<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, April 26, 2004
 
# 91 கலவாத இரு பால்
பெண்:
உரிமையில்லாத உறவுக்காக
உணர்வு ஏனோ துடிக்கிறது
உடைமை என்று ஆனபின்னே
கடமை என்று நினைக்கிறது

ஆண்:
கடிதம் கண்டேன் காதல் கொண்டேன்
சொல்வாய் என நான் எண்ணவில்லை
அகத்தின் நிகழ்வை நகலெடுத்து
எனை சீர்குளைத்ததைச் சித்தரித்தேன்

பெண்:
வாலிபத்தில் காதல், கவிதை
வயோதிகருக்கு வியாதியைப் போல்
காலம் கடந்தால் மறந்துவிடும்
குடும்பம், கடமையில் மறைந்துவிடும்

ஆண்:
செயற்கை, சபலம், பருவம்
எனக் காதலைக் குறைத்துப் பேசுவதேன்?
தகுதி என்ற தராசுகோலை
காதல் தானே உடைக்கிறது?

பெண்:
தனக்கு உள்ள பேராசைகளை
லட்சியமாக்கி மேம்படுத்தி
விருப்பமில்லா பெண்களை
வசியம் செய்யும் வேலையிது

ஆண்:
ஆசாபாசம் பிரதியுபகாரம்
காதலில் இருந்தால் கவிதை ஏது?
எதிர்ப்பு இன்றி எழுச்சி ஏது?
கவலை இன்றி கற்பனை ஏது?

பெண்:
ஏக்கம் இன்றி தாக்கம் ஏது?
துக்கம் இன்றி தர்க்கம் ஏது?
இயல்பின் சரித்திரம் அமைதியானது
தன்னிறக்கம் தெரியாதது

ஆண்:
துணையில்லாத நெஞ்சுக்கெல்லாம்
கவிதை வரியே ஊன்றுகோல்
தோற்றுத் துவண்டு தளர்ந்தவர்
நிமிர்வதற்கே இந்த எழுதுகோல்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com