்ந்துவிட்டா எல்லையே இல்லே
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ
தூக்கிடு கை தூக்கிடு நம்மைச் சேர்ந்தவன் வெற்றிக்கு போரிடு
எட்டிடு நீயும் எட்டிடு உந்தன்
சொந்தச் சிகரம் ஒன்றை எட்டிடு
ஊர் உதவும் கரங்கள் கொண்டு ஏழ்மைக்கோட்டை அழித்துப் போடு
ஊர் உதவும் கரங்கள் கொண்டு ஏழ்மைக்கோட்டை அழித்துப் போடு
தேவை நீக்க சேவை செய்வோம் பாரதத்திலே
எங்க கைகள் சேர்ந்துவிட்டா எல்லையே இல்லே
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
வெட்டிடு வேர் வெட்டிடு வீழ்த்தும்
எண்ணங்களை வெட்டிடு
கட்டிடு நீ கட்டிடு குப்பத்தை
கோபுரமாய் கட்டிடு
சேற்று மண்ணை பாதையென
ஆக்கிவிட்டுக் கொண்டாடு
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
# 277 ஜெய் கோ
'ஜெய் கோ' என்ற இந்திப் பாடலை நண்பர் ஒருவர் தமிழில் பாட விரும்பியதின் விளைவு இது.
ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ
ஊருலகம் போற்றுதய்யா பாரதக் கலை
எங்கக்கலை ஏத்தி வைக்க வானம் போதலை
ஜெய் கோ ஜெய் கோ
ஊருலகம் போற்றுதய்யா பாரதக் கலை
எங்கக்கலை ஏத்தி வைக்க வானம் போதலை
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ
ஆத்திரத்தில் சாத்திரத்தை சாடிவிட்டு சாயாதே
ஊக்கமெல்லாம் உன்னிடத்தில் யாரிடமும் தேடாதே
நாளையென்ற நாளையொட்டி வேலைசெய்ய தோயாதே
பூட்டிவைத்த வித்தையெல்லாம் காட்டிவிடு ஓயாதே
ஊருலகம் போற்றுதய்யா பாரதக் கலை
எங்கக்கலை ஏத்தி வைக்க வானம் போதலை
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ
தட்டிடு கை தட்டிடு நம்மைச் சேர்ந்தவன் வெற்றிக்கு வாழ்த்திடு
எட்டிடு நீயும் எட்டிடு உந்தன்
சொந்தச் சிகரம் ஒன்றை எட்டிடு
சூடு தந்த சோகத் தீயும் பாடம் நண்பா கேட்டுக்கோடா
சூடு தந்த சோகத் தீயும் பாடம் நண்பா கேட்டுக்கோடா
ஊருலகம் போற்றுதய்யா பாரதக் கலை
எங்கக்கலை ஏத்தி வைக்க வானம் போதலை
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
வெட்டிடு வேர் வெட்டிடு வீழ்த்தும்
எண்ணங்களை வெட்டிடு
கற்றிடு நீ கற்றிடு ஆய
கலைகளெல்லாம் கற்றிடு
சேற்று மண்ணும் பாதையென்று
தேர் இழுத்துக் கொண்டாடு
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
# 276 தூள்
dhooL.com-இன் 1000-மாவது பாடலை முன்னிட்டு எழுதியது.
தூள் எனக்கு
ஆயிரம் கிளைகள் விரித்தாடும்
ஆலமரத்தடி
என் இசைத்தேனை அதிகரித்து
அடைகாத்து வரும்
தேன்கூடு
கை விரல்கள் தொழில் புரிய
காதுகள் மட்டும் திருடித் திங்கும்
திருட்டுக் கனி
என் இசைக் கோவில் அவதாரங்களின்
கொலு வரிசை
என் நினைவுக்கற்களின்
பின்னணி முலாம்
என் ரசனையின் நாட்குறிப்பு
என் பித்தின் புலனாய்வு
என் பக்தியின் பரிகாசம்
என் அறியாமையின் அறிவிப்பு
என் பயணத்தின் மனப்பாடம்
என் திரவியத் திரைகடல்
என் நட்பின் துறைமுகம்
# 275 தாய்வீடு
274-க்கு எழுதிய மெட்டிற்கே வேறு விதத்தில் இயற்கை பராமரிப்பு, பச்சை புரட்சியென்று எழுதியது:
பூரிக்கும் உள்ளம் இது இயற்கை நாடும்
பார்வைக்கு யாவும் பரவசமாகும்
வித வித உடைகள் மாற்றுவாள்
வெப்பம், பனி, மழை காட்டுவாள்
இதயங்கள் போலே உதயம்
ஒவ்வொன்றும் ஒரு குனமே
ஒரு நிறமாய் நின்ற இலைகள்
பல வகையாய் மாறிவருமே
பச்சை உலகத்தை
பார்த்து கொண்டாடு
என்றும் தாய்வீடு
இதை இழக்கலாகாது
பாலைமண் விதையெலாம்
ஒருநாள் மழையில் பூக்கலாம்,
பிறந்ததும் நடக்கிற
பிஞ்சுக் குதிரை பார்க்கலாம்,
எரிமலையும் செதுக்கிப் போகும் சிற்பமே
இதையெல்லாம் மறக்கலாமா மனிதனே?
உயிர்மூச்சையும் தரும் தாவரம் வாழ வைப்போமா?
பச்சை உலகத்தை
பார்த்து கொண்டாடு
என்றும் தாய்வீடு
இதை இழக்கலாகாது
ஓடைக்கே ஆடைபோல்
இலைகள் படர்ந்த அம்சமே
காணத்தான் முடியுமா
கட்டிட நகரம் கூடிவந்தால்?
எதிர்கால தாகத்திற்கு ஒட்டகம்
நிகழ்காலம் சேமிப்பதுபோல் நாமுமே
தாய்பூமியை பல தலைமுறை வாழ வைப்போமே!
பச்சை உலகத்தை
பார்த்து கொண்டாடு
என்றும் தாய்வீடு
இதை இழக்கலாகாது
# 274 கோரிக்கை
நண்பன் சிரீகாந்தின் இசைக்கு இயற்றிய பாடலிது. ஒரு இளம் பெண் இலையுதிர்காலத்தை நீடிக்கச்சொல்லி இயற்கை அண்ணையிடம் கோரிக்கையிடுவதாய் கற்பனை.
பூரிக்கும் உள்ளம் இது இலையுதிர்காலம்
வாடைக்கு முன்னே புதுப்பிக்கும் காலம்
வித வித உடைகள் மாற்றுவாள்
பழையதை உலுக்கியும் நீக்குவாள்
ஒளி கொஞ்சம் மங்கியதாலே
பல வண்ணம் தென்படுமே
ஒரு நிறமாய் நின்ற இலைகள்
பல தினுசாய் மாறிவருமே
முத்து மனதம்மா
சற்று பொரு அம்மா
வாடை காற்றைத் தாமதித்து
வண்ணம் காட்டம்மா
வாடிக்கை என்பதால்
மீண்டும் அதையே செய்வதா?
கோரிக்கை செய்திடும்
குமரியின் பேச்சைக் கேட்பதால்
முக்காடு போடும் முகங்கள் மலருமே
எங்கெங்கும் சிரித்த படியே மனிதரும்,
நடமாடிட, கலை கூடிட, நீயும் செய்வாயா?
முத்து மனதம்மா
சற்று பொரு அம்மா
வாடை காற்றைத் தாமதித்து
வண்ணம் காட்டம்மா
ஓடைக்கே ஆடைபோல்
இலைகள் படர்ந்த அம்சமே
காணத்தான் முடியுமா?
குளிரும் பனியும் கொண்டுவந்தால்
படகெல்லாம் ஓரம்கட்டி கிடக்குமே
உடலெல்லாம் விரைத்த படியே மனிதரும்,
சிரிக்காமலே, ரசிக்காமலே, இயந்திரம்போலே நகருவதா?
முத்து மனதம்மா
சற்று பொரு அம்மா
வாடை காற்றைத் தாமதித்து
வண்ணம் காட்டம்மா
# 272 புத்தாண்டு
காலதேவதையின் பாதையில்
இன்னொரு கல்
எதிர்பார்ப்புகளுக்கும் ஏக்கங்களுக்கும்
புத்துயிர்
பழமைக்கு கொடும்பாவி
புதுமைக்கு தாலாட்டு
தோல்விக்கு மறதித் தைலம்
வெற்றிக்கு பண்டிகை நாள்
உறவுக்கு உறுதி சேர்க்கும்
அடிமண்
தனிமைக்கு தழும்பு சேர்க்கும்
தவம்
முதுமையின் மதியில்
இன்னுமோர் சிலந்திவலை
இளமையின் அனுபவத்தில்
இன்னுமோர் பரிசு
வாழ்வுடன் மறுபடியும்
ஒரு ஒப்பந்தம்
நினைவிற்கு இன்னொரு
சுரங்கம்
# 271 கவிதை வாழும் கண்ணில்
அன்பிற்கு சின்னமாய்
பூத்த பூக்களைக் கிள்ளுவான்
கழுத்தில் ரத்தம் சொட்டுமுன்னே
பொட்டலமாய்க் கட்டுவான்
அவளைக் கண்டு இலகுவதை
பகிரங்கமாய் சொல்லுவான்
எக்கால கட்டமும்
எட்டாது நிற்கும்
கவிஞன் மனது இதைக்
குற்றமென்றெ திட்டும்,
அன்பைக் காட்டுவதில் கூட
அரக்கத்தனம் தேவையா?
உருவங்கள் ஒன்று
வாழும் உலகங்கள் வேறு
கவிஞனின் நெஞ்சில்
தர்மங்கள் வேறு
பூமித்தாயின் சோகத்திற்கு
வானம் சிந்தும் ஆருதல்
பசையில்லா பார்வைக்கு
வெரும் மழையாய் சேர்ந்திடும்
கவிதையில்லா கண்ணுக்கு
அது பறிபோன பட்டம்
கவிதை வாழும் கண்ணில்
அது காற்றில் பூத்த தாமரை
# 270 மணிக்குயில்
நண்பன் முரளியின் மெட்டிற்கு இயற்றிய பாடலிது.
கிளி கூறிய வார்த்தைகள் நம்பிடவா?
இது என் மனம் ஏற்றிய நாடகமா?
நிலைமாறா காதல் மார்கண்டேயனா?
இளம்காதலின் ஆயுளும் அறைநொடியா?
சிறு ஊடலில் சீர்கெடும் சங்கதியா?
சுமை தாங்காதென்றால் காதல் காதலா?
அனுபல்லவி:
===========
சேராத ஆசைச் சொல்லை வாங்கித் தென்றல் போகுதே
தாங்காத சோகம் கண்டு பூவும் நீரைக் கோர்க்குதே
ஆறாத காயத்தாலே நெஞ்சம் இறுகிடுதே
(கிளி...
சரணம் 1:
==========
மேலோட்டம் மேய்வதன் பேரோ
மெய்க்காதல் இல்லையடி
அனுசரணை உறவின் ஆதாரம்
அதிகாரம் அழிக்குமடி
மனதாற மாடத்தில் கூவும்
மணிக் குயிலைப் போல் நினைவு
மதி கூறும் போதனை யாவும்
உணர்ச்சியிடம் தோற்கிறது
விழியிலவள் தேவதை என்றும்
நெஞ்சிலோ வேகின்றாள்
கவிஞனின் காதல் மடலை
கல்லரையில் ஏன் எரித்தாள் ?
மோகவுரை போதும் என்று
முடிவுரை படிக்கின்றாள்
(கிளி...
சரணம் 2:
===========
காதல் நெஞ்சம் தாங்கும் எதையும் எனும்
சொல் பொய்யாகிறதே
சாதல் வரை சேர்தல் எனும் நினைப்பு
நடக்க மறுக்கிறதே
பாதகியைப் பார்க்காமல் இதயம்
உருகி நனைகிறதே
சீதையினைப் போலே என நினைத்து
தீயில் குளிக்கிறதே
விழியிலவள் தேவதை என்றும்
நெஞ்சிலோ வேகின்றாள்
கவிஞனின் காதல் மடலை
கல்லரையில் ஏன் எரித்தாள் ?
நிருமுத்த இதயமது
நிரயம் ஆனது ஏன் ?
(கிளி...
=======
காதலி என்றோ வேறிடம் சென்றாள்
காதலைத்தானே அவன் வென்றான்
காதலி என்றோ வேறிடம் சென்றாள்
காதலைத்தானே அவன் வென்றான்
# 269 சாமக் கோயில்
மேடையிலிருந்து கூரைவரை
வீற்றிருக்கும் வெள்ளிக் கம்பம்
அதில் கொடி சுற்றி சுழன்றேறும் கிளையாக
கோதையவள் ஆடிடுவாள்
கொஞ்சம் கொஞ்சமாய் தன்னையே
துயிலுரித்து
வாலிபக் கோமான்களும் வயோதிகச் சீமான்களும்
சன்னதியைச் சுற்றி சம்மனிட்டு
அவள் அந்தரங்க அழகை அசைபோட்டு
அர்ச்சனைத் தட்டாகும் உள்ளாடைக்குள்
ஒன்று முதல் நூறுவரை வசதிப்படியோ
வசியத்தின்படியோ
ஒருபாதியாய் மடித்து
நாரில் பூவைக்கும் நளினத்துடன்
நயமாகச் சொருகிடுவார்
அங்குலம் அங்குலமாய் உடை
அங்கே உரித்துவர
கண்ணாடி சீசாக்களில் சாராயம் தீர்ந்துவர
ஊளையிடும் இசைக்கருவி
காமத்தை விசிறிவிட
நுழைவாயில் கட்டணம்
தரிசிக்கும் கட்டணம்
உண்ண உறிஞ்சிட கூடுதல் கட்டணமென்று
தேர்தல் தொகுதியென தோன்றுமளவுக்கு
பணமிங்கே புரலும்
வசூலிக்கும் விடுதிக்கும்
தரிசித்த பக்தருக்கும்
இங்கு தினந்தோரும் திருநாளே
காட்சிப்பொருளான கன்னிக்கோ
கல்லூரி செலவிற்கும்
குடும்பச் செலவிற்கும்
பாலமாக
இந்த மோப்ப நாய்களின்
மத்தியில் மாமிசத் துண்டாய்
தான் நடிப்பதாய் ஏளனம்
"இன்னும் சில நாட்களே"
என்று அவள் மனதில் முனுமுனுக்கும்
இருமாப்பு மந்திரம்
இச்சையை பட்டியலிட்டு
இருட்டுலகில் பதுக்கிவிட்டால்
துன்பமும் இன்பமும்
கொடுக்கல் வாங்கல்
என்று இருதரப்பாய்
பிறிந்துவிடும்
# 268 முதற்காதலே
நண்பர் மாருதி நம்பியின் இசை வடிவிற்கு இயற்றிய பாடலிது.
