உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, May 08, 2008
# 259 தேர் பாகன்
ஊரெங்கும் நீ உலா வர
நான் உன் லீலைகளின் சாட்சியாகிறேன்
வணங்கும் உயரத்தில் நீ இல்லை என்று
என் நிலையில் பிறர் கூறலாம்
ஆனால் பழிக்கும் உயரத்தில் நான் இல்லை
துணைவனில்லாத குறையில்தான்
துணைக்கு இருப்பவனிடம் மனம் திறந்தாயோ?
சமுதாயம் நமக்கு மறுத்த சமத்துவம்
நீ அயர்ச்சியில் என்னிடம் பகிர்ந்த
உண்மையின் பலவீனத்தில்
பிறந்தது
பல வேடங்கள் சூடும் உன்னிடம்
வாழ்க்கை, தன் வேடம் கலைத்த சோகம் கொடியது
விரக்தியில் நீ சிரிக்கையில்
கைகுலுக்கல் உறவுகளின்
காயத்தைப் புரிந்தேன்
உன் வாழ்க்கையின் விசை
வேகத்திலேயே இருப்பதை
பிறர் அதிசயிக்க
உன் அழகிற்குக் காலக் கட்டணம்
உயர்ந்து வருவதை உணர்ந்தேன்
உனக்குக் காற்றுள்ளபோதே
உன்னை தூற்றிய உலகம்
உன் திரை இறங்கிய பின்னர்
என்ன கூறுமோ?
இருந்தும் தேவதையை ஓட்டிச்செல்லும்
தேர் பாகனே
ஆசை கொள்வதா?
தயங்குகிறேன்...
இது வேலிக்கும் பயிருக்கும்
உள்ள உறவா?
குழம்புகிறேன்...
Comments:
Post a Comment
