உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, July 12, 2006
# 213 கண்ணதாசனுக்குக் கவிச்சாமரம்
நீ, தமிழ்கோவில் தேவர்கள்
உருண்டைபிடித்து உருவாக்கிய
கவிப் பிரசாதம்;
காலம்தோரும் இனிக்கும்
உன் பொருட்சுவையின் சாரம்.
உன் சிந்தனை,
எம் பாடசாலை;
உன் படைப்புகளின் பரிச்சயம்,
என் விழிப்புணர்சிக்கு சேவற்கூவல்;
உன் சொல் வாக்கு,
யாம் சேகரித்த செல்வாக்கு;
உன் இறப்பு,
ஒரு நூலகத்தின் எரிப்பு.
நீ பாத்திரமறியாது பிச்சையிட்ட வெகுளி,
போக்கிடம் இல்லாத படங்களுக்கும்
உன் பாடலின் மேதாவிலாசம் உண்டு.
நீ சந்தர்ப்பம் பார்க்காத அசடு;
கோட்டை ஆண்ட கோமான்களிடம்
அடுத்தவர் வெள்ளைக் கொடி பிடித்து
வெண்சாமரமாய் வீசிவருகையில்
நீ உறுதியுடன் அதில்
வெற்றிலைக் காவி ஏற்றினாய்.
நீ உமிழும் அளவுக்கு
சிறுத்தவன் அல்ல,
பச்சைப் பொய்களுக்கு நீ சிகப்புக் கொடி
பிடித்தாய் என்றே இதற்குப் பொருள்.
உன் உடலை பொழுதுபோக்கியாய்
உபயோகித்த நீ,
உன் சிந்தனையை சேவகத் தேனீ ஆக்கி
சுற்றி அலைந்திருக்கிறாய்.
தமிழ் தேன் கூடு
உன்னால் தட்டு நிறம்பியது,
உன் ரசிகர்கள்தான் ராணித் தேனியாய்
உன் உழைப்பின் பலனை ருசிக்கின்றோம்
தமிழ்தாயின் பிள்ளைகளுக்கு
சொத்துத் தகராரு எதற்கு என்ற சூட்சமம்
அறிந்தவன் நீ.
உனக்கு எதிராக ஒரு படையே
பேனாக்கள் கவிழ்த்த
அவர்களைப் பாரட்டிய பண்பால்
நீ உயர்ந்தாய்;
உனது நட்பால்
அவர்களும் உயர்ந்தனர்
சாடை மாடையாய் கிசுகிசுக்கும் சங்கதிகளை
சங்கடமில்லாமல் மேடை ஏற்றினாய்
உனக்குக் கிடைத்த ஆமோதிப்பு
உண்மைக்கும் கிடைத்தது உண்மை
உன்னை நேசிப்பதே ஒரு புரட்சி
பாசாங்கை ஒழிக்க
அதுவே எளிய ஆயுதம்
கைதேர்ந்த குறுக்குவழி
அலசிப் பார்த்து அறிவு பூர்வமாய் அனுகாமல்
ஏக மனதாய் தவறு என்று கூறி
தடை விதித்த சமுதாயக் கோட்பாடுகளின்
குருட்டு ஆதிக்கத்தை,
பிற்போக்கை,
சுயநலத்தை,
நீ பலவந்தமாக துயிலுறித்த
நவீனக் கண்ணன்.
இச்சைகளின் இம்சையை,
உணர்வுகளின் பிடிவாதத்தை,
சமூகம் அங்கீகரித்த உறவுகளின் பற்றாக்குறையை,
சமுதாயம் சுருட்டி மறைத்த
சிக்கல்களின் இயலாமையை
நீ வாழ்ந்து காட்டிப்பாடம் ஆனாய்.
உன்னையே பதம் பார்த்து,
சூடு போட்டு,
உருக்குலைந்து காவியமானாய்.
எம்மதமும் சம்மதம்
எழுதிவிடலாம் எவரும்.
ஆனால் நீ மதக்காப்பியங்களையே
சிந்தித்து, சேவித்து,
தொழுது, மொழிபெயர்த்து
மதங்களின் விசேட விதங்களையும்
விளக்கிவிட்டாய்.
இதற்கு மேல் என்ன சொல்ல
மொழியில் நான் ஏழை
நீயோ என்றென்றும் எங்களின்
மாசு குறையாத முத்தைய்யா;
உன் படைப்புகளோ
படிக்கப் படிக்க
கேட்கக் கேட்கப்
பெருகிவரும் சொத்தைய்யா.
Comments:
Post a Comment