M:
முதற்காதலே என்றும் மறவாததே
உணர்த்தாததா உள்ளம் உணராததா
F:
அடுத்தடுத்து சொந்தம் பெருக்கெடுத்தும்
பருவத்தில் கண்ட காதல் முதலானதே
முதற்காதலே என்றும் மறவாததே
உணர்த்தாததா உள்ளம் உணராததா
M:
படிக்கும்போது பழகும்போது நடந்ததெலாம்
நினைவே கிளறிவிட
F:
அழைத்துப் போகும் இளமைக்காலம் நீந்திடலாம்
(முதற்காதலே...
F:
இரவுகலிலும் பிரகாசமாய் முகம் மாறுவார்
சுடரென சுடும் அவன் புகும் இவள் மனம்
உலகிவரது மைதானமாய் சுழன்றாடுவார்
M:
கடற்கரையிலும் கலாபமாய் முகம் தேடுவார்
தனிப் படுக்கையில் தவித்திட தவித்திட
இயக்கமெலாம் இவள் அவன் அவன் இவள்
F:
மயங்காது மோகம் உண்டா
கலங்காது காதல் உண்டா
M:
ஆடல் பாடல் ஊடல் கூடல் நடந்திட
காலம் சென்றும் காதல் வரும்
(முதற்காதலே...
M:
இடைவெளியினை மதித்திடா இளம் காளைதான்
உள்ளம் பறித்தவன் உரிமையில் துடித்தவன்
அவள் மதிப்பினை அடைந்துதான் எடுத்தாளுவான்
F:
அசைந்தெரிந்திடும் அகல் ஒளி இவள் பாங்குதான்
உணர்வலைகளை மறபெனும் சுவரிட்டு
இவள் தவிப்பதை மறைத்துத்தான் புகழ் காக்கிறாள்
M:
இளம் காதல் யாகம் தானே
நிகழ்கால மோகம் தேனே
F:
மீண்டும் மீண்டும் நீயும் நானும் இணைந்திட
காதல் நெஞ்சில் காலம் சிறை
(முதற்காதலே...
# 267 கடன் கூடு
செந்தூர வாகன விளக்கொளி
இருவிழியாய் ஜொலித்து நகரும்
என் முன்னே வெள்ளப்பெருக்காய்
கொந்தலித்த எரிமலையாய்...
கண் முன்னே நீளும் நீளும் சாலைகள்
நெஞ்செங்கும் யாகம்
வேகும் நினைவின் ஓலைகள்
விடுதி விட்டு வீடு செல்லும்
நடுவர்க நாயகர்கள்
வெளியூரில் படையெடுத்து
தரம் குறைந்த தொகுதியில்
தகுதி மறந்து மாளிகை கட்ட
விதி என்னும் சுடலைமாடன்
விறகுக் கிடங்கை விரிவாக்கினான்
ஒளிவு மறைவாய் உண்மை இருக்க
ஒப்பந்தங்கள் கை மாற
கடன் கொடுத்த கடன் காரர்கள்
அரசாங்கத்தில் அடைக்கலம்
பணங்காய் உருண்டு மண்ணில் விழ
குருவிக்கு தலை வலி
மருந்தாய் கிடைத்தது முக்காடு
அனாதைப் பினமாய் எத்தனை வீடுகள்
பொலிவிழந்து பூட்டி நிற்பதோ?
ஆண்மை இழந்த அரசாட்சி
அம்பலமானது அனைவருக்கும்
# 266 கைவிரல் காவியம்
கறுப்பு வெள்ளை பளிங்குப் படிகள்
ஒன்றையொன்று ஒட்டி நிற்க
விரல் படை அதில் தடம் பதித்து
ஓடி விளையாடிட
காவியம் படைக்கும் இசை
கண்ணெதிரே பிறந்து
காதுகளில் தவழ்ந்து
நினைவுலகில் வளர்கிறது
இந்த நினைவுக்குழந்தையை
நினைத்த நேரம் அள்ளிக் கொஞ்ச
முடிந்தபோதும்
மேலும் பல இசைக் குழந்தைகளை
இனம் கண்டு நினைவுக்கூடத்தில்
சேர்ப்பதே என் ஓயாத வேட்கை
# 265 எல்லை
நெஞ்சத்தில் அன்றாடம்
நீங்காது மன்றாடும்
சொல்லாத ஆசையெல்லாம்
எங்கே நிறைவேறும்?
இன்பத்திற்கெல்லைகள்
என்றெல்லாம் சொல்லாதே
எண்ணத்தின் வறட்சிதானே
எல்லை என்னாளும்
பழகாத ஒவ்வொன்றும்
தவறென்று சொல்கின்றாய்
புரியாத ஒவ்வொன்றும்
பிடிக்காது என்கின்றாய்
சமுதாயம் மக்களுக்காக
என்பதை ஏனோ மறக்கின்றாய்
இன்றைய பழக்கங்கள்
நாளைய வழக்கங்கள்
புறக்கனித்த ஆசையெல்லாம்
புலப்படுத்தும் புலவன் நான்
புறமுதுகு காட்டுவது
போரில் மட்டும் குற்றமில்லை
தானாக தோன்றியதின் இயல்பை
மறுக்கின்ற பிடிவாதம்
மெய்யான தேடலின் இயல்பை
ஏற்பதில் கிடையாதா?
# 264 மலையின் முகடுகள்
நண்பர் ரெகுராம் தங்கிராலாவின் மெட்டிற்கு எழுதிய பாடலிது.
மலையின் முகடுகள் வளைந்து நெளிந்திளைப்பாறுதே
மலையின் முகடுகள் வளைந்து நெளிந்திளைப்பாறுதே
வசந்த வானை வேலிபோட்டு காக்குதோ?
நனைந்த மேகம் காயும் கொடியாய் ஆகுதோ?
இயற்கையே உன்னை கேட்கத்தானே சிகரம் நோக்கி
ஏறுகின்றேன்
(மலையின்...
----------------
சரணம் 1
கூர்மையான தூரிகைபோல் நீளும் மரமே,
உமது நுனிகள் தேய்த்துத்தானோ வானும் நீலம்
ஆனது?
ஏழ்மையான தேசமெல்லாம் சூடில் வதங்க
மேலைநாடோ தேவை மீறி குளிர்வதென்ன ஞாயமோ?
வானிலே காணும் சம நிலையே
காக்கையும் குருவி கிளியுடனே
பூமி இறங்கி, மனிதர் போலே
இனங்கள் இனத்துடன் பிரிந்து வாழும்
(மலையின்...
---------------------
சரணம் 2:
இயற்கையே உந்தன் இயக்கமே புரிந்திடாது
பலனைத் தேடி அணுகும்போது புலப்படாது
உனக்கென வேதமே உள்ளதோ?
மெய்ப்பொருள் எவ்விடம் காண்பதோ?
விலகினால் தொடருவேன்
தொடர்வதால் விலகுவாய்
தேடலில்லாமல் அதுவும் வாழ்கை ஆகுமா, விடை சொல்?
(மலையின்...
# 263 உறக்கத்திடம் கடன்
ஜோதா அக்பர் என்ற இந்தி படத்துப் பாடலை, நண்பன் முரளி என் தமிழில் கேட்க விரும்பியதன் விளைவு இது...
உறக்கத்திடம் கடன் வாங்கி வந்தேன்
உன்னிடம் செலவிடும் நேரமதை
உறக்கத்திடம் கடன் வாங்கி வந்தேன்
உன்னிடம் செலவிடும் நேரமதை
பயணத்தில்கூட கண் அயர்ந்தாலும் உன் முகமே
மலையின் இடுப்பை ரயில் அணைக்கயிலும் உன் நினைவே
மேகப்படியில் ஏறியுமே சொர்கம் தொலைவில்தானே
உன் மோகப்பிடியில் சொர்கம் அறிந்தேனே...ஓ ஹோ...
(உறக்கத்திடம்...)
வானுக்கொரு ஏணியென புகை கசியும் வாகனமே
ராமன் கதையில் அனுமான் போலொரு தூதுவனே
நாளுக்கொரு மேணியென நாகரிகம் மாறியுமே
காதலர் பிறிந்து சந்தித்தால்தான் காதலே
பாசத்திலில்லா பரவசமே
நேசத்தில்கூட கிடைக்கலையே
மோகம் அன்பின் மொத்த உருவாய் வாய்த்தது ஏன்?
மேகப்படியில் ஏறியுமே சொர்கம் தொலைவில்தானே
உன் மோகப்பிடியில் சொர்கம் அறிந்தேனே...ஓ ஹோ...
(உறக்கத்திடம்...)
இன்பத்தையும் தோலுறித்து அனுஅனுவாய் படிக்கின்றார்
நம் இச்சைகள்கூட விஞ்ஞானத்தின் வரைபடமாம்
காதலுமே கடவுள் செயல், படைத்தவனின் இணைப்பு செயல்
சொர்கத்திலே நம் பட்டியலாம், நிச்சயமாம்
விஞ்ஞானிகளை துரத்திவிடு
அஞ்ஞானிகளை அனுப்பிவிடு
என் காதலின் ரகசியம் புரியாமல்தான் இருக்கட்டுமே
மேகப்படியில் ஏறியுமே சொர்கம் தொலைவில்தானே
உன் மோகப்பிடியில் சொர்கம் அறிந்தேனே...ஓ ஹோ...
(உறக்கத்திடம்...)
# 262 மை பூசாதே
மை பூசாதே அன்பே
விழி மேகமென்று தன்னை நினைத்து
முகம் நனைக்கக் கூடும்
உதட்டில் சாயம் போடாதே அன்பே
செவ்விதழ் ஏட்டில்
நம் காதல் சரிதத்தின்
கதைச் சுருக்கமே ஒளிந்திருக்கிறது
புன்னகைக்காதே அன்பே
பிறர் நம் மெளன உரையை
மொழி பெயர்க்கக்கூடும்
நகம் வளர்க்காதே அன்பே
நம் ஏகாந்தச் சடங்கின் அடிச்சுவடுகள்
அம்பலமாகிவிடும்
# 261 குருடன் வழி
ஆற்றும் வித்தை தெரியாமல்
காலத்திடம் ஒப்படைத்தேன்
காயத்தை
காயம் ஆறவில்லை
நேரம்தான் அழிந்தது
தூங்க மறந்த விழிகளின் பின்
மறைந்திடாத நினைவுகள்
மூடிவைத்த ஏக்கங்களோ
மடை உடைத்த நீர் அலைகள்
ஆக்க சக்தி என்பதெல்லாம்
ஊக்கமுள்ளோர் கைகளில்
மனமுடைத்த காரிகையிடம்தான்
என் மார்க்கமும் உள்ளது
பெளர்ணமி நிலவில் குடி வைத்தாலும்
குருடன் வழி
இருட்டில்தான்
ஆனால் கைத்தடியாய் இருந்த
நம்பிக்கையும் காணாமல் போக
சொர்கவாசலே அழைத்தாலும்
என் சுவடுகளின் கதியே
என் விதி
# 260 பால் மனங்கள்
அப்படி வாய்த்தால் எப்படியிருக்கும்
என்ற சிந்தனை பெண்ணின் மனம்
இதுதான் நிலைமை தற்சமயம்
என்று வாழ்ந்திடும் ஆணின் மனம்
வாய்த்ததற்கும் வேண்டியதற்கும்
உள்ள இடைவெளியை அலசும்
இவள் ஏக்கப் பெருமூச்சை
தன் இயலாமையின் பிரதிபலிப்பாய்
அவன் உணர...
வெவ்வேறு கோணத்திலிருந்து
வாக்குவாதம் வளரும்
கங்கு வளர்க்கும் எரிமலையாய்
இருவரின் காயமும் ஆழமாகும்
உறவின் வரலாற்றில்
இணைந்தவரின் ஒற்றுமைகள் இழைவதென்னவோ
கொஞ்சம்தான்
வாழ்வின் ஒவ்வொரு படியிலும்
எதிர்நோக்கும் கட்டாயத்தில் எடுக்கப்படும் முடிவுகள்
ஆணின் வழியோ பெண்ணின் வழியோ
எதுவானாலும் சிரமம்தான்
எடுத்த முடிவின் வெற்றியைவிட
புறக்கணித்த முடிவின் கசப்பு
நீண்ட நாள் நிலைக்கும்
எடுத்த முடிவின் தோல்வியோ
விரிசலை இன்னும் பெரிதாக்கும்
# 259 தேர் பாகன்
ஊரெங்கும் நீ உலா வர
நான் உன் லீலைகளின் சாட்சியாகிறேன்
வணங்கும் உயரத்தில் நீ இல்லை என்று
என் நிலையில் பிறர் கூறலாம்
ஆனால் பழிக்கும் உயரத்தில் நான் இல்லை
துணைவனில்லாத குறையில்தான்
துணைக்கு இருப்பவனிடம் மனம் திறந்தாயோ?
சமுதாயம் நமக்கு மறுத்த சமத்துவம்
நீ அயர்ச்சியில் என்னிடம் பகிர்ந்த
உண்மையின் பலவீனத்தில்
பிறந்தது
பல வேடங்கள் சூடும் உன்னிடம்
வாழ்க்கை, தன் வேடம் கலைத்த சோகம் கொடியது
விரக்தியில் நீ சிரிக்கையில்
கைகுலுக்கல் உறவுகளின்
காயத்தைப் புரிந்தேன்
உன் வாழ்க்கையின் விசை
வேகத்திலேயே இருப்பதை
பிறர் அதிசயிக்க
உன் அழகிற்குக் காலக் கட்டணம்
உயர்ந்து வருவதை உணர்ந்தேன்
உனக்குக் காற்றுள்ளபோதே
உன்னை தூற்றிய உலகம்
உன் திரை இறங்கிய பின்னர்
என்ன கூறுமோ?
