# 298 வேண்டும் இன்னொரு பிறவி
இந்தப் பிறவியில் புறக்கணித்த
பாதைகளில் பயணிக்க,
வேண்டும் இன்னொரு பிறவி
சொல்ல நினைத்து தயங்கி
சிறைப்படுத்திய உண்மைகளை சிறகடிக்க
சிந்திய திவலைக்குள் சமத்தாகப் பொருந்தும் நீர் போல் வாழாமல்
காற்றில் கலந்தும் தன் மணம் காக்கும்
முல்லைப்பந்தலின் முகை போல வாழ,
வேண்டும் இன்னொரு பிறவி
பிறர் பார்வைக்கு எனைத்திருத்தாமல்
என் பார்வைக்கு பிறரைத் சுருக்காமல்,
உள்ளதை உள்ளபடி
கிடைத்தது கிடைத்தபடி
வரவேற்று உறவாட,
வேண்டும் இன்னொரு பிறவி
தனி மனித சுதந்திரம் பலியாகித்தான்
பொது நலம் காக்கமுடியுமென்றால்
இருசாரியும் தத்தம் கொள்கைகளை அனுசரித்து மறுபரிசீலனை செய்து
எதிர் வாதத்தை பாதிவழியில்
சமரசம் செய்யும் நிலை காண
வேண்டும் இன்னொரு பிறவி
வெற்றி பெற்றவனின் மை கொண்டு
சரித்திரம் எழுதாமல்
தொல்வியுற்றவனின் தழும்புகளையும்
தவிப்புகளையும் ஏக்கங்களையும்
தவறாமல் சேர்த்தெழுதும் உலகில் வாழ
வேண்டும் இன்னொரு பிறவி
பெரும்பான்மையின் ஊர்வலத்தில்
பங்கேற்காத
செல்வாக்கு ஏணியில்
சீராக உயர்ந்து
சுக போக வாழ்வை சுவைத்து கொண்டிருக்கும் சீமான்கள்
சமரசத் தீயில் சாம்பலாகி
சமத்துவம் போற்றும் நிலை காண
வேண்டும் இன்னொரு பிறவி
