உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, October 22, 2008
# 269 சாமக் கோயில்
மேடையிலிருந்து கூரைவரை
வீற்றிருக்கும் வெள்ளிக் கம்பம்
அதில் கொடி சுற்றி சுழன்றேறும் கிளையாக
கோதையவள் ஆடிடுவாள்
கொஞ்சம் கொஞ்சமாய் தன்னையே
துயிலுரித்து
வாலிபக் கோமான்களும் வயோதிகச் சீமான்களும்
சன்னதியைச் சுற்றி சம்மனிட்டு
அவள் அந்தரங்க அழகை அசைபோட்டு
அர்ச்சனைத் தட்டாகும் உள்ளாடைக்குள்
ஒன்று முதல் நூறுவரை வசதிப்படியோ
வசியத்தின்படியோ
ஒருபாதியாய் மடித்து
நாரில் பூவைக்கும் நளினத்துடன்
நயமாகச் சொருகிடுவார்
அங்குலம் அங்குலமாய் உடை
அங்கே உரித்துவர
கண்ணாடி சீசாக்களில் சாராயம் தீர்ந்துவர
ஊளையிடும் இசைக்கருவி
காமத்தை விசிறிவிட
நுழைவாயில் கட்டணம்
தரிசிக்கும் கட்டணம்
உண்ண உறிஞ்சிட கூடுதல் கட்டணமென்று
தேர்தல் தொகுதியென தோன்றுமளவுக்கு
பணமிங்கே புரலும்
வசூலிக்கும் விடுதிக்கும்
தரிசித்த பக்தருக்கும்
இங்கு தினந்தோரும் திருநாளே
காட்சிப்பொருளான கன்னிக்கோ
கல்லூரி செலவிற்கும்
குடும்பச் செலவிற்கும்
பாலமாக
இந்த மோப்ப நாய்களின்
மத்தியில் மாமிசத் துண்டாய்
தான் நடிப்பதாய் ஏளனம்
"இன்னும் சில நாட்களே"
என்று அவள் மனதில் முனுமுனுக்கும்
இருமாப்பு மந்திரம்
இச்சையை பட்டியலிட்டு
இருட்டுலகில் பதுக்கிவிட்டால்
துன்பமும் இன்பமும்
கொடுக்கல் வாங்கல்
என்று இருதரப்பாய்
பிறிந்துவிடும்
Comments:
Post a Comment