இருந்தும் தேவதையை ஓட்டிச்செல்லும்
தேர் பாகனே
ஆசை கொள்வதா?
தயங்குகிறேன்...
இது வேலிக்கும் பயிருக்கும்
உள்ள உறவா?
குழம்புகிறேன்...
# 258 பட்டுப்பூச்சியே
மொட்டுச் செடிகளையும்
உன் முணகலால்
மலர வைக்கும்
பட்டுப்பூச்சியே
பரவசப் பெருமூச்சுடன் பிறர்
உன்னைப் பார்த்திருக்க
பறந்து பறந்து
உன் பஞ்சவர்ணத்தை
வசிய விசிறியாய்
நீ விரித்து மூட
அழகு உன் அந்தஸ்தென
அற்பனுக்கும் தெளிவாகிறது
ஆனால் ஒய்யாரமாய் உயரப் பறந்து
விண்ணளந்த காற்றாடியும்
திசை மறந்து தவித்தோ
நூலினை அறுத்தோ
மரத்தில் சிக்கிய பின்னே
பார்ப்பவர் கண்களில்
தென்படப்போவது
பரிதாபமோ ஏளனமோ
மட்டும்தான்
பட்டுப்பூச்சியே
நீ புழுவாக இருந்தபோதே
உன்னை பழகியவன் நான்
என்னிடத்தில் ஏன் இந்த
ஆடம்பரம்?
காதல் என்ற காற்றாடி
உறவுக் கயிற்றால் உயர்ந்து
விதியெனும் காற்றில்
வளைந்தாடுகிறது
காற்றிழுத்த பக்கமெல்லாம்
கை பிடித்து ஆடிவிட்டு
பெருமையெல்லாம் தனதென
பட்டம் நினைப்பதென்ன விபரீதம்?
# 257 நிராகரித்த அழகு
பற்ற வைத்ததும் தெறிக்கும்
மத்தாப்புத் துளிகள்போல்
காற்றின் அவசர சிலிர்ப்பிற்கு அம்பாகக்
குவிந்து சிதறிய இருபது வெண்புறாக்கள்
அந்தப் பாழடைந்த மண்டபத்திற்கு
சிறிதும் பழக்கமில்லாத
செழிப்பை வரைந்தன
மனிதர் மறந்த மண்டபத்தை
செடிகளும் பறவைகளும் செல்லமாக்கிக் கொண்டாடுவது
உற்சாகமளித்தது
பயனற்றதென்று மனிதர் நிராகரித்த
எத்தனையோ பொருட்களில்
படிந்திருக்கும் அழகே
உன்னை வணங்கிட
ஓர் இதயம் இங்கே
# 256 சுயவிலாசக் கடிதம்
என் பாட்டை மிகையாக போற்றியவருண்டு
வகையாக வசைபாடித் தூற்றியவருண்டு
புரிந்தும் புரியாமல் புன்னகைத்தோருண்டு
கடமைக்குக் கைதட்டியோ
நட்புக்கு நகைத்தோ
எத்தனையோ விதத்தில் விமர்சித்தோருண்டு
வழியனுப்ப வந்தோரை நம்பித்தானா
யாத்திரை நடக்கின்றது?
வழக்கத்தை, ஒழுக்கத்தை நம்பித்தானா
புரட்சி இருக்கின்றது?
என் ஆற்றல் நான் அறிவேன் ஆணவமில்லை
என் மனக்கண்ணாடி பொய் சொன்னதில்லை
முயற்சி என் முள்கிரீடம்
பயிற்சி என் பள்ளியறை
கலைத் துரோணர் குருகுலத்தில்
இடம் கிடைக்குமென்று
இந்த எழுதுகோல் ஏகலைவன்
எதிர்பார்த்ததில்லை
# 255 கட்டணம்
அணிவித்த ஆசைப்பார்வையை
அழைக்காத விருந்தாளிபோல்
புறக்கணித்திருந்தால் கூட
புரிந்திருப்பேனே நான்
ஆனாலும் உந்தன் விழிகள்
அசைந்தும் அசையாத வண்ணம்
கசிந்தும் கசியாத ஈரம்
உள்ளொன்று சொல்கிறது
புறமொன்று செய்கிறது
அனுமதி கேட்டுத்தானோ ஆசைகூட உதிக்கும் உனக்கு?
அறிவேன் உன் பேதை மனதை
அனுதாபம் ஏற்றுக்கொள்
என் வாசல் திறந்தே இருக்கும்
சிறைவைக்க ஒன்றுமில்லை
என் கோலம் ஊரறியும்
எதிர்க்கின்ற ஆளில்லை
உள்ளத்தில் உதிரும் உண்மை
அதரத்தில் அரங்கேற உனக்கு
எத்தனை திங்கள் ஆகும்
தெரிந்திருந்தால் சொல்லிவிடு
சொல்லாமல் போனால் என்ன
சலிக்கவா போகிறேன்?
காலம்தான் கட்டணம் என்றால்
காதலுக்கது மலிவென்பேன்
# 254 தொடர்கதை
என் கடந்த காலக் கனவுகளின்
நிரந்தர நாயகியே
இறந்த காலம் என்ற சொல்லை
இன்று முழுதாய் உணருகிறேன்
எத்தனை பொழுதுகள் உன்னுடன் சாய்ந்தன
உணர்ந்திருப்பாயோ பிறிந்தவண்ணம்?
எத்தனை நிலவுகள் விடியலில் மூழ்கின
நம்மிருவரை பார்த்தவண்ணம்!
உறவின் பழைய பக்கங்களை
விடாமல் படித்து வருகிறேன்
விரிசலின் முதல் குறி
அங்கேதானே இருக்கிறது!
உறவு என்றால் தொடர்கதையென்று
இத்தனைக் காலம் நினைத்துவிட்டேன்
இதயம் கொண்ட உறவிற்கும் இறுதிப்பக்கம் இருக்கிறதா?
இழந்தவனுக்கும் இறந்தவனுக்கும்
ஓரெழுத்தே வேற்றுமை
இறந்தவன் பாடு முடிகிறது
இழந்தவன் பாடு தொடர்கிறது
# 253 புகலிடம்
சிறு துளியாய் தொடங்குகிறோம்
பல நதியாய் தொடருகிறோம்
மேட்டில் சிலபேர் ஏறிவிட
மீதி பள்ளம் சேருகிறோம்
ஏற்ற தாழ்வாய் மாறுகிறோம்
தொடக்கத்தில் கலங்கமில்லை
வளர்ச்சியிலோ வேற்றுமைகள்
இடைப்பொழுதில் எத்தனையோ
ஏற்படுமே இடைவெளிகள்
கணக்கிட்டுப் பார்க்கையில்தான்
புரிகிறது ஒற்றுமைகள்
செல்வத்தில் செழித்தவரும்
கையேந்திப் பிழைத்தவரும்
புகழ் மாலை குவித்தவரும்
பெயரின்றி நிலைத்தவரும்
எண்ணிப் பார்த்தால் இறுதியில்
அடைய விரும்புவது ஓரிடம்
அது இன்னொரு நெஞ்சில் என்றென்றும்
நீங்காத புகலிடம்
# 252 மனமாற்றம்
பாலாடை போல் சின்ன மேலாடை கொண்டுமே
பளிச்சிடும் தந்தமென உன் உடல் வந்துமே
என் நெஞ்சைக் கொள்ளையிட
இது தேவை இல்லையே
பெண்ணே நீ பூவேதான் என்றாலும் சாய்வேனா?
உன் பார்வை காந்தத்திற்கு இரும்பாக ஆவேனா?
தரம் சேர்க்க செய்த கலை நிறம் மாறிப் போகுமே
என் நெஞ்சைக் கொள்ளையிட
இது தேவை இல்லையே
உடல் உருவம் எல்லாம் பிறப்போடு வந்ததே
உடை அணிகலன்கள் ஊர் சொல்லித் தந்ததே
உனைச் சேர்ந்த எத்தனையோ
உடன் மறுத்து வந்தவனை
உயிர் வரைக்கும் நீ என்று
உரைக்க வைத்து வென்றதெது?
உற்சாகத் தேக்கம் உள்ளத்தில் உலைபோல
மத்தாப்பு கிளைகளாய் மின்சாரம் அலைபோல
உடலுக்குள் உருவாகி உயிர்வரை ஊனமாக்கும்
உண்மையை மறைக்காத
புன்னகை வென்றதே
# 251 பின்குறிப்பு
சிறகிழந்த தேவதைபோல்
தேடுகிறாள் அவள் சொர்கத்தை
வழி மறந்த வாலிபனோ
பயணத்தை சாடுகிறான்
விதி எறிந்த பகடைக்காய்
அவர் சேர்ந்த வேடிக்கை
வழிப்போக்கர் தங்கும் விடுதி
இணைத்தது அவர் பாதை
விழி கனலாய் கொதி கொதிக்க
பரவசத்தால் புல்லறிக்க
ஒரு முறைதான் அனுமதி அனுமதி
முழு மனதாய் அனுபவி அனுபவி
இழப்பைத்தான் பகிர்ந்து கொண்டார்
இன்னல்களை ஒப்பிட்டு
தற்காலிக தாக்கத்தில்
தணித்ததெல்லாம் தனிமைதான்
இரவல் உறவு இரவே தொடங்கி
விடியுமுன் முழுதாய் முடியும்
ஒரு முறைதான் அனுமதி அனுமதி
முழு மனதாய் அனுபவி அனுபவி
பின்புத்தி அலசுமுன்
இருவரும் எதிர் பாதை
உறவுகளின் ஏட்டிலே
இது வெறும் பின்குறிப்பு
# 250 பொல்லாத மனசு
சில நாட்களாகவே ஒரு ஆர்ப்பாட்டமான தெம்மாங்கு எழுதிட மனம் உருத்தி வந்தது. ஆபாசம், ஆங்கிலம் இரண்டும் இல்லாமல் கொண்டாடும்படியாக, எளிமையாக, முனுமுனுக்கும்படியாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே பல உத்தரவுகள் கொடுத்து வந்தேன். கடைசியில் இதோ...
சொன்னா கேக்க மாட்டேங்குது
பொல்லாத மனசு
உன்ன தெனமும் கேட்டேங்குது
பாழாப்போன வயசு
நெஞ்சம் காய்ஞ்சு கெடக்குது
கண்ணோ வாரி எறைக்குது
கொட்டிக் கொட்டி தீக்கப்போயும்
ஆசை தீர மறுக்குது
கனவு இந்தக் காத்தைப்போல
கட்டிப்போட முடியலையே
ஆசை இந்த வயிரப்போல
பூட்டி வெக்க முடியலையே
சொன்னா கேக்க மாட்டேங்குது
பொல்லாத மனசு
உன்ன தெனமும் கேட்டேங்குது
பாழாப்போன வயசு
சேத்து வெச்ச பொருமையெல்லாம்
ரெக்கை கட்டிப் பறக்குது
போத்தி வெச்ச பருவமெல்லாம்
பூத்து பூத்துக் குலுங்குது
பாடக் கணக்கு போடும்போதும்
பார்வை மோட்டப் பெருக்குது
ஏத்தி எறக்கிப் உன்னப்பாத்தா
மூச்சு முட்டித் தவிக்குது
சொன்னா கேக்க மாட்டேங்குது
பொல்லாத மனசு
உன்ன தெனமும் கேட்டேங்குது
பாழாப்போன வயசு
# 249 மைத்துணன்
யார் அந்த மங்கை என்று
கேட்கின்ற நண்பனே
உன் தங்கை என்ற உண்மை
தெரிந்துகொண்டால் தாங்குமா?
கட்டுப்பாட்டுக் கொள்கையில்
வளர்த்துவிட்டாய் தங்கையை
உன்னைப்போல்தான் அவளும்
என் நட்பிற்கு உயிரென்று
குரல் இழந்தாயே
அன்றே இழந்தாளாம் அவள்
என்னிடம் தன் மனதை
நட்பில் மறந்த குற்றங்கள்
சொந்தம் என்றால் உதிக்குதா?
நட்புக்குள்ள அருகதை
சொந்தமென்றால் வழுக்குதா?
சொல்லடா நண்பா நான் சோடை போனதெங்கே?
அவள் மனத்தில் இடம் என்றால்
உன் மனதை நீங்கவா?
ஒரு சொந்தம் இழந்துதான்
மறு சொந்தம் பெறுவதா?
நம் நட்பின் புனிதத்தில் என் காதல் கெடுதலா?
அன்பு என்னும் கடலிலே
முத்தெடுக்க போட்டியா?
நம்பிக்கைத் தோழன் இனி மைத்துணன் நம்பி
ஒருவனே என்றாலும் இரு உறவு இனி
உன் வாழ்த்து இல்லையென்றும்
மணந்திடத்தான் போகிறேன்
காதலின் மகிமையினால் மட்டுமல்ல
நட்பின் வலிமையையும் நம்பித்தான்
# 248 வார்த்தைகள் ஏனடா?
இந்தப் பாடல், நண்பன் முரளியும் நானும் இணைந்து எழுதியது. விரைவில் முரளியின் இசையில் இப்பாடல் வெளிவர இருக்கிறது, அதுவரையில் வார்த்தைகள்தான்...
பெண்:
வார்த்தைகள் ஏனடா?
வன்முறைதானடா
மெளனமே காதலின்
மந்திரம்தானடா
ஆண்:
மெளனமே காத்திட
ஓர்வழி சொல்கிறேன்
உன்னிதழ் கொண்டு வா
ஒற்றியே வைக்கிறேன்
பெண்:
சங்கமிக்கும் நதிக்கடலாய்
கொந்தலிக்கும் எரிமலையாய்
ஆண்:
காதலின் ஜோதி தொட்டால்
காயமல்ல
பெண்:
வார்த்தைகள்...
ஆண்:
சொந்தம்
பல ஆயிரம் தொல்லைகள் தந்தும்
சிறு இன்பங்கள் கோடி
உறவுச் சிறையில்
உதிர்த்து உதிர்த்து போகாதோ?
பெண்:
முந்தும் என் ஆவல் காட்டிட அஞ்சும்
என் நெஞ்சில் நாணம்
அசைவும் இசைவும்
வேறு வேறு ஆகாதோ?
