<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, October 03, 2007
 
# 251 பின்குறிப்பு
சிறகிழந்த தேவதைபோல்
தேடுகிறாள் அவள் சொர்கத்தை
வழி மறந்த வாலிபனோ
பயணத்தை சாடுகிறான்

விதி எறிந்த பகடைக்காய்
அவர் சேர்ந்த வேடிக்கை
வழிப்போக்கர் தங்கும் விடுதி
இணைத்தது அவர் பாதை

விழி கனலாய் கொதி கொதிக்க
பரவசத்தால் புல்லறிக்க

ஒரு முறைதான் அனுமதி அனுமதி
முழு மனதாய் அனுபவி அனுபவி

இழப்பைத்தான் பகிர்ந்து கொண்டார்
இன்னல்களை ஒப்பிட்டு
தற்காலிக தாக்கத்தில்
தணித்ததெல்லாம் தனிமைதான்

இரவல் உறவு இரவே தொடங்கி
விடியுமுன் முழுதாய் முடியும்

ஒரு முறைதான் அனுமதி அனுமதி
முழு மனதாய் அனுபவி அனுபவி

பின்புத்தி அலசுமுன்
இருவரும் எதிர் பாதை
உறவுகளின் ஏட்டிலே
இது வெறும் பின்குறிப்பு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments:
அன்புள்ள உதயா அவர்களுக்கு, என் வணக்கங்கள்.

பல முறை படித்துவிட்டு, பாராட்ட மொழி மறந்து, அமைதியாய் தலை வணங்கிப் போனவள் நான். தமிழ் மீதும் புலமையின் மீதும் சில காலமாய் ஒரு மோகம். ஆர்வமிகுதியில் நானும் சில கிறுக்கல்கள் பதித்துவிட்ட கர்வம் எனக்கு இருந்தது!! உங்களது எழுத்துக்களைப் படித்தவுடன் தலையில் குட்டு விழுந்தது போல் ஒரு உணர்வு.. :)

சிலர் பக்கங்களில் கவிதையில் பாராட்டி வந்தேன்.. சிலர் பக்கங்களில் கவிதையில் வாதாடி உள்ளேன்.. இங்கு தமிழில் எழுதவே ஒரு தயக்கம்!! இருந்தும் இந்த சிறியவளின் முதல் வணக்கம்:

பழகிய தமிழ்
அழகிய மொழி
அன்பரே நின் வரிகளில்
மறந்தது என் வழி

பாதையினை தொலைத்த பின்னும்
தொடர்கிறது என் பயணம்
உன் பக்கங்களில் மட்டும்

வாழ்த்த வயதில்லை
பாராட்ட மொழில்லை
ரசிக்க மணம் உண்டு
வணங்க என் தமிழுண்டு

வணங்குகிறேன்
நின் எண்ணங்களின்
எழிலில் மயங்கியபடி!!
 
கன்யா,
உங்கள் மதிப்பிற்க்கும் உற்சாகத்திற்க்கும் என் நன்றி வணக்கம். ஆனால் இவ்வளவு பாராட்டிற்க்கு நான் அருகதையற்றவன். தமிழில் நான் வளரும் கலைஞன் என்பதே உண்மை. எனக்குள்ள மொழியாற்றலில் எனக்கெட்டியதை எழுதி வருகிறேன். ஒரு கலைஞனின் ஆற்றல் மற்றோரு கலைஞனை ஒருக்காலும் சிறுமை படுத்தாது. ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு சிறப்பு. மலருக்கு மலர் பாகுபாடு இல்லாமல்தானே தென்றல் வீசி வருகிறது.

உங்கள் கலை வாழ்க என்று வாழ்த்தும் ஒரு சக எழுத்தாளன்,
உதயா
 
Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com