ஆண்:
உருக உருகவே மெழுகும் ஒளிவிடும்
உறவும் விளக்கு வா வா
பெண்:
ஒளிந்த உணர்வுகள் பொழிந்த மழையிலே
உண்மை வெப்பம் விலகும்
ஆண்:
காலை
பரமசுக வேளை
மென் துயிலிலே
உன் அருகிலே
படருவேன் மலையை மூடும் பனியாய்
பெண்:
காலையில் சூரியன்
கன்னமும் கிள்ளுவான்
வேலைகள் உண்டடா
விட்டிடு என்னையே?
ஆண்:
போர்வைக்குள் போர்க்களம்
வேர்வையின் ஊர்வலம்
பார்வையில் கார்வை
சீக்கிரம் சீர் வை
பெண்:
நாற்சுவரும் ஏனோ?
நான்கு குணங்கள் மறைத்திட அனுமதியோ?
ஆண்:
ஆழ் கடலைப் போலே
பெண்ணின் மனமும், அடங்குமோ நான்கினிலே?
பெண்:
உனது கேடயம் எந்தன் தேகமா?
பரிசு போலத்தானா?
ஆண்:
வழியைத் தேடினேன்
உறவுப் பாதையில்
இதயக் கோப்பை உனதே
பெண்:
காதல்
கலை பயில தாகம்
தலை சுழலவே
வலியும் சுகமே
பொன்னென ஆகும் கொல்லன் கலையில்
ஆண்:
சாகசம் ஊமையா
சம்மதம் சைகையா
சேர்த்ததே காதலின்
மந்திரப் பொய்கையா
பெண்:
ஈருடல் சேர்ந்திட
ஓர்வழி சொல்கிறேன்
உன்னிழல் எல்லையில்
என்னிழல் சேர்க்கிறேன்
ஆண்:
நஞ்சினிக்க வைக்கிறதே
மோனத்திலே பொய்க்குமுறல்
பெண்:
மோகமும் நோகவைக்கும்
தீஞ்சுவையோ
ஆண்:
சாகசம் ஊமையா...
# 247 உண்மை நீதி
சதியால் பிறிந்த காதலர்களுக்கு மறுபிறவியில் நீதி கிடைப்பதாகக் கதை. இந்தக் கதைக்கு ஒரு பாடல் எழுதச்சொல்லி ஒரு விண்ணப்பம் எனக்கு கிடைக்க, இந்தப் பாடல் உங்களுக்கு கிடைக்கிறது...
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும்
காதல் ஜோதி
பிறவிகளால் சிறைபடாது
உண்மை நீதி
கனப்பொழுதில் மானிடரை
காலம் பறித்திடலாம்
கள்ளர் போடும் நாடகத்தில்
உண்மை கொஞ்சம் மறைந்திடலாம்
சங்கமித்த உறவிலே சந்தேகம் பாதகம்
சந்தர்ப்பவாதிகளின் ஆயுதம்
சத்தியத்தின் பார்வையிலே
சூழ்ச்சித் திரை விலக்கி...
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும்
காதல் ஜோதி
பிறவிகளால் சிறைபடாது
உண்மை நீதி
ராமர்களை அடையாத போதிலும்
தீக்குளித்த சீதைகள் எத்தனையோ
சோதித்தால் சோடைதானோ சொர்கமும்?
மெய்க்காதல் பொய்க்காது எப்போதும்...
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும்
காதல் ஜோதி
பிறவிகளால் சிறைபடாது உண்மை நீதி
# 246 அழிவுப் பந்தயம்
முடிவிலா வெறுமையின்
ஓலம்
என் ஒற்றைத் தோழனாம்
நிழலின் கறுப்பில்
மோதி மடிய...
காய்ந்த நிலத்தில்
நெருப்பின் பசியைப் போல்
காளை நெஞ்சில் அவள்
நினைவு சிலிர்க்க...
அழிவின் பாதையில் என்றுமே
ஈர்ப்பு அதிகம்!
நான் அழிக்க விரும்புவதோ
என் தனிமையை;
என் நினைவு அழிக்க விரும்புவதோ
என் சிந்தனையை
இந்த அழிவுப் பந்தயம்
ஒரு முரட்டு சிகிச்சை போன்றது
வெற்றியோ தோல்வியோ
ரத்த தானம் எனதுதான்
இழப்பின் துயரத்தில்
குத்திக் கிளறிக் காயப்பட்டு
பழைய தீர்மாணங்கள்,
கோட்பாடுகளை தரைமட்டமாக்கி
தூய எதிர்பார்ப்புகளுடன்
தவழ்ந்து வருகிறது
என் புதிய மனம்
# 245 சுவை
காலச் சுழலின் பிடியில்
கழுத்துவரை மூழ்கி
எம்பிக் குதிக்க முடிந்தவரை
உயிர் ஒட்டுமென்ற விதியில்
எனக்குள் இருக்கும் அனுக்களின்
அசைவுகளெல்லாம் குறைந்துவர...
முடிவின் தீவிரம் அதிகரிக்க...
அழிவேனே தவிர நான்
அடிபணியேன் என்ற மனத்துடன்
வாய்விட்டுச் சிரிக்க...
முடிவின் கசப்பு
இங்கு முக்கியமல்ல
நாவில் தேன் சிந்தியது
முயற்சியின் சுவை
# 244 அந்தி வரட்டும்
எச்சரிக்கையின்றி பொங்கியெழுந்து
அதரத்தில் வெடித்துச் சிதறும்
உன் சிரிப்பு
ஓயாமல் ஒலிக்குதடா
உள்மனதில்
மொழியிலா தென்றலாய்
முனகி வரும் உன் பேச்சு
பணிபுரியும் கவனத்தை
திருப்புதடா திரும்பவும்
தொழில் ஒரு சடங்காகி
சோடைபோனதென்றோ
சொந்தம் ஒரு ஒப்பந்தம்
புரியும் பார் விரைவில்
நிறைவேற்றும் கடனுக்கேற்ப
நிழல் கிடைக்கும் அங்கே
இவ்வுலகின் தன்மைகளை
நீ புரிந்து ஆளுமுன்
விண்ணப்பம் தேவைகளை
நீ அடுக்கிப்போகுமுன்
கொடுக்கல் வாங்கல் வாழ்க்கையில்
நீயும் வழக்காடுமுன்
உன் விலையிலா பாசத்தில்
ஒளிவான் உன் தந்தை
உன்னைச் சேர்ந்து
என்னை மறக்க
அந்தி வரட்டும்
அது வரையில் கடமையை
செய்ய விடு கண்ணா
# 243 ஊசிப்பார்வை
ஊசிப்பார்வையால் எனை நூற்க்கிறாள்
ஆசை நூலாக நெஞ்சைப் பிண்ணுதே
இருள் வானின் போர்வையிலே
அடைபட்ட இதயத்தை
வைரப் புன்னகையுடனே
சிறு மின்னல் சிறை மீட்க
ரணமான இடமெல்லாம்
ரம்மியமாய் புதுப்பிக்க
ஊசிப்பார்வையால் எனை நூற்க்கிறாள்
ஆசை நூலாக நெஞ்சைப் பிண்ணுதே
மனமே தாளாக
அதில் இவள் சிதறும் மையாக
பின் வார்த்தை கோர்த்த பா ஆக
மென்மேலும் வளர்கிறாள்
வடிவம் பெருகிறாள்
ஊடுருவி
ஊசிப்பார்வையால் எனை நூற்க்கிறாள்
ஆசை நூலாக நெஞ்சைப் பிண்ணுதே
# 242 சாபமே
ஒரு நண்பரின் வேண்டுகோலுக்கிணங்கி ரியானா என்ற ஆங்கிலப் பாடகியின் ஒரு பிரபலமான பாடலை தமிழில் (மொழி பெயர்க்காமல்) எழுதியதன் விளைவு இது.
சொந்தக் கதைதான்
சொல்லத் துடித்தேன்
வார்த்தை விட்டுப் போனதடி
நெஞ்சில் ஒருத்தி
உன்னை நிறைத்து
தன்னையே தேடும் விதி
தேவை அவன்தான்
நெஞ்சம் சொன்னது
வெட்ட வெட்ட வேர் கொண்டது
சென்ற திசையே
சூன்யமானது
தென்றல் இங்கு தீ வார்க்குது
சொல்லிவிடு நீதான் தங்கத் தேர்தான்
தவிக்கின்ற முல்லைக்கினி
முறித்து நீ போனால் நான் யாரோ இனி
உண்மை சொல்லி விடு
என்னை வென்ற கண்கள் நீதானா?
என்னைத் தொட்ட கைகள் நீதானா?
என்னைச் சுடும் வார்த்தை நிஜமா?
உண்மையென்றால் உன்னைப் பொய் என்பேன்
நன்றிக்கடன் கேட்டு கிடைக்காது
ஞாயங்களைத் தேடி முடியாது
காதல் ஞானியாக்கும் சாபமே
வாடைக் காற்றிலே
ஓடைப் பேச்சிலே
நெஞ்சமோ ஆறவில்லையே
நன்றி போகட்டும்
ஞாயம் போகட்டும்
காதல் இங்கு பொய்க்கவில்லையே
என்னில் இருந்த உணர்வுண்மையே
ஈரமணல் பூக்குமே
மீண்டும் விரைவே
ஓர் விபத்துக்குப் போய்
முழு வாழ்வின் இழப்பா?
சொல்லிவிடு நீதான் தங்கத் தேர்தான்
தவிக்கின்ற முல்லைக்கினி
முறித்து நீ போனால் நான் யாரோ இனி
உண்மை சொல்லி விடு
என்னை வென்ற கண்கள் நீதானா?
என்னைத் தொட்ட கைகள் நீதானா?
என்னைச் சுடும் வார்த்தை நிஜமா?
உண்மையென்றால் உன்னைப் பொய் என்பேன்
நன்றிக்கடன் கேட்டு கிடைக்காது
ஞாயங்களைத் தேடி முடியாது
காதல் ஞானியாக்கும் சாபமே
நான் வேறாக
நீ மறந்த பேராக
கதை முடியுதே
திருத்திவிடு
என்னை விட்டு நீங்கிப் போகாதே
போகாதே
என்னை வென்ற கண்கள் நீதானா?
என்னைத் தொட்ட கைகள் நீதானா?
என்னைச் சுடும் வார்த்தை நிஜமா?
உண்மையென்றால் உன்னைப் பொய் என்பேன்
நன்றிக்கடன் கேட்டு கிடைக்காது
ஞாயங்களைத் தேடி முடியாது
காதல் ஞானியாக்கும் சாபமே
# 241 தத்தகாரம்
ஓடையோரக் குயிலுக்கெல்லாம்
மேடையேறத் தெரியாது
கேக்க நெனைச்ச நேரம் குயிலை
பாட வைக்க முடியாது
பாடும்போது கேக்க நெனைச்சா
ஓடைப்பக்கம் குடியேறு
தத்தகாரம் தேவையில்லை இது
தாந்தோன்றிக் குயில் பாட்டு
கத்துக்கொடுக்க நெனைச்சாக்கூட
கட்டுப்பாட்டை மதிக்காது
இதுபோல எத்தனையோ
இயற்கையில ஒளிஞ்சிருக்கு
தனக்குன்னு ஒரு இயக்கம்
படைப்பிலெல்லாம் இருந்திருக்கு
தன் போக்கில உலகத் திருப்பும்
மனுசனுக்கெது புரிஞ்சிருக்கு
# 240 புதிய பாதை
பனி என்ன வானின்
மகரந்தப் பொடியோ?
முளைவிடாத மரங்களையும்
மூடி மறைத்து முத்துப் பந்தலாக்கி
விழுந்த பாதையெல்லாம்
வார்த்தை வருமுன்னே கவிதையாகிய
வெள்ளைக் காகிதமாக்கி
உன் கால் பதியப் பதிய
சிதறித் தூவி அடிக்கோடிட்டு
மேகமாகி
உன்னை இனம் காட்டியது
வண்ண நிலவாய்
உன் வருகையிலே
பூமி திரை விலக்கிட...
புதிய பாதை
# 239 உரிமைச்சீரு
இந்தப் பாடல், நண்பர் மகேஷ் முடிகொன்டாவின் இசையமைப்பில் வெளிவரப் போகிறது.
பருகிப் பாரு
இயற்கைச் சாரு
உலகே உந்தன்
உரிமைச்சீரு
விருந்து தேடு
வருந்திடாது
நினைவுப் பூவு
உதிர்ந்திடாது
வாரம் பூரா உழைச்சுப் போடு
வாரக்கடசி விடுமுறை தேடு
பாடுகளெல்லாம் பாடித் தீர
முன்னேறுமே
வேதனைக்கென்றா வாழ்கைப் பாடு
தேடித் தேடி இன்பம் நாடு
பாதைகளெல்லாம் பதிந்த காலு
முன்னேறுமே
(பருகிப் பாரு...
ஏதுமே
தங்கப் போகிற
பெரும் துன்பங்கள் என்றில்லையே
மீதமே
இன்றி வாழ்ந்திட
என்றென்றும் இன்பங்கள் கையெட்டிலே
பாத்திரம் பார்த்து வேடம் போடு
வாலிபத்தோடு சூடும் சேரு
வாழ்கையிலெல்லாம் வாழ்ந்து பாரு
வருந்தாமலே
ஞானத் தீயில் விறகைப் போல
அனுபவமெல்லாம் புரட்டிப் பாரு
அறிவுரையெல்லாம் அலசித் தீரு
வருந்தாமலே
(பருகிப் பாரு...
நாட்களைக்
கொட்டிப் பிண்ணிடும்
நம் உடலென்னும் வயதோலையே
ஓசையில்
மொழிப் பூக்களை
பிண்ணிக் கோற்கின்ற பாமாலையே
சாத்திரம் பார்த்து செய்தும் கூட
சோதனைக் காலம் போனது ஏது?
ஆசைகளெல்லாம் அடையப் பாரு
வருந்தாமலே
ஏட்டில் தேடி எடுத்தது கொஞ்சம்
அடுத்தவன் சொல்லிக் கொடுத்தது கொஞ்சம்
உனக்கு நீயே தெரிஞ்சது கொஞ்சம்
இது ஞானமே
(பருகிப் பாரு...
# 238 வண்ணாரப் பேட்டைக்கு
ஒரு சலவைத் தொழிலாளியின் மோகத்தை அவன் தொழிலை வைத்தே சித்தரிக்கும் எண்ணம்தான் இந்தப் பாடலை எனக்குத் தந்தது.
வண்ணாரப் பேட்டைக்கு வாடி
கண்டாங்கிச் சேலையைச் சூடி
வஞ்சி உந்தன் புடவைக்குள்ளே
கஞ்சி போட துடிக்குது ஆவி
அழுக்குப் போக அலசித் தாரேன்
கறையை நீக்கி கசக்கித் தாரேன்
எறங்கு பாலம் அடியிலேதான்
அடிச்சு அடிச்சு தொவைக்கப்போரேன்
காஞ்ச சீலை கொடியிலேத்தி
கழுதை மேச்சு திரும்பி வாரேன்
வண்ணாரப் பேட்டைக்கு...
காஞ்ச சீலை பரப்பி வெச்சு
பக்குவமா மடிச்சுத் தாரேன்
மடிப்பு ஏதும் சுருங்கிடாம
சூட்டுக்கரியால் இழுத்துத் தாரேன்
பத்திரமா சீலையை நீ
பொட்டிக்குள்ள பூட்டி வெய்யி
மச்சான் வீடு வந்ததுமே
புதுசேலையா போட்டுக்காமி
வண்ணாரப் பேட்டைக்கு...
# 237 உரைந்துவிட்ட ரீங்காரம்
கோப்பையின் விளிம்பில் கிச்சிளித் துண்டாய்
மலையைக் கவ்விய மஞ்சள் மதி...
இரவை எதிர்த்து போராட
தேனீர் கடையில் இளைங்கர் அணி...
இவருக்கு மத்தியில்...
மழை விரட்டிய மகளீர் கூட்டம்
நிழற்குடை அடியில்
அதில் ஒருத்தி
மழையூறீய முத்துப் பந்தலாய்
முடி உலர்த்தி
அழகு திருத்தி நிற்க...
அருவி மடியில் பனிக்கட்டியாய்
நான் விழுந்தேன் எனக்குள் சிதறி
அந்த நொடி, அந்த சூழல்
அந்தத் தேதி, மாதம், காலம்
என்னில் உரைந்துவிட்ட ரீங்காரம்
என் வருங்கால நினைவே
உனைப் பதிவு செய்துவிட்டேன்
பத்திரமாய்
இந்தக் குளத்து நீரை நம்பி
பல தனித்த இரவுகள் தணியும் இனி
# 236 தில் ரூபா
ஒரு இந்துஸ்தானி பாடலை ரசிக்கையில் அதில் ஒரு பரவசமான ஓசை மனதை தடவி விட்டது. அந்த இசைக் கருவியின் பெயர் தில் ரூபா என்று அறிந்ததும் இந்தப் பாடல் உதித்தது மனதில்...
கொள்ளை கொள்ளும் நெஞ்சை என் தில் ரூபா
உள்ளமெங்கும் உன்னால் ஈரம் தில் ரூபா
இந்துஸ்தானி இசையில் கேட்டேன் தில் ரூபா
இன்னும் தா நீ இன்பத்தேனை தில் ரூபா
வடக்கில் மட்டும் வசிப்பது ஏனோ தில் ரூபா?
கொஞ்சம் தமிழகத் தென்றலைத் தழுவிப் பாரேன் தில் ரூபா
கொள்ளை கொள்ளும் நெஞ்சை என் தில் ரூபா
உள்ளமெங்கும் உன்னால் ஈரம் தில் ரூபா
மேற்கில் பிறந்த கருவிகளெல்லாம் தில் ரூபா
தாய்மொழி சேர்ந்திட புகழடைந்ததே தில் ரூபா
திறமை இருந்தால் தெற்கில் வாழ்வு, தெரியுமல்லவா தில் ரூபா
என் தமிழைக் கொஞ்சம் தாலாட்டிடவா தில் ரூபா
கொள்ளை கொள்ளும் நெஞ்சை என் தில் ரூபா
உள்ளமெங்கும் உன்னால் ஈரம் தில் ரூபா
காதலி விரல்போல் உந்தன் கம்பிகள் தில் ரூபா
என் காதுகளைக் கட்டிப்போட்டது தில் ரூபா
இருபது தந்தியில் என்னை மீட்டும் தில் ரூபா
இறைவன் இருப்பிடம் இசையில் காட்டும் தில் ரூபா
# 235 காற்றடைப்பு
நிலவே உன் வாசலை
விஞ்ஞானத்திற்கு திறந்தாய்
உன் மடியில் தடம் பதித்த மனிதர்களை பொருத்தாய்
தடமோ கனமோ இல்லாத இந்தக் காற்றை மட்டும்
நுழைய மறுத்தால் ஞாயமா?
உன் மனதில் கொடி நாட்டுவதே
தொழில் சிலருக்கு
இதில் உலகளவில் போட்டியும் உண்டு
நான் நட விரும்புவதோ காதல் கொடி
உன்னை இருகத் தழுவ எனக்கு
கொடுத்துவைக்கவில்லை
முல்லைக்கொடியால் முடியுமென்று
நியமிக்கிறேன் அனுமதி
உன்னைச் சுற்றி மின்மினிகள்
வெள்ளிக் கன்னி உனக்கோ நகையில்லையே
பகலவனிடம் பேரம் பேசி
பொன்னில் ஒரு கிரீடம் செய்தால்
உனக்குப் போட விடுவாயா?
நீ இரவின் அமைதியில் பொழுதைக் கழிக்க
அலைகளை எழுப்பி ஆட வைத்தேன்
பறவைகள் தம் துணை தேட வைத்தேன்
சோலைகளின் பரவச மூச்சை
சுற்றி வளைத்து உன்னைச் சேர வைத்தேன்
உன்னை எட்ட எத்தனையோ மொழிகளில்
என் அன்பை இசைத்திருக்கிறேன்
நீ எனக்கு மட்டும் என்றும்
இசையவேயில்லை
# 234 மொழி மழலை
அரிகரன் இயற்றி, வடிவமைத்துப், பாடி வெளியிட்ட "காஷ்" என்னும் வடக்கத்திய பாடல் தொகுப்பில் வரும் "அபு கே பரசு" என்னும் மென்மையான பாடலின் தாக்கத்தில், அந்த மெட்டிற்கு தமிழ் வடித்த முயற்சி இது.
கண்களை நிறைத்து
கைகளைப் பறித்தாய்
சிறகுகள் முளைத்தேன்
கால்களைப் புதைத்தாய்
தீவிர எதிர்ப்பும் ஆர்வமடி
விரகமெல்லாம் விறகாக்கி அதில் நீ
விரகமெல்லாம் விறகாக்கி அதில் நீ
நெருப்பிட்டு எரித்தும்...நினைவிருக்கும்
கண்களை நிறைத்து
கைகளைப் பறித்தாய்
தீவிர எதிர்ப்பும் ஆர்வமடி...
உடனடி மறுப்பதன் காரணம் வேறென்ன?
வளருமுன் வேரிலே முறிப்பதிது
முழுமனதாக துறந்தது ஏனோ?
மோகத்தில் மூழ்கிடும் பயம் உனக்கு
கிழித்தவர் கோட்டில் நடப்பது கடமை
கிழித்தவர் கோட்டில் நடப்பது கடமை
சுதந்திர உணர்வை தவிர்ப்பவர் அடிமை
விரகமெல்லாம் விறகாக்கி அதில் நீ
விரகமெல்லாம் விறகாக்கி அதில் நீ
நெருப்பிட்டு எரித்தும்...நினைவிருக்கும்
கண்களை நிறைத்து
கைகளைப் பறித்தாய்
தீவிர எதிர்ப்பும் ஆர்வமடி...
கத்திரித்தாயோ காகிதத் தாளை
ஒத்திகைக்கேங்கும் கவி மடலை
பட்டபின் தெரியும் பரவச உணர்வு
காதலுக்கென்றும் மொழி மழலை
உதிர்த்துவிடும் தன் உணர்ச்சிகளை
யாருமே அறியா இரங்கல் நிகழ்ச்சி
யாருமே அறியா இரங்கல் நிகழ்ச்சி
விருந்தினன் வருந்தினன் ஒருவனடி
விரகமெல்லாம் விறகாக்கி அதில் நீ
விரகமெல்லாம் விறகாக்கி அதில் நீ
நெருப்பிட்டு எரித்தும்...நினைவிருக்கும்
கண்களை நிறைத்து
கைகளைப் பறித்தாய்
தீவிர எதிர்ப்பும் ஆர்வமடி...
# 233 சுந்தரம்
"அம்ருதவர்ஷினி" என்ற கன்னடப் படத்தில் வரும் "ஈ சுந்தர" என்ற தேவா இசையில், எஸ்.பீ.பி.யும் சித்ராவும் பாடிய அற்புதமான பாடலை மய்யமாகக் கொண்டு இந்தப் பாடலை இயற்றினேன்.
உன் சுந்தர உருவத்திலும்
நில் என்கிற பருவத்திலும்
தள்ளாடவும் திண்டாடவுமே...
உன் நம்பக இதயம் அது
கேட்கின்றதோர் சிறு சுகமும்
உடனடி தந்திடவே...
எடுத்தேனோ பிறவி
பருந்தாகும் குருவி
உன்னிரு கைகளும் தொட்டு வருடும் நொடி
உன் சுந்தர...
கனா...கனா
நிலா...நிலா
துயில் எழுந்துமே தோன்றிடுதே
தராததா
பெறாததா
சொற்கள் சினுங்கிடும் எல்லையிலே
ஒளிவேன் உள்ளே இன்பக் கூடத்திலே
வெளி உலகதன் ஈர்ப்பு இன்றி
அறிவேன் சொன்னால் அறிவுறைகளில்லா அன்புப் பாடங்கள்
புகட்ட வந்தால்
வெளி உலகதன் அறியாமையில் நான் வெறும் இயந்திரம்
புவி மறந்திடும் அருகாமையில் நீ சொர்க மந்திரம்
உன் சுந்தர உருவத்திலும்
நில் என்கிற பருவத்திலும்
தள்ளாடவும் திண்டாடவுமே
உன் நம்பக இதயம் அது
கேட்கின்றதோர் சிறு சுகமும்
உடனடி தந்திடவே...
உதிக்காதோ புலமை
மழைபோலே உவமை
சந்தனக் காட்டிலே சுடர் சூடும் தென்றல்
உன் சுந்தரம்!
# 232 முறைவிடு
பள்ளிக்கூடம் மூடியாச்சு
தேர்வுகளைத் தாண்டியாச்சு
விடுமுறை விட்டாச்சு முறைவிடுடா
தேதித்தாளைத் தூக்கிப் போடு
கைக்கடிகாரம் கழட்டிப்போடு
இன்னும் கொஞ்ச நாளைக்கு
ஒரு கட்டும் இல்லை காளைக்கு
வயசாகி வாடுமுன்னே
வாலிபத்தை மேய்க்கனும்
ஆறுபடை ஏழுமலை ஏறிப்போயி வேண்டுமுன்னே
நண்பர்களே தோழர்களே வேறு மலை ஏறனும்
சாதி சனம் பாக்கபோகனும்
சம்பிருதாயம் தீக்கப்போகனும்
வீட்டுக்கொரு விசேசம் கேக்கப்போகனும்
பந்தக் கடன் தீக்குமுன்னே
சொந்தக் கடன் தீக்கனும்
சேமிச்ச இளமையெல்லாம்
செலவழிச்சு போக்கனும்
ஆறிப்போன ஆசையெல்லாம்
அடுப்பு வெச்சு மூட்டனும்
தொல்லைகளை மூட்டைகட்டி
எல்லைக்கோட்டை மீறனும்
# 231 பேராசை
பொன் அந்தி மாலை
உன் மஞ்சள் மேனியின் சொந்தமென்று
சொல்லத்தான் வந்தாயோ உன் மச்சு மாடிக்கு
பொழுதறிந்து
சுருங்கிடும் இரவு கண்மணியாக
விரிந்திடும் நிலவு பின்னணியாக
இவை இரண்டும் சேர்ந்து உன் விழியாக
இயற்கையே உன்னிடம் முரண்தானடி
எனக்கு மட்டும் இங்கு எதற்கு முறை
அகற்றிடு இடைவெளி முடிந்தவரை
துணி காயும் கொடி கூட தோரணமாகுமடி
உன்னருகே
துண்டோடு கூந்தலை அள்ளி முடிந்தாலும்
நீ அருள் வடிவே
மண்ணாசை பொன்னாசை பேராசை அல்ல
என் மீது நீ ஆசைப்
பட வேண்டும் எனுமாசை
பேராசை பேராசை இதைவிட வேறேது
# 230 கவர்ந்தற்று
இல்லாத நினைவுகளை அசைபோடுகிறேன்
கானாத கனவுகளின் தடம் தேடுகிறேன்
கிட்டாத உறவுகளின் இதம் நாடுகிறேன்
கிடைக்கின்றதெல்லாம் கொண்டும் ஏன் வாடுகிறேன்?
எட்டாத கணியும் கையில் கசக்கின்ற காய்தானோ?
என் கையில் காயாய் இருந்தும்
பிறர் கண்ணில் கணிதானோ?
அடைந்திட்ட அத்தனையும் சுவை மாறிப்போவது ஏன்?
அடுத்தவன் அடைந்ததில் மட்டும் அருஞ்சுவை கூடுவதேன்?
இழந்தவன் தவிப்பதும் உண்மை
அடைந்தவன் சலிப்பதும் உண்மை
இருந்ததை துறந்தவன் மட்டும்
தவிப்பதோ சலிப்பதோ இல்லை
அடித்தள வெறுமையையே நான்
அடிப்படை ஆக்கிவிட்டால்
அடைந்திடும் அரவம் இல்லை
இழந்திடும் சிரமம் இல்லை
# 229 வாழாதவர்
நகைக்கண் பார்வையில் ஆசை நழுவி விழ
நெஞ்சத்தின் இடுக்கில் ஏதோ புகைந்து எழ
நீ தந்தது நெருப்பா?
என் நெருப்பிற்கு திரியா?
புரியா தொடக்கத்தின் புதிராம் தொடர்கதையில்
ஆதரவுக் கொடிகாட்டி ஆமோதித்த அதிர்ச்சியில்
ஆவேசச் சுமையாய் எதிர்பார்ப்பு நெட்டித் தள்ள...
அழைக்காத அலை வந்து ஏந்திப் பிடிக்கையில்
ஆழத்தின் நினைப்பெங்கே உதிக்கப் போகிறது?
இந்த ஆரம்ப நீர்ச்சுழியின் இழுப்பைத்தானே
இழந்தபின்னும் மனம் அசைபோடுகிறது...
இந்த அலையில் மூழ்குவதும் ஒரு பிறப்பு
மிதப்பதும் ஒரு இறப்பு
இதைத் துறந்தவர் மட்டுமே வாழாதவர்
# 228 இன்னொரு வாழ்வில்
இன்னொரு வாழ்வில் சந்தித்தால்
இந்த இன்பம் இன்னும் நீடிக்கும்
காலச்சுவடின் பதிவில்
உறவும் காவியமாகிவிடும்
இந்தப் பேருந்துப் பயணம்
அங்கு புஷ்ப விமானத்தில்
நம் உடல் நெறிக்கும் பயணிகள்
அங்கு விசிறி வீசும் சேவகர்
இந்த வாகனக் கரிப் புகை
அங்கு முல்லைப் பந்தலில் மூடுபனி
இங்கே ஏரி காய்ந்து குப்பைமேடு
அங்கு அத்தர் அருவி பாயும் குளம்
இங்கு நான் அருகதை இல்லாத ஆடவன்
அங்கு அகிலத்தோடு உன்னை ஆள்பவன்
இங்கு நீ பொருந்தாத சூழலிலும் விருந்து
அங்கு திகழ்ந்திடுவாய் அரசியாய் உயர்ந்து
# 227 நடைபாதை நட்சத்திரங்கள்
மேற்கத்திய படவுலகைச் சேர வந்து பின்பு ஏமாற்றத்தால் பாதை மாறிவிடும் பரத்தைகளை லாஸ் ஏஞ்சல்ஸ் வீதிகளில், முக்கியமாக ஒரு நான்கைந்து வீதிகளில் நட்சத்திரங்களின் பெயர் செதுக்கியிருக்கும் சாலையோரங்களில் நடைபோடுவதைக் கண்டது, என் மனதை விட்டு நீங்காத ஒரு வாழ்கை முரன். அதை பிரதிபலிக்கும் பாடல் இது:
கனவுலகக் கன்னியாகிவிட
கால் பதித்த நிலம்
கலை அழித்து விலை பொருத்தி
பரிகசிக்கும் தினம்
சாதனை நட்சத்திரங்கள் சரித்தரம் செதுக்கிய
சாலையோரக் கல்வெட்டு
இவர்களுக்கு தொகுதிக் குறி
வேடங்கள் தேடிவந்த கட்டழகு மங்கையர்
வேடர்களின் கூட்டில் இன்று கட்டுப்படும் வேங்கையர்
நூலருந்த பட்டம் போலே
தோற்றுவிட்டோர் கதை
தோற்றுவித்த தோட்டக்காரன்
தண்ணீர் ஊற்றா நிலை
விண்மீன்கள் பால்வீதியில் விற்க வருமே தமை
கற்ற வித்தை செல்லாமற்போய்
பட்டுமெத்தை சிறை
எட்டி நின்று காப்பவனே
அடிமையாக்கி மேய்ப்பான் சதை
ஆளுக்கொரு ஆசைக் கனவு
அடுப்பெரிக்க இரை
விண்மீன்களை வெட்டும் விதி
வெட்டறுவாள் பிறை
# 226 புத்துயிர்
சேதப் புயலில் சிக்கித் தவித்து
மாமலரொன்று மிரண்டு விழ
ஓடை மடியேந்தி
இலைமேடை அமைத்துத் தர
ஊர்வலமாய் பவனி வரும்
உல்லாச நிலை போலே
குடிவிலகி கீழ் விழுந்தும்
குன்றாத மதிப்போடு
உனை ஏந்திப் பிடித்திட நான்
ஓடையாய் காத்திருப்பேன்
இலைமேடை போல் இங்கே
மணமேடை அமைத்திடலாம்
ஊர்வலமாய் வாழ்ந்திருக்க
உல்லாச உறவிருக்க
பழைமைத் தீயில் உன்னை
பழுதுபார்த்து என்ன பயன்?
புத்துயிர் என்பது மற்றொரு பிறப்பிலல்ல
பிறர் கண்ணில் உன்னை பார்க்காதிருப்பதில்
# 225 வாடைக்குள்ளே சூடு
"ஆடி வெள்ளி தேடி உன்னை" என்ற கண்ணதாசனின் அற்புதமான அந்தாதி வடிவப் பாடலுக்கு எனது மொழியில் ஒரு எளிய முயற்சி
ஆண்:
வாடைக்குள்ளே சூடு வைக்கும் வாச மல்லிச் சாரம்
காலமெல்லாம் தேடுகின்றேன் காணவில்லை யாரும்...
காணவில்லை யாரும்...
பெண்:
யாரும் வந்து வாங்கிச் செல்லும் போதை அல்ல மோகம்
ஓர் மனதில் யாகம் வைத்தால் சேருமிந்த யோகம்...
சேருமிந்த யோகம்...
ஆண்:
யோகம் வெள்ள யாகம் என்ன தியாகம் செய்து நாட
நாளும் சித்தம் கேட்டுபாரேன் எந்தன் உயிர் கூட
பெண்:
கூட வரும் நெஞ்சினிலே காதல் ஜோதி வாழும்
வாழும் வரை செர்ந்திருந்தால் தேவையில்லை மீதம்
தேவையில்லை மீதம்
ஆண்:
மீதமின்றி அள்ளித்தர வேகம் கொண்ட காளை
காத்திருக்க வேண்டுமென்றால் பார்த்திருக்கும் நாளை
பெண்:
நாளை வரும் வேளையென்று நம்புகின்ற உள்ளம்
கண் சிவக்கும் சம்பவத்தை புன்சிரிப்பில் தள்ளும்
புன்சிரிப்பில் தள்ளும்
# 224 ஊமை எழுத்து
சமுதாய வீதியில் சேர்த்திடாத போதும்
சன்னமான ஒளியில் பிரகாசிக்கும் உறவிது
அங்கீகறிப்பிற்கென அசலுலகில் வீடு
முகவரி சாட்சியின்றி மறைவில் சின்ன வீடு
இதயமெங்கும் நிலவும் இன்பமிங்கு இரவல்
கதிருறங்கும் இரவில் இவருலகின் விடியல்
பிறியும்போது அணைந்திடும்
இணையும் போது மிளிர்ந்திடும்
படி தாண்டிய உடனே பிடிபோகும் உரிமை
அடிக்கோடிட வைக்கும் ஆசையிதன் மகிமை
ஊராரின் பார்வையில் சகலமும் புலப்படும்
நடவடிக்கையின்றியே நடைபெறும் நாடகம்
கொண்டவர் யாருக்கும் அனுமதிக்க மனமில்லை
அடைக்கலம் தேடுவோர் அனுசரிக்க வழியில்லை
அவசியத்தின் நிருவலே நிழலுலக சுயம்வரம்
வார்த்தைக்குள் எழுத்தென அச்சிலேறி அமர்ந்துமே
வாய்ச்சொல்லில் இடம்பெறா ஊமை எழுத்திது
இறந்தவன் உயிலில் இடம் கிடைக்கையிலே
சகதியை மறந்து சேர்ந்திடும் தகுதி
# 223 காலங்கள்
சித்திரை வைகாசி கம்பலம் விரிக்க
இளவேனிற்காலம் இங்கு உதிக்கின்றது
புதிய கண்ணோட்டம் புதிய எதிர்பார்ப்பு
இன்னொரு வருடம் பிறக்கின்றது
ஆனி ஆடி என பெயருக்கு பொருந்தி
பள்ளிச் சிறுவர் ஆடி வர
விடுமுரை வழங்கும் முதுவேனிற்காலம்
இந்த இரண்டாம் பருவம் சிறுவருக்கு
ஆவணி புரட்டாசி நிலப் பசியடங்க
மேகத்தாய் பாலூட்டும் கார்காலம்
வயல்வெளி போற்றும் விவசாயிக்கு
ஐப்பசி கார்த்திகை உடலில் குளிர்ந்து
கண்களில் ஒளிவீசும் குதிர் காலம்
கூடி வாழும் குடும்பத்திற்கு
மார்கழி தை குளிரைக் கூட்டி
மாலைபொழுதை மெல்லினமாக்கும்
முன்பனிக் காலம் காதலருக்கு
மாசி பங்குனி ஆண்டு முடிக்க
வெள்ளிப் பனியாய் விடியும் பின்பனிக் காலம்
முடிவுரை நினைவிற்கும்
எதிர்கால முகவுரைக்கும் பாலமிது
# 222 பாலையிலே சிக்கிய சக்கரவாகம்
என் மகனுக்குப் படித்துக்கொண்டிருந்த புத்தகங்களில் கலை அம்சமோ கதை அம்சமோ காணாததின் விளைவு இந்தப் பாடல். என்றாவது ஒரு நல்ல ஓவியனை சந்தித்தால் இதைப் பல மொழிகளில் புத்தகமாக்குவேன்.
ஒரு பாலையிலே சிக்கியது சக்கரவாகம்
அதன் பாதையிலே பார்க்கவில்லை பொழிந்திடும் மேகம்
ஒரு மூன்றுநாள் பயணத்தில் ஏரி கிடைக்குது
ஆனால் நூறடியும் அதன் சிறகு ஏற மறுக்குது
ஏழு நாள் வாழ்ந்திடத்தான் உயிர் இருக்குது
ஆனால் இருள்திரை விழுமுன்னே கதிர் ஒளிக்குது
ஆறு நாளில் ஏரிக்கு செல்ல ஒட்டகம் அழைக்குது
சென்றடைந்த ஏரி பாதி வற்றிக்கிடக்குது
ஏரி பாதி வற்றியதால் மீன்கள் இல்லையாம்
மீன்களில்லா மீனவர்க்கு பசியின் தொல்லையாம்
பசித்திருந்த மீனவர்க்கு பறவை விருந்துதான்
கல்லெறிக்கு பயந்து பறவை மரத்திலேறத்தான்...
வீசப்பட்ட கற்கள் தேன் கூட்டை உடைத்திட,
மீனவரைத் தேனி ஓடி ஓடி விரட்டிட,
தண்ணிதாகம் தீர்க்க வந்து தேனை அருந்துது
பறவை இடையூறின் முதுகிலே இன்பம் காணுது
# 221 மதுக்குடமே
ஆண்:
மதுக்குடமே மரகதமே
மருதாணிக் கலையகமே
பரிகொடுக்க பரிதவிக்க
இன்பம் மட்டும் அதிகரிக்க
இதழோடு இதழுரசும் இன்பத்தின் போர்முரசு
இருள்நேரம் துப்பறியும் தடயங்களை விரல் விரித்து
குழு சேர்ந்திசைக்கும்:
சரி சரி ஒற்றுமை ராகம்
கம கமா மல்லிகை வாசம்
பத பதப்பானது மனது
நிச நிசமானது கனவு
ஆண்:
இடம் பார்த்து எடைபோடும்
ஊர் கண்ணில் செல்வாக்கு
எனை மட்டும் கணிக்கையில்
இலை மறைவில் என் போக்கு
உனைக் கையில் பிடித்த கையில்
நிழற்குருவி ஒளி மழையில்
(மதுக்குடமே...
பெண்:
விரி விரி உன் சிறகை
எனக்கது நிழற்குடை
பிறர்க்கெடைப் பொருளாக
வாழ்ந்ததெல்லாம் என் சாபம்
வெளிச்சத்தின் வீண் அரவம்
ஒற்றைக்கிளி விரும்பாது
குழு சேர்ந்திசைக்கும்:
சரி சரி ஒற்றுமை ராகம்
கம கமா மல்லிகை வாசம்
பத பதப்பானது மனது
நிச நிசமானது கனவு
# 220 மோக அலை
திரு. குலாம் அலி அவர்களின், "தில் மே ஏக்கு லெகரு சீ" என்ற பாடலை தமிழில் கேட்க நினைத்ததின் விளைவு இது.
00:23
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
கவி ஆவேன் உடல் மடலினி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
ஆகா...ஆகா...
02:13
கோடு கிழிக்காதே கண்ணாலே அன்பே
அன்பே ஓஓஓ...ஓஓஓ...
கோடு கிழிக்காதேஓஓஓ...ஓஓஓ...
கோடு கிழிக்காதே கண்ணாலே அன்பே
கோடு கிழிக்காதே கண்ணாலே அன்பே
மனம் ஏற்காது போகுமா என் வரி?
மனம் ஏற்காது போகுமா என் வரி?
மனம் ஏற்காது போகுமா என் வரி?
கவி ஆவேன் உடல் மடலினி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
ஆகா ஆகா...
04:02
சோலையே வாடையால் கதிர் தேடும்
சோலையே வாடையால் கதிர் தேடும்
சோலையே வாடையால் கதிர் தேடும்
என் ஆகாயத்தின் கதிர் நீயடி
என் ஆகாயத்தின் கதிர் நீயடி
கவி ஆவேன் உடல் மடலினி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
# 219 பொன்னிற வானம்
மல்லெலு பூசே என்ற தெலுங்குப் பாடலை தமிழில் கேட்க நினைத்ததின் விளைவு இது.
பொன்னிற வானம்
போடுது மோடம்
ஏனிந்த மாறுதல்?
இதயமுமே அந்த வானம் போல அல்லவா?
பொன்னிற வானம்
போடுது மோடம்
ஏனிந்த மாறுதல்?
சரணம் 1
எதிர்வரும் காற்றினிலே
எவருக்கும் மாறும் வழி
மாறிடும் பாதையிலும்
ஊன்றிடு உன் கொடி (2)
சதுரங்க ஆட்டத்திலே
நகர்வது முறைப்படியே
வாழ்கையின் போக்கினிலே
முறையே புரியலே
தோல்வியின் சன்னதியே தந்த வரம் இந்த அனுபவம்
(பொன்னிற வானம்...
சரணம் 2
ஏக்கங்கள் தேங்கிடவே
கனவுகள் பெருகிடுமே
வேண்டிய முயற்சியிலே
ஏக்கங்கள் விலகுமே (2)
வெற்றியின் படிகளை
அடைந்திட பல வழி
அத்தனை வழியிலும்
முயற்சி முதல் படி
வெற்றியை பகிர்ந்திடவே சொந்த பந்தம் வந்து சேருமே
(பொன்னிற வானம்...
# 218 நடு சாம வேளையோ?
மதுமாச வேலலோ என்ற மெய்மறக்கச் செய்யும் தெலுங்குப் பாடலை தமிழில் கேட்க நினைத்த நண்பன் முரளி சங்கரின் குரலுக்குத் தருவியது. இது மொழி பெயர்ப்பு அல்ல, என் மனப்பெயர்ப்பு.
நடு சாம வேளையோ?
நதி கோதும் தோணியோ?
நடு சாம வேளையோ?
நதி கோதும் தோணியோ?
துணையோசை மூங்கிலோ? குயில் கூவலோ?
நடு சாம வேளையோ?
நதி கோதும் தோணியோ?
நீடிக்கும் ஏக்கம் இல்லா
பூரிப்பு பூக்களம்மா
கரைக்குள்ளே தேங்கும் நீரும்
குறையின்றி ஓடுதம்மா
ஆலிங்கன மோகப் பொழுதும்
ஆலிங்கன மோகப் பொழுதும்
ஏனோ மனதில் ஏக்கம் மனிதா?
(நடு சாம வேளையோ...
ஆழிக்கும் எல்லை உண்டு
நீருக்கும் ஆவி உண்டு
காலத்தின் ஆணைப்படியே
சோலைக்கும் ஆடை உண்டு
தான் மட்டும் எல்லை இன்றி
தான் மட்டும் எல்லை இன்றி
மனிதன் வாழ எண்ணுகின்றான்
(நடு சாம வேளையோ...
# 217 பிஞ்சுத் தாமரை
கண்ணதாசன் எழுதாத கவிதையா
நீ எழுதப் போகிறாய்?
பரதமாட நீ என்ன பத்மினியா?
இசை பயில நீ என்ன இசைஞானியா?
ரவி வர்மன் என்ற நினைப்பா?
உனக்கெதுக்கு ஓவியம்?
பாகவதர் என்ற பிரம்மையா?
உன் பாட்டை நிப்பாட்டுவாயா?
என்று என்னைக் கேட்டவரை எல்லாம்
ஒரு குளத்திற்கு அழைத்து
ஒரு பிஞ்சுத் தாமரையை
கிள்ளியெறிந்து மிதித்தேன்
என்னைக் கொடியவனைப் போல் பார்த்துவிட்டு
கூட்டம் விளக்கம் கேட்டது என் செயலுக்கு.
"சுற்றிலும் மலர்ந்து பெரிதாகப் படர்ந்த
பிற தாமரைகளை விடவா
இந்தப் பிஞ்சு மலர் சாதித்துவிடப் போகிறது?"
என்று கேட்டுவிட்டு பிறிந்தேன்
என் கலையைப் பயில
# 216 காதலர்கள் தோளுரசத்தானே...
இந்தப் பாடல் வரிகளின் வீச்சும் அமைப்பும், ஜாஸ் இசையின் மேல் எனக்குள்ள அபரிமிதமான ஆர்வத்தின் விளைவு. நான் இசைக் கலைஞனாய் இல்லாதபோதும் இப்பாடலின் ஒலி வடிவமும் வாத்திய அம்சங்களும் என் மனதில் எப்படியோ பதிந்துவிட்டன. அதை விரைவில் சில நண்பர்களின் தயவில் வெளிக்கொண்டு வருவேன்.
சோலை மலர் ஓடை கொடுத்தானே
காதலர்கள் தோளுரசத்தானே
காற்று கூட காதல் சேரத்தானே
தென்றல் என்று பேரை மாற்றினானே
சேதி சொல்லடி செல்லக் கள்ளி
சேதமல்லடி இன்ப வள்ளி
ஊருலகம் பூட்டி வைக்க காதலென்ன குற்றமா?
நான்கு சுவர் சூழ்ந்திருக்க காதல் என்ன கைதியா?
அன்ப வெளிப்படுத்த இத்தனை சோகமா?
அடுத்தவன் சந்தோசம் தடுப்பது நியாயமா?
சோலை மலர் ஓடை கொடுத்தானே...
காதலர்கள் தோளுரசத்தானே...
மைனாக் குருவிகள் மரக்கிளையில் கொஞ்சிட
யாருமில்லையே அங்கு தடை சொல்லிட
ஏனோ நம்மையும் ஊர் கவுக்கப் பாக்குது
தீமை ஒழிப்பதாய் கத்தி கம்பை தூக்குது
காதல் நெஞ்சின் ஆழம் தெரியாது
ஆள் மறிக்கும் ஆசை மறிக்காது
சோலை மலர் ஓடை கொடுத்தானே
காதலர்கள் தோளுரசத்தானே
காற்று கூட காதல் சேரத்தானே
தென்றல் என்று பேரை மாற்றினானே
சேதி சொல்லடி செல்லக் கள்ளி
சேதமல்லடி இன்ப வள்ளி
ஊருலகம் பூட்டி வைக்க காதலென்ன குற்றமா?
நான்கு சுவர் சூழ்ந்திருக்க காதல் என்ன கைதியா?
அன்ப வெளிப்படுத்த இத்தனை சோகமா?
அடுத்தவன் சந்தோசம் தடுப்பது நியாயமா?
சோலை மலர் ஓடை கொடுத்தானே...
காதலர்கள் தோளுரசத்தானே...
# 215 அழகாய் பூசும் மஞ்சள்
இந்தப் பாடல், முரளி சங்கரின் இசையில் வெளிவர இருக்கிறது
M:
அழகாய் பூசும் மஞ்சள்
அரிதாய் தோன்றும் திங்கள்
F:
வானம் ஏந்தும் போதும்
பூமி தேடுகின்றாய்
M:
கதிரின் ஆடை போர்த்தி
யாரை ஏய்க்க வந்தாய்?
F:
சுடரின் பார்வைச் சூட்டை
மறவா காலைப் பூக்கள்
M:
காதல் வெள்ளை நெஞ்சில் கள்ளம் சேர்க்கும்
F:
(அழகாய் பூசும் மஞ்சள்...
M:
மெய்க் காதலின் சன்னதி ஊரான் மலர் சூடுமா?
F:
எல்லோருமே வேற்றுமை தேடினால் தான் ஆகுமா?
M:
கொள்ளாமலே கடலுமே கரை தாண்டினால் தாங்குமா?
F:
எப்போதுமே வேறொரு இல்லாமை மேல் மோகமா?
M:
நாளுக்கொரு மேனியும் பொழுதுக்கொரு போதையும்
F:
இதுபோலொரு வாழ்க்கையில் ஆனந்தமே வாடகை
M:
தேன் கூட்டிலே வாழ்ந்தாலே தேனும் கசந்து போகுமா?
F:
(அழகாய் பூசும் மஞ்சள்...
F:
நேர் பாதையில் போவதில் ஏன் இத்தனை வேதனை?
M:
சூடாத ஓர் பூவையே பாராததே சாதனை
F:
எக் காதலின் ஆர்வமும் நாளாகவே ஆறிடும்
M:
ஆள் மாறவே காதலும் ஆர்வத்திலே கூடிடும்
F:
அக் காதலின் ஆரம்பம் அவ்விதமே தோன்றிடும்
M:
ஆரம்பமே வேண்டுவோர் அன்பென்பதே கண்டிலார்
F:
மேல்வாரியாய் மேய்ந்தாலே தனிமைத் தீயில் அழிகிறார்
M: (அழகாய் பூசும் மஞ்சள்...
# 214 சமுதாய ஏணி
மேல்வட்டத் திருமணம்
மின்மினியாய்ப் புகைப்படம்
ஆடம்பர தோரணம்
ஆதிக்கத் தோரனை
ஓடை போல நீண்டிடும்
பவளப் பட்டு கம்பலம்
முத்து வைரம் மத்தியில்
பாசாங்குப் புன்னகை
அரவனைப்பு கொஞ்சல்கள்
ஆரவாரத் தழுவல்கள்
ஆளுயரப் பரிசுகள்
தகுதிக்கேற்ப அமருங்கள்
துயரமில்லா சம்பலம்
தேவைக்கு மேல் கிம்பலம்
செல்வாக்கு செல்வம் ஏலத்தில்
இணைந்தது கெட்டி மேளத்தில்
சமுதாய ஏணிக்கு
ஏற்றார் போல் சொர்கத்திலும்
சீட்டு வசதியோ?
# 213 கண்ணதாசனுக்குக் கவிச்சாமரம்
நீ, தமிழ்கோவில் தேவர்கள்
உருண்டைபிடித்து உருவாக்கிய
கவிப் பிரசாதம்;
காலம்தோரும் இனிக்கும்
உன் பொருட்சுவையின் சாரம்.
உன் சிந்தனை,
எம் பாடசாலை;
உன் படைப்புகளின் பரிச்சயம்,
என் விழிப்புணர்சிக்கு சேவற்கூவல்;
உன் சொல் வாக்கு,
யாம் சேகரித்த செல்வாக்கு;
உன் இறப்பு,
ஒரு நூலகத்தின் எரிப்பு.
நீ பாத்திரமறியாது பிச்சையிட்ட வெகுளி,
போக்கிடம் இல்லாத படங்களுக்கும்
உன் பாடலின் மேதாவிலாசம் உண்டு.
நீ சந்தர்ப்பம் பார்க்காத அசடு;
கோட்டை ஆண்ட கோமான்களிடம்
அடுத்தவர் வெள்ளைக் கொடி பிடித்து
வெண்சாமரமாய் வீசிவருகையில்
நீ உறுதியுடன் அதில்
வெற்றிலைக் காவி ஏற்றினாய்.
நீ உமிழும் அளவுக்கு
சிறுத்தவன் அல்ல,
பச்சைப் பொய்களுக்கு நீ சிகப்புக் கொடி
பிடித்தாய் என்றே இதற்குப் பொருள்.
உன் உடலை பொழுதுபோக்கியாய்
உபயோகித்த நீ,
உன் சிந்தனையை சேவகத் தேனீ ஆக்கி
சுற்றி அலைந்திருக்கிறாய்.
தமிழ் தேன் கூடு
உன்னால் தட்டு நிறம்பியது,
உன் ரசிகர்கள்தான் ராணித் தேனியாய்
உன் உழைப்பின் பலனை ருசிக்கின்றோம்
தமிழ்தாயின் பிள்ளைகளுக்கு
சொத்துத் தகராரு எதற்கு என்ற சூட்சமம்
அறிந்தவன் நீ.
உனக்கு எதிராக ஒரு படையே
பேனாக்கள் கவிழ்த்த
அவர்களைப் பாரட்டிய பண்பால்
நீ உயர்ந்தாய்;
உனது நட்பால்
அவர்களும் உயர்ந்தனர்
சாடை மாடையாய் கிசுகிசுக்கும் சங்கதிகளை
சங்கடமில்லாமல் மேடை ஏற்றினாய்
உனக்குக் கிடைத்த ஆமோதிப்பு
உண்மைக்கும் கிடைத்தது உண்மை
உன்னை நேசிப்பதே ஒரு புரட்சி
பாசாங்கை ஒழிக்க
அதுவே எளிய ஆயுதம்
கைதேர்ந்த குறுக்குவழி
அலசிப் பார்த்து அறிவு பூர்வமாய் அனுகாமல்
ஏக மனதாய் தவறு என்று கூறி
தடை விதித்த சமுதாயக் கோட்பாடுகளின்
குருட்டு ஆதிக்கத்தை,
பிற்போக்கை,
சுயநலத்தை,
நீ பலவந்தமாக துயிலுறித்த
நவீனக் கண்ணன்.
இச்சைகளின் இம்சையை,
உணர்வுகளின் பிடிவாதத்தை,
சமூகம் அங்கீகரித்த உறவுகளின் பற்றாக்குறையை,
சமுதாயம் சுருட்டி மறைத்த
சிக்கல்களின் இயலாமையை
நீ வாழ்ந்து காட்டிப்பாடம் ஆனாய்.
உன்னையே பதம் பார்த்து,
சூடு போட்டு,
உருக்குலைந்து காவியமானாய்.
எம்மதமும் சம்மதம்
எழுதிவிடலாம் எவரும்.
ஆனால் நீ மதக்காப்பியங்களையே
சிந்தித்து, சேவித்து,
தொழுது, மொழிபெயர்த்து
மதங்களின் விசேட விதங்களையும்
விளக்கிவிட்டாய்.
இதற்கு மேல் என்ன சொல்ல
மொழியில் நான் ஏழை
நீயோ என்றென்றும் எங்களின்
மாசு குறையாத முத்தைய்யா;
உன் படைப்புகளோ
படிக்கப் படிக்க
கேட்கக் கேட்கப்
பெருகிவரும் சொத்தைய்யா.
# 212 ரத்தக் கோளம்
ஆப்பிரிக்காவிலே எத்தனையோ நாடுகள்
ஒவ்வொரு நாட்டிலும் இரண்டேனும் இனங்கள்
ஒவ்வொரு இனத்திற்கும் இருசாரி தலைவர்கள்
வழிபடாதவர்களுக்கு ஒன்றுக்கிறண்டாய்
எதிரிகள்
போர்கலத்திலே ஏது அடைக்கலம்?
ஆள்பவனும் கொல்கிறான்
எதிர்ப்பவனும் கொல்கிறான்
பெற்றவரிடமிருந்து பறிக்கப்பட்ட பிஞ்சுக் கைகளில்
பரிசாய்க் கிடைத்தது ஆளுயர ஆயுதம்
கொள்கையென்றும் கடவுள் என்றும்
விவரம் தெரியாமல் வீழ்ந்தவர் கோடி
போரிட மறுத்தோ ஏழ்மையினாலோ
இறக்கத்தானே இருக்கிற மீதி?
போர் மேய்ந்த பாதைகள்
புனல் முழுகா தேகங்கள்
பருந்துக்கு விருந்தாகக்
காத்திருக்கும் குடல்கள்
வேண்டாத வரத்திற்கு
பிரசாதம்
உயிர் காற்றிழந்த பைகளாய்
சடலங்கள்
"காயமே இது பொய்யடா"
பட்டவர்கள் சொன்னதில்லை
இந்தப் பொய் மந்திரம்
உடல் குவித்து உச்சி ஏறினால்
கடவுள் கூடத் தென்படுவாரோ?
சிலுவையிடம் தொழுதாலும்
கடன் வாங்கி அழுதாலும்
உயிர் கழுவி உரமாகும் வேளையிது
தர்மத்தின் வாசலை அலங்கரிக்க
ரத்தக் கோளம்தான் கிடைத்ததோ?
# 211 காக்கைக் கடி
எதிர்கால நண்மை என்று
எத்தனை படுத்துகிறாய்?
மருந்தளவு சிறிதேனும்
கொடுத்தாயா முன்பணமாய்?
சொர்கமென்ற மாயலோகம்
இருக்குமா சொன்னபடி?
வரவிருக்கும் திரைப்படங்களை
காட்டிடும் விளம்பரப் படம்போல்
சொர்கத்தின் முன்கதை சுருக்கம்
ஓட்டிவிடேன் சில நிமிடம்?
யாரை நம்பி இருப்பது
ஆசைகளை மறுத்தபடி?
கேட்பது நியாயம்தானே
கிடைக்குமா காக்கைக் கடி?
சந்தித்த இண்ணல்கள் அத்தனையும் ஈடாக்கி
நன்நடத்தை பொருமைக்காக இன்னும் கொஞ்சம் மதிப்பெண் கூட்டி
கொடுப்பாயா சொர்கத்தில்?
அனுபவிக்க நினைத்திருக்கும் இன்பங்கள் எத்தனையோ
பாவத்தின் பட்டியலிலும் பாதிக்குமேல் இடம்பெருமே
அனுமதிப்பாயா ஆண்டவா?
பரிசு தெரியாது நம்பியே
பரிட்சை எழுதாதென் நெஞ்சமே
ஆலயம், மடமாட்டம் சொர்கமும் இருந்துவிட்டால்
பொருக்காது என் மனது
இப்பொழுதே சொல்லிவிட்டேன்
அப்படித்தான் இருக்கும் என்றால்
இப்பொழுதே சொல்லிவிடு
செலவிலோ மலிவிலோ
நான் நினைத்த சொர்கத்தை
சஞ்சலமேதுமின்றி
பூமியிலாவது பார்க்கவிடு
# 210 மேட்டுக்குடி தேடும் மனசு
குதிரைப் பந்தயமாட்டம் காதல நடத்தும் கொணமொனக்கு
வெற்றின்னு தெரிஞ்சாதான் மாலைபோடும் ஓங்கழுத்து
மேட்டுக்குடி மக்களையே தேடிப் போகும் உம்மனசு
எவனோ ஒரு காசுக்காறன் கேடயமா நீ ஆகனுமா?
அவனுக்கு இன்னொரு பரிசு கிடைச்சிட்டா நீ தாங்குவியா?
வாழ்கையின்னா ஏத்தம் எறக்கம் வந்து போகும் காத்தாட்டம்
மின்னலப்போய் வெளக்கா நம்பிப் போனாக்க ஓந் திண்டாட்டம்
இருட்டானா நெலவப் பாத்து நடமாடத் தெரிஞ்சிக்கிட்டேன்
நீ மட்டும் ராத்திரிபூரா விடியலத் தேடி அலைஞ்சிருக்க?
விடிஞ்சதும் நான் எம்பாட்டுக்கு வேலை செய்யப் போயிடுவேன்
காணலையே விண்மீனுன்னு கோபப்பட்டா உம்பாடு
காதலுக்கும் கருத்தடை மருந்தா
கல்லிப்பால் இருந்திருந்தா
கண்ணு ரெண்டும் ஊத்தி ஊத்தி
நெஞ்சு முட்ட நெறச்சிருப்பேன்
கருத்தா நான் இத்தன சொல்ல
கிறுக்கு மனசு கேக்கலையே
சாயம் போன ஒறவுக்கு
சாக்கு சொல்லி பாக்குதே
# 209 இடையூரு இன்பம்
அனைகட்டா ஆசைகள் போல் மழையருவி பொங்கி வர
சாலைவழி குழிகளிலே செம்புனலாய் மணல் சரிய
கண் தேக்கிட நினைத்திடும் அழகிது
கவிதை பாடிட நனைந்திடும் மனமது
மண் தோண்டிட நறுமணம் பிறக்குது
சகதிச் சேற்றினில் புதுவிதையுதிக்குது
வண்ண வண்ண பூந்தொட்டிகளாய் வாகனங்கள் வழிநெடுக
அதற்குள்ளே மானிடரும் கொத்து கொத்தாய் பூத்திருக்க
இயற்கையவள் ஆளுகிறாள் அடிபணிந்து நின்றுவிட்டோம்
சேர்க்க நினைக்கும் ஓட்டுனரும் சேர வேண்டிய பயணிகளும்
பொதி வண்டி உடமைகளைப் பார்த்திருக்கும் வணிகர்களும்
பள்ளிவிட்ட சிறுவர்களை எண்ணியபடி பெற்றவரும்
தம் வாழ்வின் இடையூராய் இயற்கையை இன்று நினைத்திருப்பார்
எனக்குமுண்டு கடமைகள், காத்திருக்கும் சொந்தங்கள்
இருந்தபோதும் இந்த இன்பம் என்னைச்சேர கொடுத்து வைத்தேன்
# 208 இசைக் கார்த்திகை
திரு. எஸ்.பீ.பி. அவர்களின் அறுபதாம் பிறந்ததினத்தை முன்னிட்டு அவருடன் நடத்திய தொலைபேசி சந்திப்பில் படித்துக் காட்டிய வாழ்த்து இது:
என் மனச்சோலையின் நிரந்தர இசைமேகமே
உங்கள் வருகையைக் கொண்டாடும் காணிக்கை மடல் இது
இதைக் கவிதை என்று
நினைக்காவிட்டாலும் சரி
கட்டுக்கதை என்று மட்டும்
நினைத்துவிடாதீர்கள்
ஒரு குழந்தையின் உணவுப்பழக்கம்
பாலில் தொடங்கிப் பிறகு பல்சுவைகளையும்
சுவைக்கும் நிலைக்கு
படிப்படியாக வளர்கிறது
ஆனாலும், பிறவி முழுதும் அடிப்படை சக்திக்கு
பால் அவசியப்படுகிறது
தமிழில் பாலுன்னு எழுதினாலும் பாலுன்னு
எழுதினாலும் ஒன்றாகத்தான் இருக்கும்
தமிழ் இசைப் பாடல் என்று எடுத்துக்கொண்டால்
எனக்குத் தாய்ப்பால் தமிழ்ப்பால்
எல்லாமே நீங்கள்தான் அய்யா
இசையும் சந்தமும் தெய்வீகம் என்றால்
அவற்றில் மொழியை நீங்கள் பிரசாதமாக
வழங்கினீர்கள் உங்கள் குரலில்
அந்தக் குரலில் இல்லாத குணமும் உண்டா?
அந்தக் குரல் காணாத உணர்வும் உண்டா?
வெகு நாட்களுக்குப் பிறகு நீங்கள்
நடிக்க வந்ததாய் சொன்னார்கள் நண்பர்கள்.
இதென்ன வேடிக்கை?
"அவர் பின்னணி பாடினாலும் நடிகனின் குணச்சித்திரமாய்
அவனது உணர்ச்சிப் பெருக்காய் முன்னணியில்
இத்தனைக் காலம் வாழ்ந்துதானே வந்திருக்கிறார்"
என்றேன்
உங்கள் அறிமுகமே ஒரு ஏகாந்தப் பரிசு எனக்கு
ஆனால் உங்கள் மூலம் எத்தனையோ கலைஞர்களை
நான் இனம்கண்டு கொண்டேன் என்றால் அது மிகையாகாது
ஒரு காலத்தில் அத்தனை சாலைகளும்
ரோமாபுரியையே எட்டும் என்கிற சொல் வழக்கத்தில் இருந்தது.
என் இசை ராஜ்ஜியத்தின்
நியதி இதற்கு நேர் எதிர்.
எந்த தமிழிசை அமைப்பாளரையும், பாடகரையும்
உங்களை வைத்துதான் நான் நேசிக்கத் தொடங்கினேன்
அதனால் எனக்கு எல்லா இசைச் சாலைகளும்
உங்களிலிருந்தே தொடங்கும்
மன்னியுங்கள் அப்பொழுது சிறுவன் நான்.
திருவிளையாடல் இசை கே.வி. மகாதெவன் என்று
கேள்விப்பட்டு உடனே
"ஓ, நம்ம எஸ்.பீ.பி.க்கு 'ஆயிரம் நிலவே வா'
பாட்டு போட்டாரே அவரா என்றேன்"
'மழை தருமோ என் மேகம்' என்ற உங்கள்
பாடலைக் கேட்டவுடன்
பித்தாக அலைந்து தேடி அறிந்து, ஷ்யாம்
என்ற உள் வட்டம் மட்டுமே அறிந்திருந்த மேதையை
என் அன்றாட தெய்வங்களில் ஒன்றாக்கினேன்
'தொடுவதென்ன தென்றலோ' கேட்டுத்தான்
ஜி. கே.வி. அவர்களை பரிச்சயம் செய்து கொண்டேன்
'படைத்தானே பிரம்மதேவன்' என்ற பாடலின் தாக்கத்தில்
மெய்மறந்து லயித்துத்தான்
வி.குமார் அவர்களின் உண்மையான தன்மையை புரிந்துகொண்டேன்
'அன்பு மேகமே இங்கு ஓடி வா' என்று நீங்கள்
வருடி அழைக்க, அந்த கிறக்கத்திலேயே
யாரிந்த விஜயபாஸ்கர்? என்று அலசி
அவரது பாடலையெல்லாம்
என் நினைவுப் பக்கங்களில்
மயிலிறகாக்கினேன்
தக்ஷிணாமூர்த்தி அவர்களைத் தெரியாதென்று
யாரும் சொன்னால், 'அட கொடுத்து வைக்காதவனே'
என்று கடிந்து, 'நந்தா நீ என் நிலா' பாடலைப் போடுவேன்.
சிவாஜி ராஜாவைத் தெரியாது என்றால் அங்கே
'சின்ன சின்ன மேகம்' உடனே பொழியும்
இதுபோல் எத்தனையோ...எனக்கும் என் நண்பர்களுக்கும்
உங்கள் படைப்புகள் பிறரை சுட்டிகாட்டும்
கலங்கரை விளக்கமாய் விளங்கி வருகின்றன.
உங்கள் துதியை ஓயாமல் பாட முடியும்
ஆனால் நேரம் எனும் அரக்கன்
என்னை நிறுத்தச் சொல்கிறான்
உங்களுடன் முன்பு ஒரு முத்தான உரையாடல்.
இன்று இன்னொன்று பாக்கியமாக கிடைத்திருக்கிறது...
செர்ரி மலர்களின் நம்பகமே
அவை குறுகிய காலத்தில் தோன்றி மறைந்துவிடும்
அறிய காட்சிதானாம்
ஆனாலும் செர்ரிகளின் மலர்ச்சியை
ஒரு முறை பார்த்தாலே
அது வாழ்வில் நீங்காத பாதிப்பை ஏற்படுத்துமாம்...
அது போலவே உங்கள் தோழமை
எங்களுக்கும் அய்யா.
சாமானியர்களின் வயதைத்தான்
மெழுகை அமர்த்திக் கொண்டாடுவார்கள்
பாடும் நிலாவிற்கு ஒலியாலே ஒளி வீசித்தானே பழக்கம்
அறுபது விளக்குகளை சுற்றிலும் ஏற்றி
இசைக் கார்த்திகையாக
உங்கள் பாடல்களை ஒலித்துக் கொண்டாடினால்தான்
உங்கள் பிறந்தநாளுக்குப் பொருந்தும்
ஆனந்தத்தால் ஆயுள் கூடுமாம்.
எங்கள் ஆயுள்களை அதிகரித்த உங்களுக்கு
ஆயுள் மேலும் பன்மடங்காய் நீடிக்க
வாழ்த்துக்கள்
# 207 சங்க கால அரசி
வழக்கம்போலவே போன வெள்ளி
சந்தைக்கடை அடைத்து சாயங்காலம்
பேருந்து நிலையத்தில் காத்திருக்க
காலம் கடத்திப் போனதென்னை
பல ஆயிரம் வருடங்கள் முன்பு...
ரூபென், ரவி வர்மா வரைந்ததுபோல்
தற்கால மதிப்பீட்டில் அடங்காததோர்
கம்பீரப் பெண்மை கண்முன்னே!
ஆடை ஆபரணம் ஒளி வீசி
ஒப்பணை பொடிகளுடன் மை பூசி
காலத்தை மீறிய காவியம்போல்
சங்ககால அரசியவள் காணக்கண்டேன்
பக்கத்து ஊரிலே நாடகமாம்
நாலைந்து காட்சிகளே இவள் ஆட்சியாம்
பட்டாடை நகைநட்டு அத்தனையும்
சில மணிநேரத்து வாடகையாம்
கொக்கரிக்கும் கோழிகளும் கூடைகளாய் காய்கறியும்
பிரயாணித்த வாகனத்தில் மனிதர்களும் ஏறினோம்
இத்தனை நெரிசலிலே அரசியும் நிற்பதா?
என் இறுக்கை தானத்தில் அரசிக்கு ஆசனம்
அருகில் இருந்தவரை நகரச்சொல்லி வேண்டுதல்
அலுங்காமல் குலுங்காமல் ஏழுமணியாட்டத்திற்கு
இந்த சேவகன் சேர்த்துவிட்டேன்
சங்க கால அரசியை
# 206 காதல் ஐக்கு (Haiku)
ஆண்:
என் காதல் ஐக்கு
வார்த்தை அளந்து வந்தேன்
எண்ணிப்பார்க்கவா
பெண்:
பதினேழுதான்
அய்யா எண்ணிக் கொள்ளுங்கள்
இந்தக் கன்னிக்கும்
ஆண்:
உன்னோடு ஒன்று
எனக்கிங்கு மூவாறு
அன்பே வா அன்பே
பெண்:
கூடும் வயது
கூட்டிப் பார்த்துதான் சொல்லு
காதல் கணக்கு
தனிப்பூவெலாம்
தொடுக்காமலா இங்கு
மலர் மாலைகள்?
ஆண்:
தொடுக்குமுன்னே
அறிவுரையா அன்பே
தொடங்க விடு
பெண்:
மூன்றடியில் நீ
அளந்து வந்தாய் காதல்
உண்மை சொல் இன்று
ஆண்:
கணக்கு செய்தேன்
இன்னும் பொழுதிருக்கு
உன்னை மணக்க